வெள்ளரி சாகுபடி

மருத்துவ குணமிக்க வெள்ளரி சாகுபடி குறித்து சேரன்மகாதேவி தோட்டக்கலை உதவி இயக்குநர் தி.சு. பாலசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  • ரகங்கள் – கோ 1, ஜாப்பனிஸ் லாங் கிரீன், ஸ்டெரெய்ட் எய்ட், பாயிண்ட் செட்டி.
  • மண் மற்றும் பருவநிலை – வடிகால் வசதியுள்ள, அங்ககச் சத்து நிறைந்த மணல்சாரி வண்டல் மண் மிகவும் ஏற்றது. ஜூன் மாதமும், ஜனவரி முதல் ஏப்ரல் முடிய நான்கு மாதங்களும் விதைப்பதற்கு மிகவும் ஏற்ற காலம்.

விதைப்பு

  • நிலத்தை நான்கு முறை நன்கு உழ வேண்டும். 5 அடி இடைவெளியில் நீளமான கால்வாய்கள் அமைக்க வேண்டும். ஏக்கருக்கு ஒரு கிலோ விதை தேவைப்படும்.
  • ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைகோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் உயிர்ப் பூசணக் கொல்லிகளையோ அல்லது 2 கிராம் கார்பண்டசிம் என்ற ரசாயன பூசணக் கொல்லியையோ கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
  • கால்வாயின் பக்கவாட்டில் 2 அடி இடைவெளியில் விதைகளை ஊன்ற வேண்டும். விதைகளை ஊன்றுமுன் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். பின் வாரத்துக்கு ஒருமுறை நீர்ப் பாய்ச்ச வேண்டும்.

உரமிடுதல் 

  • ஏக்கருக்கு 16 மெட்ரிக் டன் தொழு உரத்தை அடியுரமாக இடவேண்டும். பின் விதைத்த 30ஆம் நாள் ஏக்கருக்கு 14 கிலோ தழைச்சத்து தரவல்ல 30 கிலோ யூரியாவை மேலுரமாக இடவேண்டும்.
  • பின்செய் நேர்த்தி – இரண்டு அல்லது மூன்று முறை களைக்கொத்து கொண்டு களையெடுக்க வேண்டும்.

 பயிர்ப் பாதுகாப்பு: பழ ஈ கட்டுப்பாட்டு முறைகள்:

  • பாதிக்கப்பட்ட பழங்களைச் சேகரித்து அழித்துவிட வேண்டும்.
  •  இந்த பழ ஈக்களின் எண்ணிக்கை வெப்பமான நாள்களில் குறைவாகவும், மழை நாள்களில் அதிகபட்சமாகவும் இருக்கும். எனவே மழைக் காலங்களில் காய்ப்பருவம் வராத வகையில் விதைப்பு தேதியை நிர்ணயித்து விதைப்பு செய்ய வேண்டும்.
  •  நன்கு உழவு செய்து கூட்டுப் புழுக்களை அழிப்பதன் மூலம் பழ ஈ தாக்குதலைக் குறைக்கலாம்.
  • கருவாட்டுப் பொறி – ஒரு பாலித்தீன் பையில் 5 கிராம் நனைந்த கருவாடு, ஒரு மிலி டைகுளோர்வாûஸ பஞ்சில் நனைத்து வைத்து பழ ஈக்களை கவர்ந்து அழிக்கலாம். நனைந்த கருவாட்டை 20 நாள்களுக்கு ஒருமுறையும், டைகுளோர்வாஸ் நனைத்து வைத்த பஞ்சை வாரம் ஒருமுறையும் மாற்ற வேண்டும்.

சாம்பல் நோய் 

  • இதைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீருக்கு அரை கிராம் டினோகாப் அல்லது கார்பண்டசிம் கலந்து தெளிக்க வேண்டும்.
  • எச்சரிக்கை – வெள்ளரிக்கு நச்சாகிப் பயிருக்குத் தீங்கு செய்யும் என்பதால் லிண்டேன் 1.3 சதத்தூள், தாமிர, கந்தகப் பூசணக் கொல்லிகள் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது.

மகசூல்

  •  80 முதல் 90 நாள்களில் ஏக்கருக்கு 4 ஆயிரம் கிலோ வரை மகசூல் எடுக்கலாம்.
  • எனவே வெள்ளரி சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் உரிய பருவங்களில் குறிப்பிட்ட தொழில்நுட்பங்களைக் கடைப்பிடித்து நல்ல லாபம் பெறலாம் என்றார் அவர்.

நன்றி: தினமணி 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *