2 ஏக்கர்… 2,63,000 ரூபாய் லாபம் தரும் எலுமிச்சை!

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த புருஷோத்தமன் இயற்கை முறையில் எலுமிச்சைச் சாகுபடி செய்து வருகிறார். கோவில்பட்டி, குருமலையிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது ஊத்துப்பட்டி கிராமம். அங்குள்ள தோட்டத்தில் அறுவடை செய்த எலுமிச்சைப் பழங்களைச் சந்தைக்கு அனுப்பும் பணியி லிருந்தவரை ஒரு காலைவேளையில் சந்தித்தோம். “முதல்ல இந்த எலுமிச்சை ஜூஸைக் குடிங்க. உடம்பு கொஞ்சம் குளுந்தாப்புல இருக்கும்’’ எனச் சொல்லி ஒரு டம்ளர் எலுமிச்சை சாற்றைக் கொடுத்தார்.

நாம் குடித்த பிறகு, ‘‘ஜூஸ் எப்புடி இருக்கு? நம்ம தோட்டத்துப் பழம்யா. ஒரு பழத்துல எவ்வளவு சாறு இருக்குன்னு பார்த்தியளா?” எனச் சொல்லிச் சிரித்தவர், எலுமிச்சை தோட்டத்துக்குள் அழைத்துச் சென்றார். நடந்தபடியே பேசத் தொடங்கியவர், ‘‘பக்கத்துல இருக்குற காளாம்பட்டிதான் என்னோட சொந்த ஊரு. தாத்தா காலத்துல கம்பு, சோளம், குதிரைவாலி, பருத்தினு மானாவாரி விவசாயம் செஞ்சாங்க. அம்மா, அப்பா ரெண்டு பேருமே பள்ளிக்கூட வாத்தியாருங்க. அதனால தாத்தாவோட விவசாயம் நின்னு போச்சு.

நான் ஐ.டி.ஐ பிட்டர் முடிச்சிருக்கேன். ஆனா, அது சம்பந்தமான வேலைக்குப் போக விருப்பம் இல்ல. கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்துல என்னை இணைச்சுக்கிட்டு வேலை செஞ்சேன். கேந்திரம் மூலமா கிராமங்கள்ல இலவச மருத்துவ முகாம்கள் நடக்கும். அதை ஒருங்கிணைக்குறதுதான் என்னோட வேலை.

எலுமிச்சையுடன் புருஷோத்தமன்

எலுமிச்சையுடன் புருஷோத்தமன்

தற்சார்பு கற்றுக்கொடுத்த கேந்திரம்

‘எல்லாத்திலும் தற்சார்பு வேணும். ஒரு மனுஷன் தற்சார்பா இருக்கப் பழகிட்டா போதும், அவன் வாழ்க்கையில ஜெயிச்சிடு வான்’ இதைச் சொல்லிக் கொடுத்தது கேந்திரம்தான். அதேபோல விவசாயத்திலயும் தற்சார்பு முறையை விவசாயிகளுக்கு எடுத்துச் சொல்லிட்டு வர்றேன்.

எனக்கு சின்ன வயசுல இருந்தே விவசாயத்துல ஆர்வம். அதனால, வேற எந்த வேலைக்கும் போகாம விவசாயத்தையே செய்யலாம்னு நினைச்சேன். ‘இப்படித்தான் இயற்கை விவசாயம் செய்யணும்’ங்கிற எந்த யோசனையும் இல்ல. பக்கத்துல இருக்கிற சில விவசாயிகளோட தோட்டத் தைப் போய்ப் பார்த்தேன். அவங்க ஒவ்வொருத்தர்கிட்ட இருந்தும் பல விஷயங் களைத் தெரிஞ்சுகிட்டேன். ஆனா, ரசாயன உரமோ, பூச்சிக்கொல்லியோ பயன் படுத்தக்கூடாதுங்கிறதுல ரொம்ப உறுதியா இருந்தேன்.

தாத்தா காலத்துல, மானாவாரி நிலத்துல மழைக்கு முன்ன, ஆட்டுக்கிடை போட்டு மண்ணை வளமேத்துவாங்க. இறவை நிலம்னா மட்கிய மாட்டுக்குப்பையை (மாட்டு தொழுவுரம்) அடியுரமாப் போடு வாங்க. பூச்சித்தாக்குதல், நோய்த்தாக்கு தலைக் கட்டுப்படுத்த பசுமாட்டுச் சிறுநீர்ல பலவகை மூலிகைகளை ஊறப்போட்டு வடிகட்டி வேப்பங்கொலையால பயிர்கள் மேல தெளிப்பாங்க. அதேபோல அடுப்புச் சாம்பலையும் தூவுவாங்க. இதை நான் சின்ன பிள்ளையா இருக்கும்போது பார்த்திருக்கேன். அப்ப விவசாயம் செழிச்சது. மகசூலும் பெருகுச்சு. பசுமைப் புரட்சிக்குப் பிறகுதான் ரசாயன உரத்தால மண்ணெல்லாம் மலடாப் போச்சு” என்றவர், சற்று ஆசுவாசப் படுத்திக்கொண்டு தனது எலுமிச்சைச் சாகுபடி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

எலுமிச்சைத் தோட்டம்

எலுமிச்சைத் தோட்டம்

“நிலத்தை மூணு, நாலு தடவை உழுது, ஆட்டுக்கிடை போட்டு ஆறவிட்டு, மட்கிய தொழுவுரம் போட்டு மண்ணை வளப் படுத்தினேன். என்ன பயிரைச் சாகுபடி செய்யலாம்னு யோசனையில இருந்தேன். எலுமிச்சைச் சாகுபடி செஞ்சா ஓரளவு வருமானம் பார்க்கலாம்னு நண்பர்கள் சொன்னாங்க. முன்னோடி இயற்கை விவசாயி புளியங்குடி அந்தோணிசாமியைப் போய்ப் பார்த்தேன். முதல்ல அவரோட எலுமிச்சைத் தோட்டத்தைச் சுத்திக் காட்டினாரு.

பூ, பிஞ்சு, காய், பழம்னு எல்லா நிலையிலயும் எலுமிச்சை மரங்க செழிப்பா இருந்துச்சு. அதைப் பார்த்ததுமே ‘எலுமிச்சை யில எறங்குனா ஜெயிச்சிடாலாம்’னு நம்பிக்கை வந்துச்சு. ‘ஒட்டுக்கட்டின கன்னு வேணுமா? விதையில இருந்தது முளைக்க வச்ச கன்னு வேணுமா’ன்னு கேட்டாரு அந்தோணிசாமி. ‘ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்’னு கேட்டேன்.

எலுமிச்சைப் பழங்கள்

எலுமிச்சைப் பழங்கள்

ஒட்டுக் கன்று, விதைக் கன்று

என்ன வித்தியாசம்?

‘ஒட்டுக்கன்னு ரெண்டரை வருஷத்துல காய்ப்புக்கு வந்துடும். விதையில முளைக்க வெச்ச கன்னு காய்ப்புக்கு வர நாலு வருஷ மாகும். ஒட்டுக்கன்னைவிட விதைக்கன்னு மூலமா வளர்ந்த எலுமிச்சை மரங்களோட வேர்கள் படர்ந்து வளரும். இதனால 30 வருஷம் வரைக்கும் காய்க்கும்’னு ரெண்டுக்குமான வித்தியாசத்தைச் சொன்னாரு. உடனே நான் விதைக்கன்னைத் தேர்வு செஞ்சேன். இது மொத்தம் 5 ஏக்கர் நிலம். 2 ஏக்கர்ல எலுமிச்சை காய்ப்புல இருக்கு. ஒரு ஏக்கர்ல ‘தைவான் பிங்க்’ ரகக் கொய்யா கன்னுகளை நட்டு மூணுமாசம் ஆகுது. 2 ஏக்கர் நிலத்துல எலுமிச்சை நடவு செய்ய நிலத்தைத் தயார்படுத்தி வெச்சிருக்கேன்” என்றவர், வருமானம் பற்றிப் பேசினார்.

15,800 கிலோ மகசூல்

“ரெண்டு ஏக்கர்ல 210 மரங்கள் இருக்கு. இன்னும் கூடுதலா மரம் வைச்சா, சூரிய ஒளி, காற்று போதுமான அளவுக்கு கிடைக்காது. அதனால விளைச்சலும் கூட குறையும் இப்போ ரெண்டாவது வருஷமா பழம் பறிச்சுகிட்டு இருக்கேன். வருஷத்துல 7 மாசம் காய்ப்பு அதிகமா இருக்கும். போன வருஷம் 15,800 கிலோ பழம் கிடைச்சது. அதுல 3,000 கிலோ வரை சேதமாயிடுச்சு. அதைக் கழிச்சுட்டு, 12,800 கிலோ பழத்தை விற்பனை செஞ்சேன். குறைஞ்சபட்சம் ஒரு கிலோ 8 ரூபாய்ல இருந்து அதிகபட்சமா 120 ரூபாய் வரைக்கும் விலை போச்சு. சராசரியா கிலோ 30 ரூபாய் கணக்குல 3,84,000 ரூபாய் வருமானமாக கிடைச்சது. இதுல செலவு 1,20,600 ரூபாய். அதைக் கழிச்சு 2,63,400 ரூபாய் லாபமாக கிடைச்சது’’ என்றவர் நிறைவாக,

செலவு-வரவு கணக்கு

செலவு-வரவு கணக்கு

எலுமிச்சையைத் தங்கப்பழம்னே சொல்லலாம்

‘‘அடுத்தடுத்த வருஷங்கள்ல காய்ப்பு அதிகரிக்கும். இனிமே, பராமரிப்புச் செலவு மட்டும்தான். அறுவடை செய்யுற பழங்களைத் திருநெல்வேலி, சங்கரன்கோவில், புளியங் குடியில இருக்கச் சந்தைகள்லதான் விற்பனை செய்றேன். இயற்கை முறையில சாகுபடி செஞ்ச பழம்கிறதுனால தனி விலையெல்லாம் கிடையாது. வியாபாரிகளுக்கு எல்லாமே ஒண்ணுதான். நஞ்சில்லாத பழத்தை விக்கிறோம்ங்கிற திருப்தி ஒண்ணுதான் நமக்கு. எலுமிச்சையை ‘தங்கப்பழம்’னும், தொடர் வருமானம் தர்றதுனால பணப்பயிர்னுகூடச் சொல்லலாம். தண்ணி தட்டுப்பாடான சூழ்நிலையில, குறைஞ்ச தண்ணியைப் பயன்படுத்தி எலுமிச்சை மூலம் நஷ்டமில்லாத வருமானம் பார்க்கலாம்” என்றபடியே விடை கொடுத்தார்.

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

2 ஏக்கரில் எலுமிச்சைச் சாகுபடி செய்வது குறித்துப் புருஷோத்தமன் கூறிய தகவல்கள் பாடமாக இங்கே…

எலுமிச்சை நடவு செய்வதற்குச் செம்மண், கரிசல் மண் ஏற்றது. மழைக்கு முன்பாக நடவு செய்வது சிறந்தது. கார்த்திகை மாதம் ஏற்றது. நடவு செய்வதற்கு ஒன்றரை மாதத்துக்கு முன்பே உழவுப் பணிகளைத் தொடங்க வேண்டும். 10 நாள்கள் இடைவெளியில் மூன்று முறை உழவு செய்ய வேண்டும். செடிக்குச் செடி, குழிக்குக்குழி 20 அடி இடைவெளியில் ஒன்றரை அடி சதுரத்தில் 210 குழிகள் எடுக்க வேண்டும். இந்த இடைவெளி விடுவதால், களை எடுப்பது எளிதாகும்.

அறுவடை

அறுவடை

பசைப் பதத்தில் கடலைப் பிண்ணாக்கு

குழியை ஒரு வாரம்வரை ஆறவிட வேண்டும். 20 கிலோ மட்கிய தொழுவுரம், 50 கிராம் வேப்பம்பிண்ணாக்கை மேல் மண்ணுடன் கலவையாக்கிக் கன்று வைத்து மண் அணைத்து, தண்ணீர் விட வேண்டும். 3 மாதங்கள் வரை மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர் பாய்ச்சி வந்தாலே போதும். 3 மாதங்களுக்குப் பிறகு, பசைப் பதத்தில் கடலைப்பிண்ணாக்குக் கரைசலைக் கன்றின் தூரில் தண்ணீர் விழும் இடத்தில் ஒரு டப்பா ஊற்றி, அதன் மீது 100 கிராம் வேப்பம் பிண்ணாக்கைத் தூவிவிட வேண்டும் (ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் கொள்ளளவுள்ள பிளாஸ்டிக் டிரம்மில் 100 கிலோ கடலைப் பிண்ணாக்கு போட்டு, முக்கால் டிரம் அளவுக்குத் தண்ணீர் கலந்து கலவையாக்கிக்கொள்ள வேண்டும்). 6 மாதங்கள் வரை தண்ணீர் மட்டும் பாய்ச்சி வந்தாலே போதும். தேவைக்கு ஏற்ப களை எடுத்துக்கொள்ளலாம்.

7-ம் மாதத்தில் 200 லிட்டர் தண்ணீரில் 10 லிட்டர் மாட்டுச்சிறுநீர் கலந்த கரைசலை 15 நாள்களுக்கு ஒருமுறை பாசன நீரில் கலந்துவிட வேண்டும். 10-ம் மாதத்தில் செடியின் இரண்டு புறத்திலும் முக்கால் அடி தூரத்தில் குழி எடுக்க வேண்டும். ஒவ்வொரு குழிக்குள்ளும் ஒரு சட்டி தொழுவுரத்தைப் போட வேண்டும். தொடர்ந்து 4 மாதத்துக்கு ஒருமுறை இப்படித் தொழுவுரம் வைக்க வேண்டும். செடியில் தளிர் விடத் தொடங்கும்போது கம்பளிப்புழுத் தாக்குதல் ஏற்படும். இதோடு இலைகளில் சுருட்டு, இலைகளில் பழுப்பு ஆகியவை தென்பட்டால், 20 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரில் 10 கிலோ சீமைக்கருவேல இலைகளைப் போட்டு 10 நாள்கள் வரை ஊற வைக்க வேண்டும். பிறகு வடிகட்டி, 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி சீமைக்கருவேல இலைக்கரைசலைக் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.

இதைத் தெளித்தால் நல்ல பலன் கிடைக்கும். மூன்றரை வருடத்தில் காய் காய்க்கத் தொடங்கும். நான்காவது ஆண்டிலிருந்து நல்ல மகசூல் எடுக்கலாம். இந்தப் பராமரிப்பு முறை மட்டுமல்லாமல், பயிர் வளர்ச்சி ஊக்கியாக 6-ம் மாதத்திலிருந்து 15 நாள்களுக்கு ஒருமுறை 200 லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பாசன நீரில் கலந்து விடலாம். 20 நாள்களுக்கு ஒருமுறை 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி பஞ்சகவ்யா கலந்து தெளிக்க வேண்டும். பூச்சி மற்றும் நோய்த்தாக்குதலுக்கு 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி மூலிகைப் பூச்சிவிரட்டி கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.

சில்வர் கரண்டி

சில்வர் கரண்டி

பழம் பறிப்பை எளிதாக்கும் சில்வர் கரண்டி

பழம் பறிப்பை எளிதாக்க சில்வர் கரண்டியைப் பயன்படுத்தி வருகிறார் புருஷோத்தமன். அதைப் பற்றிப் பேசியவர், “எலுமிச்சைச் செடிகள்ல இருந்து பழங்களைப் பறிக்கப் பொதுவா, ‘தொரட்டி’யைத்தான் (நீண்ட மூங்கில் கம்புவின் நுனியில் கயிற்றால் கட்டப்பட்டிருக்கும் கத்தி போன்ற இரும்பு வளைவுக் கம்பி) பயன்படுத்துவாங்க. தொரட்டி வெச்சுப் பழங்களை இழுக்கும்போது, தொரட்டி கம்பி கிளைகள்ல பட்டு இலைகள், பூக்கள், பிஞ்சுகள் உதிர்ந்துடும். அப்படிப் பறிக்குறப்ப பழங்களும் மரத்துக்கு அடியில விழுந்திடும். அதை எடுக்கும்போது, கைகள்ல முள்ளு குத்தும். இதைத் தவிர்க்க மூங்கில் கம்பு நுனியில பெரிய சில்வர் கரண்டியை வெச்சு ரெண்டு இரும்பு போல்ட் போட்டு இறுக்கிட்டேன். சில்வர் கரண்டியோட நடு நுனிப்பகுதியில, பழத்தை இழுக்க வசதியா சிறிய ஓட்டை அமைச்சிருக்கேன். இதை வெச்சுப் பழத்தை இழுக்கும்போது கரண்டி குழிக்குள்ள பழம் விழுந்திடும். அப்படியே மரத்துக்கு அடியில விழுந்தாலும் அதே கரண்டியால வெளியே இழுத்துடலாம். கிளையில முள்ளுக்கு நடுவுல பழம் சிக்கிக்கிட்டாலும் சுலபமா வெளியே எடுத்துடலாம்” என்றார்.

தொடர்புக்கு, புருஷோத்தமன்,

செல்போன்: 9944088172


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *