இயற்கை விவசாயத்தில் சாதித்த பெண் விவசாயி

மானாவாரி எனப்படும் வானவாரி வேளாண்மை மிகவும் கடினமானது மட்டுமல்ல, நிச்சயமற்றதும்கூட.எதிர்பார்ப்புக்கு மாறாக மழைப்பொழிவு குறைந்துவிட்டால், விளைச்சல் கிடைக்காது. இதைச் சமாளிக்க நமது முன்னோர் நாட்டுரக விதைகளை, அதாவது வறட்சியைத் தாங்கும்தன்மை கொண்ட விதைகளைப் பயன்படுத்தினர். ஆனால், பசுமைப் புரட்சிக்குப் பின்னர் வீரிய விதைகள் என்ற பெயர் கொண்ட தாக்குப்பிடிக்காத விதைகள், அதாவது வறட்சியைத் தாங்க முடியாத விதைகள் வந்தன. விளைவு போதிய மழை பெய்யாதபோது, பயிர்கள் கருகிப் போயின.

வேளாண்மைக்கு அரசின் ஆதரவு பொதுவாகவே குறைவு, அதுவும் மானாவாரி வேளாண்மைக்கு மிக மிகக் குறைவு. இப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில், நமது உணவில் புரதச்சத்துத் தேவையை மானாவாரி நிலங்களே 55 சதவீதம் இன்னும் பூர்த்தி செய்துவருகின்றன. இப்படிப்பட்ட மானாவாரியில், இயற்கை வேளாண்மையில் சாதித்துவருகிறார் ஒரு பெண் விவசாயி.

வசதியின்றியும் சாதிக்கலாம்

இயற்கைவழி வேளாண்மையிலும் பல பெண்கள் முன்னோடியாக உள்ளனர். அவர்களில் நாகஜோதியும் ஒருவர். `பணக்காரப் பண்ணையாளர்கள் மட்டும்தான் இயற்கை வேளாண்மை செய்ய முடியும்’ என்ற கருத்தைத் துணிச்சலாக முறியடித்தவர் இவர். மதுரை மாவட்டம் தே. கல்லுப்பட்டி அருகில் உள்ள சுப்புலாபுரம் என்ற சிற்றூரைச் சேர்ந்த இவர், தன்னுடைய நிலத்துக்குப் பாசன வசதி ஏதும் இல்லாத நிலையில் இதைச் சாதித்துள்ளார்.

கடந்த 15 ஆண்டுகளாக வேளாண்மையில் இவர் ஈடுபட்டு வருகிறார். பத்தாம் வகுப்புவரை படித்துள்ளார். இவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் படித்து வருகின்றனர். இவருடைய குடும்பத்துக்கு எட்டரை ஏக்கர் மானாவாரி நிலம் சொந்தமாக உள்ளது. இவரும் இவருடைய கணவரும் தொடர்ந்து அதில் விவசாயம் செய்துவருகின்றனர்.

இரண்டு ஏக்கர் பரிசோதனை

பசுமைப் புரட்சியின் தாக்கம் இவர்களையும் விட்டுவைக்கவில்லை. அதிக விளைச்சல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வேதி உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வந்துள்ளார் நாகஜோதி. முதலில் விளைச்சல் கூடியதுபோல் தென்பட்டாலும், பிறகு தொடர்ந்து படிப்படியாகக் குறையத் தொடங்கியது. நிலம் கடினத்தன்மை அடைந்தது.

உரம், பூச்சிக்கொல்லி வாங்குவதற்கு அதிகப் பணம் செலவானது. விவசாயம் கட்டுப்படியாகாத சூழ்நிலை ஏற்பட்டது. அப்போதுதான் தமிழக உழவர் தொழில்நுட்பக் கழகம் போன்ற அமைப்புகளின் மூலம் இயற்கைவழி வேளாண் உத்திகளை அறிந்துகொண்டு, நாகஜோதி பயன்படுத்தத் தொடங்கினார்.

வியந்துபோன விவசாயிகள்

முதலில் இரண்டு ஏக்கர் நிலத்தில் தொழு உரம், மண்புழு உரம், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியம் போன்ற இயற்கை உரங்களைப் பயன்படுத்தினார். உளுந்து, பாசிப்பயறு, பருத்தி பயிர் செய்தார். இவரே பூச்சிவிரட்டிகளை தயாரித்து, கைத்தெளிப்பான் மூலம் பயிர்களில் தெளித்தார். இதன் விளைவுகளை அந்த ஆண்டே பார்க்க முடிந்தது. நிலத்தில் களை அதிகம் இல்லை, இடுபொருள் செலவு குறைந்தது, விளைந்த பயறுகள் எல்லாம் திரட்சியாக இருந்தன.

அந்த ஆண்டு பயிர்களைப் பூச்சிகள் தாக்கவில்லை. இவருடைய அண்டை அயலார் இதைப் பார்த்து வியந்தனர். அவர்களால் நம்பமுடியவில்லை. வெளியூரில் இருந்தெல்லாம் பார்க்க வந்திருக் கிறார்கள். இரண்டாம் ஆண்டிலேயே ரசாயன வேளாண்மையைவிட, இயற்கை வேளாண் முறையில் அதிக விளைச்சலை எடுத்துவிட்டார்.

பருத்தி அதில் ஊடுபயிராகக் குதிரைவாலி, துவரை என்று பலவிதமான மானாவாரிப் பயிர்களை இவர்கள் பயிரிட்டுவருகின்றனர். வேளாண்மை பணி இல்லாத காலங்களில், தனது விளைபொருட்களுக்கு மதிப்பு கூட்டி, முறுக்கு போன்ற பண்டங்களாக மாற்றி விற்பனை செய்கிறார். வேதி வேளாண்மை, இயற்கை வேளாண்மை இரண்டுக்கும் இடையிலான வரவு – செலவு கணக்கை இவர் வைத்துள்ளார். அதிலிருந்து இயற்கை வேளாண்மை எப்படி லாபம் ஈட்டுவதாக உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்

ஆனால், இத்தனையும் இருந்தும் இவருடைய கடின முயற்சிக்கு அரசின் ஆதரவு இதுவரை கிடைக்கவில்லை.

எதில் செலவு குறைவு?

நாகஜோதி தனது பண்ணையத்தின் வரவு செலவு மதிப்பைக் கணக்கிட்டுள்ளார். இரண்டு ஏக்கர் நிலத்தில் இயற்கை வழி வேளாண்மை விவரம் (2010-ம் ஆண்டு கணக்கு):

செலவு

மண்புழு உரம் (500 கிலோ x ரூ. 4)- ரூ. 2000, அசோஸ்பைரில்லம் (82 பாக்கெட் x தோராயமாக ஒரு பாக்கெட் விலை ரூ. 6) – ரூ. 510,தொழுவுரம் (2 டிராக்டர் வாடகை ரூ. 250)- ரூ. 250 (குப்பை இவரிடமே இருந்ததால் குப்பைக்குப் பண மதிப்பு இல்லை), களை எடுப்பு – ரூ. 600, அறுவடைச் செலவு – ரூ. 250, சொந்த உழைப்பு ( 2 ஏக்கர்) – ரூ. 500, உழவுச் செலவு – ரூ. 1000

மொத்தச் செலவு – ரூ. 5110

வரவு

பாசிப்பயறு (300 கிலோ x ரூ.30) – ரூ. 9000,உளுந்து (200 கிலோ x ரூ.28) – ரூ. 5600,பருத்தி (300 கிலோ x ரூ. 20) – ரூ. 6000

மொத்த வரவு – ரூ. 20600

செலவு போக நிகர வருமானம் ரூ. 15,490

மீதமுள்ள 6 ஏக்கர் நிலத்தில் வேதி வேளாண்மையில் கிடைத்த வருமானம் பற்றியும் இவர் கணக்கிட்டுள்ளார்.

செலவு

உழவுச் செலவு – ரூ. 3000, டி.ஏ.பி. உரம் (7 மூடை x ரூ. 510) – ரூ. 3570, மேல் உரம் – ரூ. 300, பூச்சிக்கொல்லி – ரூ. 5000, களை எடுப்பு – ரூ. 10000, அறுவடை செலவு – ரூ. 2100, டிராக்டர் வாடகை – ரூ. 750, 3 முறை வண்டி ஏற்று கூலி, இறக்கு கூலி – ரூ. 150, சொந்த உழைப்பு ( 6 ஏக்கர்)- ரூ. 1500

மொத்தச் செலவு ரூ. 26,370

வரவு

உளுந்து (300 கிலோ x ரூ.30) – ரூ. 9000, பருத்தி (1000 கிலோ x ரூ.20) – ரூ. 20000, மொச்சை (200 கிலோ x ரூ.20) – ரூ. 4000

மொத்த வரவு ரூ. 33000

நிகர லாபம் ரூ. 6630

இயற்கை வழி வேளாண்மையில் ஏக்கர் ஒன்றுக்குச் சராசரியாக இவர் எடுத்த வருமானம் ரூ. 7745. வேதிமுறை வேளாண்மையில் ஏக்கருக்குச் சராசரியாக ரூ. 1105. எனவே, இயற்கை முறையில் ஏறத்தாழ 7 மடங்கு லாபம் கிடைப்பது தெரிகிறது. அத்துடன் மண் வளமும் அதிகரிக்கிறது.

நாகஜோதி

விவசாயி நாகஜோதியைத் தொடர்புகொள்ள: 08110084453

நன்றி: ஹிந்து

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *