“மண் பரிசோதனை செய்வதன் மூலம் மண்ணில் ஏற்கனவே உள்ள சத்து எவை என அறிந்து, தேவையான அளவு உரமிட்டு, உரச் செலவை குறைக்க முடியும்’ என, வேளாண் துணை இயக்குனர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
- மண்ணின் தன்மை அறிந்து பயிர் தேர்வு செய்ய மண் பரிசோதனை உதவுகிறது. மண்ணின் கார அமில தன்மையை அறிந்து பயிரிட கூடிய நிலமாக, மண்ணை சீரமைக்க மண் பரிசோதனை செய்ய வேண்டும்.
- மண் பரிசோதனையின் மூலம் மண்ணில் ஏற்கனவே உள்ள சத்துக்கள் எவை என அறிந்து, தேவையான அளவு மட்டும் உரமிட்டு உரச் செலவை குறைக்கலாம்.
- மண்ணில் இல்லாத சத்துக்கள் எவை என்பதை அறிந்து, அதற்கேற்ப உரமிடுதல் வேண்டும்.
- பயிர் அறுவடைக்கு பின், அடுத்த பயிர் சாகுபடிக்கு முன், உரமிடுவதற்கு முன் ஆகிய தருணங்களில் மண் பரிசோதனை செய்ய வேண்டும்.
- வயல் அல்லது வரப்பு ஓரங்களில் மண் பரிசோதனைக்கு எடுக்கக் கூடாது.
- மர நிழலில் உள்ள மண்ணை எடுக்கக் கூடாது.
- மண் மாதிரி எடுக்கும் முன் மேற்பரப்பில் உள்ள இலை, சருகு போன்ற இதர பொருட்களை நீக்க வேண்டும்.
- ஒரு ஏக்கரில், 10 முதல் 15 இடங்களில் “வி’ வடிவில் ஆறு அங்குலம் ஆழத்துக்கு மண்ணை வெட்டி, ஒரு பக்கம் அரை அங்குலம் அளவுக்கு மண்ணை கரண்டி மூலம் சேகரம் செய்ய வேண்டும்.
- வெவ்வேறு தன்மையுள்ள மண்களாக இருந்தால், தனித்தனியாக மண்மாதிரி எடுக்க வேண்டும்.
- சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகள் மூன்று நாட்களுக்கு நிழலில் உலர்த்த வேண்டும்.
- நிலத்தில் பல இடங்களில் எடுத்த மண் மாதிரிகளை நாற்பகுப்பு முறையில் கலந்து, இறுதியாக அரை கிலோ மண் மாதிரி சேகரித்து எடுத்து துணிப்பையில் இட வேண்டும்.
- மண் பரிசோதனை கட்டணமாக, மண் மாதிரி ஒன்றுக்கு, 10 ரூபாய்க்கு சலான் எடுத்து மண் பரிசோனை நிலையத்துக்கு வேளாண் அலுவலர் மூலம் அல்லது நேரடியாக மண் மாதிரியை சேர்க்க வேண்டும்.
- மண் பரிசோதனை முடிவுகளை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ பெற்று சிபாரிசு செய்யப்பட்டுள்ள அளவின்படி, பேரூட்டச் சத்துகளை நுண்ணூட்டச் சத்துகளையும் நிலத்திலிடுவதன் மூலம் அதிக மகசூல் பெறலாம்.
மண் பரிசோதனையால், நிலத்தில் உள்ள சத்துக்களின் அளவு, பற்றாக்குறை, நிலத்தின் கார அமிலத்தின் தன்மை அளவு, நிலத்தில் உள்ள அங்கப் பொருட்களின் அளவு ஆகியவற்றை அறிய முடியும்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்