எலுமிச்சை சாகுபடியில் பயிர்ப் பாதுகாப்பு முறைகள்

தற்போது நிலவி வரும் தட்பவெப்ப நிலை காரணமாக,எலுமிச்சையில் அதிக மகசூல் கிடைக்கிறது. அதே நேரத்தில், 15 வகையான பூச்சிகளின் தாக்குதலால், எலும்ச்சையில் பெரும் சேதமும் ஏற்பட்டு வருகிறது. இலையைக் குடையும் புழு, சில்லிட் ஒட்டுப் பூச்சி, அசுவிணி, கறுப்பு ஈ மற்றும் தாவர நூல் புழுக்களின் தாக்குதலால், எலும்ச்சை செடிகள் சேதமடைந்துள்ளன.

இலையைக் குடையும் புழுவானது,இளம் இலைகளைக் குடைந்து புறத் தோல்களுக்கு இடையிலான திசுக்களை உள்கொண்டு சேதத்தை விளைவிக்கிறது. அதிகம் தாக்கப்பட்ட இலைகள் பலவித நெளிவு, வளைவுகளுடன் காணப்படுவதோடு, இலைகள் காய்ந்து, சிறுத்து, செடியின் நுனி வளர்ச்சி குன்றுவதுடன், பூக்கள் சரிவரப் பூப்பதில்லை.

சில்லிட் ஒட்டுப் பூச்சிகள் கூட்டம் கூட்டமாக இருந்து கொண்டு இளம் கிளைகள், துளிர் இலைகள், மொட்டுகள், பூக்கள் உள்ளிட்ட பாகங்களில் இருந்து சாற்றை உறிஞ்சி அதிக சேதம் விளைவிக்கின்றன. ஒட்டிப்பூச்சிகள் அதிகம் தாக்கப்பட்ட குருத்துப் பகுதிகள் காய்ந்துவிடும். மேலும் இலைகள் சுருண்டும், நெலிந்தும் காணப்படும்.

இந்தப் பூச்சிகளைத் தொடர்ந்து, அசுவிணி மற்றும் கறுப்பு ஈ அதிகமாகத் தாக்கி சேதத்தை ஏற்படுத்துகிறது. இந்தப் பூச்சிகள், தேன் போன்ற திரவத்தைச் சுரப்பதால், இலைகள் பிசுபிசுப்புடன் காணப்படும்.

இதனால், இலைகள் கருமையாகமாறி, கரும்படல நோயைத் தோற்றுவிப்பதோடு, ஒளிச்சேர்க்கையும் தடைபட்டு, மகசூல் குறைந்து வருகிறது. மேலும் இந்தப் பூச்சிகள் டிரிடிசா என்ற வைரஸ் நோயையும் பரப்புகின்றன.

அடுத்ததாக தாவர நூல் புழுக்கள் எலும்ச்சையின் வேர்களில் இருந்து கொண்டு திசுக்களை உள்கொள்வதால் மரத்தின் நுனி வாடி மேலிருந்து கீழாகக் காய்ந்து காணப்படும். இந்தத் தாக்குதலில் விவசாயிகள் தனிக் கவனம் செலுத்த வேண்டும்.

இப்போது குறைந்தபட்சம் ஒர் எலும்ச்சை பழம் ரூ-2க்கு விற்கும் நிலையில் எலுமிச்சையில் சரியான பாதுகாப்பு முறைகளை விவசாயிகள் கையாளுவதால் அதிக லாபம் பெறலாம்.

  • எலுமிச்சை செடிகளைப் பாதுகாக்க நல்ல காற்றோட்டம் அவசியம்.
  • தழைச்சத்து அதிகமாக இடுவதைத் தவிர்க்க வேண்டும்.
  • களைகள் இல்லாமல் நன்கு பராமரிக்க வேண்டும்.
  • சரியான பதத்தில் நீர்ப் பாய்ச்ச வேண்டும்.
  • வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லிகளை ஒட்டும் திரவம் கலந்து 15 நாள்கள் இடைவெளியில் 3 முறை தெளிக்க வேண்டும்.
  • மரத்துக்கு மரம் வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும்.
  • மேலும் ஒட்டுப் பொறிகளை ஒர் ஏக்கருக்கு 5 வீதம் வைத்து தாய் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்க வேண்டும்.
  • நன்மைசெய்யும் எதிர் உயிர் பூச்சி மற்றும் பூஞ்சாணங்களை அதிகமாப் பெருகவிட வேண்டும்.
  • நெருக்கமாக இருக்கும் செடிகளைச் சரியான இடைவெளிவிட்டு நடவு செய்ய வேண்டும்.
  • பூச்சிகளின் பாதிப்பு பொருளாதாரச் சேத நிலையை தாண்டும் போது ரசாயனப் பூச்சிக் கொல்லியான அசிபேட் மானோகுரோட்டாபாஸ், டைமீத்தையோட், மாலத்தியான், இம்மிடாகுளோ பிரிட் போன்ற மருந்துகளில் ஏதாவது ஒன்றை ஓர் லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி என்ற அளவில் ஒட்டும் திரவத்துடன் கலந்து செடிகளைச் சுற்றி நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும். தாவர நூல் புழுக்களின் சேதம் இருக்கும்போது குருணை மருந்து இட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் எலும்ச்சை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அதிக மகசூல் பெறலாம்.
  • மேலும் இதுதொடர்பான தொழில் நுட்பங்கள் தேவையெனில் தொழில்நுட்ப வல்லுநர் சி.சங்கர், தந்தை ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி : M.S.சுவாமிநாதன் நிறுவனம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “எலுமிச்சை சாகுபடியில் பயிர்ப் பாதுகாப்பு முறைகள்

  1. ஆதம்ஷாலோடி says:

    பயன் உள்ளது பயன்படுத்திகொள்கிரேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *