கனடாவில் ஐ.டி. வேலை இந்தியாவில் இயற்கை வேளாண்மை!

விவசாயம் இந்தியாவின் முதுகெலும்பு என்று சொல்லும் நம் நாட்டின் எதிர்காலத் தூண்கள் என்று இளைஞர்களும் மாணவர்களும் அழைக்கப்படுகிறார்கள். ஆனால் தூண்களுக்கும் முதுகெலும்புகளுக்குமான இடைவெளி அதிகரித்துக்கொண்டே போகிறது. விவசாயம், இளைஞர்கள் என இரு தரப்பையும் நாம் சேர்த்து வைத்துப் பார்ப்பதில்லை.

இந்தச் சூழலில், விவசாயம் முதியவர்களுக்கான தொழில் என்ற மாயப் பிம்பத்தை உடைத்து நொறுக்கியிருக்கிறார் திருச்சியைச் சேர்ந்த சதீஷ்குமார். திருச்சி திருவெறும்பூரை சேர்ந்த சதீஷ்குமார் கனடாவில் ஐ.டி. கம்பெனியில் பணிபுரிகிறார். மாதம் இரண்டு லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்கும் அவர் சராசரி ஐ.டி. ஊழியராக இருக்கவில்லை. மாறாக, மூன்று ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்கிறார். அதுவும், நமது பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் இயற்கை விவசாயம்.

விவசாயமே இலக்கு

இந்தியாவில் ஐ.டி.யில் வேலை பார்ப்பவர்களே ஆன்சைட்டுக்கு ஆசைப்படும்போது, தனது வயலைப் பராமரிப்பதற்காகக் கனடாவிலிருந்து சமீபத்தில் ஊருக்கு வந்திருந்தார் சதீஷ். இயந்திர வாழ்க்கையிலிருந்து இயற்கை வாழ்வுக்குத் திரும்பியது குறித்து அவர் கூறும்போது, ‘தஞ்சைக்கும் திருச்சிக்கும் இடையில் உள்ள சின்ன ஊர் திருவெறும்பூர். அங்குதான் பிறந்து வளர்ந்தேன். இன்றைக்குத் திருவெறும்பூர் தொழிற்சாலைகள் நிறைந்த ஊராக அறியப்படுகிறது. ஆனால், 20 ஆண்டுகளுக்கு முன்பு திருவெறும்பூர் பொன் விளையும் பூமியாகத்தான் இருந்தது.

ஐப்பசி, கார்த்திகையில் எங்கள் வீட்டைச் சுற்றிப் பச்சை போர்த்தியதுபோல் நெல்மணிகளைத் தாங்கி பயிர்கள் வளர்ந்து நிற்கும். அன்றைக்குக் கதிர் அறுத்த இடங்களில், இன்றைக்கு ராட்சத இயந்திரங்கள் இரும்பு அறுக்கின்றன. இந்த மாற்றம் நிகழ்ந்தபோது பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தேன். அப்போதே விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் துளிர்விட்டிருந்தது. கல்லூரி காலத்தில் அந்த எண்ணம் ஆசையாகவும், பணிக்குச் சேர்ந்த பின்பு இலக்காகவும் மாறியது.

Courtesy: Hindu
Courtesy: Hindu

ஐ.டி. துறையில் வேலைக்குச் சேர்ந்து கை நிறைய சம்பளம் வாங்கினேன். ஆனால், எனது இலக்கு விவசாயம்தானே. அதற்காகப் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளைப் படித்தேன். நம்மாழ்வாரின் கொள்கைகள் மீது பெரிய ஈர்ப்பு ஏற்பட்டது. இயற்கை விவசாயம் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்தேன்” என்று விவசாயத்துக்குள் நுழைந்த கதை குறித்து அறிமுகம் தருகிறார் சதீஷ்.

வங்கிக் கடன், தண்ணீர் அற்ற ஆறுகள் என உள்ளூர் விவசாயிகள் விழிபிதுங்கி நிற்கும்போது, கனடாவில் இருந்துகொண்டு தமிழகத்தில் விவசாயம் செய்வது எப்படிச் சாத்தியமானது என்று கேட்டபோது, ‘விவசாயம் செய்வது என்று முடிவானதும் என் மனைவியிடம் சொன்னேன். ரொம்பவே குதூகலமானார்.

வீட்டில் மற்றவர்கள் சரிப்பட்டு வருமா என்று யோசித்தார்கள். எனது பிடிப்பையும் ஈடுபாட்டையும் கண்டு அவர்களையே ஒரு கட்டத்தில் ஊக்குவிக்க ஆரம்பித்துவிட்டார்கள். என்னைப் போன்ற மனநிலையில் இருந்த வடிவழகன், சென்னையில் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறார். எனது பால்யக் கால நண்பன் எட்வர்டு ஜோன்ஸ், எனது தம்பி ராம் என இயற்கை விவசாயப் படை ஒன்று உருவானது.

முதற்கட்டமாக ரூபாய் மூன்று லட்சத்துக்குத் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே மூன்று ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்தோம். அந்த மண்ணை எடுத்துப் பரிசோதித்துப் பார்த்தபோது, ரசாயன உரம் பயன்படுத்தப்பட்டிருந்ததால், இயற்கையாக இருக்கும் தாதுகள் அனைத்தும் அற்றுப் போயிருந்தன. இதையடுத்து நிலத்துக்கு எருவூட்ட முடிவு செய்தோம். இதற்காக நாட்டு மாடு ஒன்றை ரூ. 50 ஆயிரத்துக்கு வாங்கினோம். நிலம்கூட எளிதில் கிடைத்தது. ஆனால், கலப்படம் இல்லாத நாட்டு மாடுகள் இன்றைக்குச் சொற்ப அளவில்தான் உள்ளன ஜல்லிக்கட்டு காளைகள் ‘பீப்’ கறியாக மாறி வரும் நிலையில், இயற்கை விவசாயத்தைப் பேண நாட்டு மாடுகளைக் காப்பாற்ற நிச்சயம் காப்பாற்றியாக வேண்டும்.

தையில் அறுவடை

விவசாயத் திட்டம் குறித்து ஸ்கைப் மூலம் நாங்கள் அடிக்கடி கலந்தாலோசித்தோம். ஐ.ஆர். 8, ஆந்திரா பொன்னி என்று ஏதேதோ பெயர்களில் அரிசியை உண்டு, பிறகு ஆஸ்பத்திரியைத் தேடி அலையும் நாம், பாரம்பரிய நெல் வகைகளான மாப்பிள்ளைச் சம்பா, கிச்சிலி சம்பா போன்றவற்றைத் தொலைத்துவிட்டோம். அதனால் மாப்பிள்ளைச் சம்பா பயிரிடுவது என முடிவு செய்து அண்மையில் நாற்று நட்டோம்.

அந்தக் காலத்தில் பெண்ணைத் திருமணம் செய்யக் கல்லைத் தூக்கவோ, காளையை அடக்கவோ சொல்வார்கள். அதற்குத் தயாராகும் ஆண்கள், ஒருவகை சம்பாவைச் சாப்பிடுவார்கள், அதுதான் மாப்பிள்ளைச் சம்பா. அந்த அளவுக்கு அதில் ஊட்டச்சத்து நிறைந்திருக்கும்’ என்று மாப்பிள்ளைச் சம்பாவின் புகழ்பாடும் சதீஷ் குழுவினர் வரும் தையில் அறுவடை செய்ய இருக்கிறார்கள்.

அடுத்து ஒருங்கிணைந்த பண்ணை

என்ன உரங்களைப் பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்டபோது, ‘இயற்கை வழி உரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மீன் கழிவு, நாட்டு மாட்டின் சாணத்தில் உருவான எரு, நாட்டுச் சர்க்கரை போன்றவற்றை உரமாகப் பயன்படுத்திவருகிறோம்.

மீன் கழிவுகளை மீன் மார்க்கெட்டுக்குச் சென்று வாங்குகிறோம். மீன் வாங்குகிற இடத்தில் கழிவுகளை வாங்கும் எங்களை மார்க்கெட்டில் பலரும் ஒரு மாதிரிப் பார்ப்பார்கள். ஆனால், மீன் கழிவையும், நாட்டு மாட்டின் எருவையும் பயன்படுத்தி இட்ட உரத்தால் எங்கள் பயிர் இன்றைக்கு இரண்டு அடி உயரத்துக்கு வளர்ந்துள்ளது. இதைப் பார்க்கும் பக்கத்து வயல்காரர்கள், ‘எந்த கடையில உரம் வாங்குனீங்க.. என்ன கம்பனி உரம்’ என்று கேட்கிறார்கள். அவர்களிடம் இயற்கை விவசாயம் பற்றி விளக்குகிறோம்.

உண்மையிலேயே இன்றைக்குப் பஞ்சம் வந்தால் இயற்கை வழி விவசாயத்தின் மூலம் பொதுமக்களுக்கு உணவு கிடைக்காதுதான். அந்த நிலையை மாற்றவே இந்த முறையைக் கையில் எடுத்து, எங்களால் முடிந்தவரை இயற்கை விவசாயத்தைப் பரவலாக்க முயற்சிக்கிறோம். என் சம்பளத்தில் தேவைக்குப் போக முழுக்க முழுக்க இயற்கை விவசாயத்துக்கே செலவிடுகிறேன். விரைவில் கடலை பயிர் செய்ய இருக்கிறோம். கூடுதல் இயற்கை உரம் தேவைப்படும் என்பதால் ஒரு ஜோடி நாட்டு வண்டி மாடுகளை வாங்க இருக்கிறோம்’ என்று சொல்லும் சதீஷ், ஒருங்கிணைந்த இயற்கை விவசாயப் பண்ணையை உருவாக்குவதுதான், தன்னுடைய ஒரே எண்ணம் என்கிறார் மனஉறுதியுடன்.

சதீஷை தொடர்புகொள்ள:sathish.n@live.ca
வடிவழகன் தொடர்புக்கு: 09962723389

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *