விவசாயிகள் மண்ணின் தன்மையை அறிந்து உரமிட்டால், உரச் செலவு குறையும் என்றார் புதுதில்லியில் உள்ள இந்திய உரக் கூட்டமைப்பு மேலாளர் முனைவர் பி.சி. பிஸ்வாஸ்.
பெரம்பலூர் அருகேயுள்ள சத்திரமனை கிராமத்தில், ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையம், இந்திய உரக் கூட்டமைப்பு சார்பில், சிறிய வெங்காய விவசாயிகளுக்கு மண் வள மேம்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டோர் கூறியவை:
- தாவர வளர்ச்சிக்கு தழை, மணி, சாம்பல் சத்துகள் அதிகளவில் தேவைப்படுவதால், இவை பேரூட்டச் சத்துகள் எனப்படுகின்றன.
- இவற்றை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தாமல், மண்ணில் தன்மையைக் கண்டறிந்து அளிப்பதன் மூலம், உரச் செலவைக் குறைக்க முடியும்.
- மேலும், நோய் எதிர்ப்புத் தன்மையை பெறவும் விளை பொருள்களுக்கு நல்ல நிறம், தரம் கிடைக்க துத்தநாகம், இரும்பு, போரான், கால்சியம், மக்னீசியம், தாமிரம் ஆகிய நுண்ணூட்டச் சத்துகள் அவசியம். எனவே, இவற்றைக் குறைந்த அளவில் இட்டு, நிறைவான பலனைப் பெறலாம்
- விவசாயிகள் தங்களது நிலங்களில் தொடர்ந்து ஒரே பயிரைச் சாகுபடி செய்வதால், மண்ணின் சத்துக்கள் குறையும். இதைச் சீரமைக்க, விவசாயிகள் ரசாயன உரங்களை நிலத்தில் இடுகின்றனர். பெரும்பாலான விவசாயிகள் பேரூட்டச் சத்துகளை வழங்கக்கூடிய யூரியா, டி.ஏ.பி, பொட்டாஷ், அம்மோனியம் சல்பேட், சூப்பர் பாஸ்பேட் மற்றும் கலப்பு உரங்களையே அதிகம் இடுகின்றனர்.
- நுண்ணூட்டச் சத்துகள் மண்ணிலிருந்து குறைந்து கொண்டே வருவதால், பயிர்கள் எளிதாக நோய்த் தாக்குதலுக்குள்ளாகின்றன. இவற்றை நிவர்த்தி செய்ய, நுண்ணூட்ட உரங்களையும் அளிப்பது அவசியம்.
- மேலும், சிறிய வெங்காயத்துக்கு நுண்ணூட்ட உரங்களை நிலத்திலும், இலை வழியாகவும் அளிக்கும் முறைகளையும் பின்பற்ற வேண்டும் என்றார் அவர்.
- மண்ணில் அங்கக எருக்களை இடுவதன் மூலமாகவும், பசுந்தாள் உரப் பயிர்களான சணப்பை, அவுரி, தக்கைப் பூண்டு ஆகியவற்றை வளர்த்து, மடக்கி உழவு செய்வதன் மூலமும் மண்ணில் நன்மை செய்யும் உயிரிகள் அதிகமாவதோடு, மணல் பாங்கான நிலங்களில் மண்ணின் நீர்பிடிப்புத் தன்மையும் அதிகமாகும்
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்