காய்கறிகள், பழங்கள் மீதிருக்கும் ரசாயனங்களை நீக்கும் இயற்கை கரைசல்

ரசாயன உரம் பற்றி நம்மில் பலருக்கும் தெரிவது இல்லை என்றே சொல்லலாம். ரசாயனம் என்பது பூச்சிக்கொல்லி என்று சொல்லாமல் பூச்சி மருந்து எனச் சொல்லி மக்களிடம் விளக்கப்பட்டதே இதற்குக் காரணம்.

அதிக நாட்கள் பழங்களைக் கெடாமல் வைத்திருக்கப் பல ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. காய்கறிகள் கெடாமல் இருக்கவும் கடைகளில் வைத்தே ரசாயனங்கள்  பூசப்படுகின்றன. ரசாயனங்களைத் தவிர்க்க பெரும்பாலான வீடுகளில் காய்கறிகளை இரண்டு முறைக்கு மேல் கழுவுவது வழக்கமாக உள்ளது. இதனால் முழுமையாக ரசாயனங்கள் பழத்தின் தோலில் இருந்து நீங்கிவிடுமா என்பதும் கேள்விக்குறிதான். இதற்காகத்தான் சந்தையில் அறிமுகமாகியுள்ளது, கிரீன் வாஷ் எனும் கரைசல். இதனைத் தயாரித்து வரும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமாரிடம் பேசினோம்.

கிரீன் வாஷ் கரைசல்

“இன்று பெரும்பாலும் காய்கறிகளைப் பதப்படுத்த ரசாயனத்திற்குள் முக்கி எடுப்பதும் பழங்கள் மற்றும் காய்கறிகள் மேல் ரசாயனங்களைத் தூவுவதும் வாடிக்கையாக உள்ளது. இதை எல்லாம் சாப்பிடும் மக்களின் நிலை என்ன ஆகும்? காய்கறிகள் மற்றும் பழங்களின் மேல் தடவப்படும் ரசாயனங்கள் மனித உடலில் நஞ்சாகக் கலந்து நாளடைவில் மனிதர்களுக்குப் பல நோய்களை உண்டாக்குகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே மதிப்புக் கூட்டல் பொருட்களான எலுமிச்சை சாறு, கிரீன் காபி ஆகியவை தயாரித்து வருகிறேன். அதன் தொடர்ச்சியாகக் கிரீன் வாஷ் என்ற கரைசலைத் தயாரித்தேன். இதை மருத்துவர் மற்று பயிர்ப்பதனீட்டுக் கழகம் எனப் பல சோதனைகளுக்கு உட்படுத்தினேன். அனைத்து சோதனைகளிலும் காய்கறிகளின் மேற்புறம் இருந்த ரசாயனங்களை அகற்றியது. என் தோட்டத்தில் இருந்து இயற்கையாகக் கிடைக்கும் எலுமிச்சைச் சாற்றை மூலப்பொருளாகப் பயன்படுத்தி ‘கிரீன் வாஷ்’ கரைசலைத் தயாரிக்கிறேன். இது, ரசாயன உரம், பூச்சிக்கொல்லி என வீரியமிக்க ரசாயனப் படிமானங்களையும் எளிதாக நீக்கி விடுகிறது.

வெறும் தண்ணியில் காய்கறிகளைக் கழுவினால் அதன் மீது படிந்துள்ள ரசாயனங்கள் எளிதில் காய்கறியை விட்டு அகலாது. காய்கறிகளை அலசுவதற்கு என்றே சந்தையில் பெரும்பாலான கரைசல்கள் கிடைக்கின்றன.

ஆனால், அக்கரைசலையே சில ரசாயனங்களைப் பயன்படுத்தித்தான் தயார் செய்கிறார்கள். நான் தயாரிக்கும் கரைசல், இயற்கை முறையிலானது. எலுமிச்சைச் சாறு, உப்பு, வினிகர் மூன்றும்தான் மூலப்பொருட்கள். இக்கரைசலைப் பயிர் பதனீட்டுக்கழக ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பிச் சோதனை செய்து சான்றிதழ் வாங்கியிருக்கிறேன். காய்கறிகளின் மேல் உள்ள ரசாயனங்களை மூன்று நிமிடத்திலேயே அகற்றி விடுகிறது.

இதனை உபயோகிக்கும் கைகள் முதல் காய்கறிகள் வரை எதற்கும் பாதிப்பில்லை. அரை லிட்டர் தண்ணீருக்கு 10 மி.லி என்ற அளவில் கிரீன் வாஷை பயன்படுத்தலாம். கிரீன் வாஷைத் தண்ணீரில் இரண்டு நிமிடங்கள் அலசியோ, ஊறவைத்தோ காய்கறிகளை மற்றொரு பாத்திரத்தில் போட்டு நன்னீரால் கழுவ வேண்டும். அப்போதுதான் ரசாயனங்கள் முழுமையாக வெளியேறும். காய்கறிகளைக் கழுவும்போது பழங்களும், காய்கறிகளும் வெட்டப்படாமல் இருக்க வேண்டும்” என்றார்.

கிரீன் வாஷ்

காய்கறிக்கு வெளியே இருக்கும் ரசாயனங்களை நீக்கிவிட்டாலும் உள்ளே இருக்கும் ரசாயனங்களையும் பூச்சிக் கொல்லியையும் நீக்க முடியுமா என்ற கேள்வியை முன்வைத்தோம். இதற்குப் பதிலளித்த செந்தில்குமார், “காய்கறிக்குள்ளும் ரசாயனங்களும் பூச்சிக் கொல்லிகளும் இருப்பது உண்மைதான். ஆனால், என்னுடைய முதல் கட்ட ஆராய்ச்சியில் இயற்கையான முறையில் காய்கறிகளின் மீது தடவப்படும் ரசாயனங்களை நீக்க வழி கண்டுபிடித்திருக்கிறேன். கிரீன் வாஷிலேயே காய்கறிகள் ஓரளவிற்குச் சுத்தமாகிவிடும். உள்ளே இருக்கும் ரசாயனங்களை நீக்க இனிமேல்தான் கண்டுபிடிக்க வேண்டும். விரைவிலேயே அதற்கான தீர்வையும் கொடுக்கிறேன்” என்கிறார், நிதானமாக.

மதிப்புக் கூட்டல் தொழில் செய்து வரும் செந்தில் இயற்கை விவசாயி என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி: விகடன்

தொடர்பு கொள்ள – http://www.supernaturales.in


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *