நம்ம ஊர் நம்மாழ்வார்கள்

இயற்கை வேளாண்மையை மீட்டெடுக்கத் தன்னையே விதையாக்கிக் கொண்ட நம்மாழ்வாரின் முதலாண்டு நினைவு நாள் சமீபத்தில் முடிந்தது. அதையொட்டிப் பெரம்பலூரில் நடந்த இயற்கை வேளாண் ஆர்வலர் நிகழ்வில் உள்ளூர் ‘நம்மாழ்வார்கள்’ கவுரவிக்கப்பட்டனர்.

நிகழ்ச்சி அரங்கில் நுழைந்தவுடன் முதலில் ஈர்த்தது இயற்கை வேளாண் விளைபொருள் கண்காட்சிதான். உள்ளூர் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் சிறுதானிய, காய் கனி, மூலிகை, பயிர் ரகங்கள் கண்காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தன. அத்துடன் இயற்கை பூச்சி விரட்டி, இயற்கை உரம், பஞ்சகவ்யம் போன்ற நுண்ணுயிர் ஊட்டங்கள், பயிர் ஊக்கிகள், விதைகள், சூழலுக்கு நட்பான துணிப்பை போன்றவையும் வைக்கப்பட்டிருந்தன.

Courtesy: Hindu
Courtesy: Hindu

அவல் உப்புமா, சோளப் பிரியாணி, முளை கட்டிய தானியம், தினைப் பொங்கல், பிரண்டை, துளசி சாறுகள், சிறு தானிய இனிப்பு உருண்டைகள் நாவுக்கு விருந்தளித்தன. துணிப் பதாகை, மண் விளக்கில் இலுப்பை எண்ணெய் தீபம், நம்மாழ்வாருக்குக் காய் கனி படையல் என்று மொத்த ஏற்பாடும் இயற்கையைப் போற்றுவதாக இருந்தது.

அனுபவப் பகிர்வு

பெரம்பலூர் மாவட்ட இயற்கை வேளாண் முன்னோடிகள் கவுரவிக்கப்பட்ட பின், அவர்கள் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டது தான் நிகழ்ச்சியின் சிறப்பம்சம். இயற்கை வேளாண்மை என்ற சவாலைத் தைரியமாக எதிர்கொண்டு செயல்படும் தங்களைப் போன்ற பலரும் இருக்கிறார்கள் என்ற பெருமிதம், அந்த எளிய விவசாயிகளின் பேச்சில் தெரிந்தது.

ஒரே மாவட்டத்தில் செயல்பட்டும், தனித் தனித் தீவுகளாக இயங்கிக்கொண்டிருந்த இவர்களைச் சூழலியல் செயல்பாட்டாளர் ரமேசு கருப்பையா, 6 மாதத் தேடல் மூலம் ஒரே கூரைக்குள் கொண்டுவந்திருந்தார். இந்த உழவர்களில் பெண்களும் பொறியியல் கல்லூரி மாணவர்களும் இடம்பெற்றிருந்தது பெரிய ஆச்சரியம்.

பாரம்பரிய மீட்டெடுப்பு

தொடர்ந்து குழுவாய் இயங்குவது, முன்னோடிகளின் வயல்களில் செயல்விளக்கம் அளிப்பது, ஆர்வமுள்ளவர்களுக்கு நேரடி பயிற்சி அளிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. அரும்பாவூர் கிச்சிலி சம்பா, இருங்கு சோளம், சிவப்புச் சோளம் போன்ற மண்ணின் பெருமைக்குரிய, வழக்கொழிந்த பயிர் ரகங்களை மீட்பது, இப்பகுதிக்கே உரிய உள்ளூர் கால்நடை ரகங்களை மீட்டெடுப்பது என்று இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

“சுவாசிக்கும் காற்று, தண்ணீர், மண் என அனைத்தும் நஞ்சாகும் சூழலில் வாழ்கிறோம். இந்தப் பின்னணியில் உள்ளூர் இயற்கை விவசாயிகளை ஒருங்கிணைத்து, நஞ்சாக்கப்பட்ட நிலத்தையும், நோயால் அவதிப்படும் மக்கள் நலத்தையும் மீட்டெடுப்பதற்கான முயற்சி இது. நம்மாழ்வார் விட்டுச்சென்றதை, முன்வைத்த செயல்பாடுகளை அவரவர் ஊரிலேயே மீட்கும் இந்த முயற்சி, நிச்சயம் பலன் தரும் என்று நம்புகிறோம்” என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ரமேசு கருப்பையா. ‘இயற்கை வேளாண் இயக்கம்’ என்ற குடையின் கீழ் செந்தமிழ்வேந்தன், சதீஷ், மாதேஸ்வரன் ஆகியோர் இவருடன் இணைந்து பணிபுரிகின்றனர்.

நம்மாழ்வார் சிறந்த விதையானது போலவே, எதிர்காலத்தில் இந்த விவசாயிகளும் பெரும் விருட்சமாவார்கள் என்பதற்கான அறிகுறி தெளிவாகவே தென்பட்டது. அப்படிப் பல விதைகள் இந்த நிகழ்ச்சியில் ஊன்றப்பட்டுள்ளன.

ரமேஷ் கருப்பையா தொடர்புக்கு: 09444219993

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *