ஒருங்கிணைந்த பண்ணையம் தரும் லாபம்

தமிழகம் முழுவதும் தென் மேற்கு பருவமழைக்கு முன் கடும் வறட்சி நிலவியது. அதிக தண்ணீர் பயன்படுத்தி விளைவிக்கப்படும் நெல், கரும்பு பயிர்களுக்கு பதிலாக மானாவாரி சாகுபடிக்கு விவசாயிகள் கவனம் திரும்பியது.
எனினும் சிறிய நிலப்பரப்பில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து விவசாயத்தில் அதிக லாபம் ஈட்டும் யுக்திகளை விரல் விட்டு எண்ணும் சில விவசாயிகள் மட்டும் மேற்கொள்கின்றனர்.

Courtesy: Dinamalar

ஒருங்கிணைந்த பண்ணையம்
மதுரை மாவட்டம் குலசேகரன்கோட்டை கிராமத்தை சேர்ந்த முன்னோடி விவசாயி டி.என்.சேகர் தனது 6.5 ஏக்கர் தரிசு நிலத்தை இயற்கை உரங்களால் வளமிக்க பூமியாக மாற்றினார்.

அங்கு கறவை மாடு, ஆடு, நாட்டுக்கோழி பண்ணைகள் அமைத்தார். கறவை மாடுகளுக்கு தேவையான ‘கோ-5’ புல் ரகங்களை வளர்க்கிறார்.

கத்தரிக்காய் முதல் புடலங்காய் வரை அனைத்து காய்கறிகளை விளைவிக்கிறார். மா, கொய்யா, வாழை என ஒருபுறம் மரமாக நின்று பலனளிக்கிறது. இவையாவும் இயற்கை முறையிலேயே வளர்ப்பது கூடுதல் சிறப்பு. பூச்சிகளை கட்டுப்படுத்த இயற்கை பூச்சி விரட்டி திரவங்களை கண்டு பிடித்து கட்டுப்படுத்துகிறார். ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து நாள், வாரம், மாதம், ஆண்டு என வருவாயை பிரித்து லாபம் ஈட்டி வருகிறார்.

கால்நடைகள் விரும்பும் ‘அல்வா’
டி.என்.சேகர் கூறியதாவது:

  • மக்காச்சோளம், பார்லி, கோதுமையை பிளாஸ்டிக் டிரேயில் வைத்து ஊற வைக்க வேண்டும்.
  • எட்டாவது நாள் முளைகட்டிய செடியாக பருமனாக இருக்கும். டிரே ஒன்றில் 350 கிராம் கோதுமை அல்லது மக்காச்சோளம் இடலாம்.
  • முளைகட்டிய பின் ‘டிரே’ ஒன்று 8 கிலோ எடையில் இருக்கும்.
  • இவற்றை கறவை மாடுகள், ஆடுகள் அல்வா போல் விரும்பி உண்ணும். பால் கறவையும் கூடுதலாக இருக்கும்.
  • பந்தலிலே பாகற்காய்… தரையிலே பீர்க்கங்காய்… என நாட்டு பாகற்காய், பீர்க்கங்காய் பயிரிட்ட 45 நாளில் இருந்து வருவாய் கிடைக்கிறது.
  • காய்கறிகள் மூலம் நாள் வருமானம். வாழை இலை மூலம் வார வருமானம். தேங்காய் மூலம் மாத வருமானம். மா மூலம் ஆண்டு வருமானம் என காலத்திற்கு ஏற்ப வருமானம் ஈட்டுவதால் விவசாயப் பணிகள் தொய்வின்றி தொடர்கிறது.
  • மனித இனத்திற்கு உணவளிக்கும் கலையை கையாளும் விவசாயிகளை வேளாண் விஞ்ஞானிகள் என அழைத்து வருகிறோம். வாடிப்பட்டி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் அமைத்து இயற்கை முறையிலான விவசாயம் செய்ய எமது ‘நா – காந்தம்’ ஒருங்கிணைந்த பண்ணையத்தில் முறையான பயிற்சி அளிக்கிறோம்.
  • பசு மாடு சாணம், கோமியம், பால், தயிர், நெய் கலவையில் ‘பஞ்சகாவ்யம்’ தயாரித்து இயற்கை உரம் தயாரிக்கிறோம்.
  • திராட்சை ரசம், கரும்புச்சாறு, கம்மங்கூழ், இளநீர், வாழைப்பழம் கலவையில் ‘தசகவ்யம்’ தயாரித்து இயற்கை உரமாக பயன்படுத்துகிறோம். வேப்ப எண்ணெய் மூலம் பூச்சிகளை விரட்டுகிறோம்.
  • பூச்சிகளை கொல்வது இயற்கை வேளாண் ஆகாது. இயற்கை முறையில் விளைவிப்பதால் விவசாயம் அமோகமாகவும், கூடுதல் லாபகரமாகவும் உள்ளது என்றார்.

தொடர்புக்கு 09842188778 .
– கா.சுப்பிரமணியன், மதுரை.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *