70 சென்ட்..ஆண்டுக்கு ரூ.3,15,000.. எலுமிச்சை சாகுபடி சாதிப்பு

ஒரு எலுமிச்சை மரம் என்ன செய்யும்? வீட்டுக்குத் தேவையான எலுமிச்சைப் பழங்களைக் கொடுக்கும்.

ஆனால், அதுவே ஒரு விவசாயியை லட்சாதிபதியாக மாற்றினால், அவர் அதைக் கடவுளாக எண்ணிக் கும்பிடுவார் அல்லவா? அப்படி எலுமிச்சை மரத்தைக் கடவுளாக எண்ணி, மரத்துக்கு மஞ்சள் பொட்டு வைத்துக் கும்பிட்டு வருகிறார் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி என்.கே.‘பூ’முத்து. தருமபுரி-பென்னாகரம் சாலையில் இருக்கிறது நாகதாசம்பட்டி. அந்த ஊரில் பூ முத்து என்று கேட்டால் நிலத்துக்கு வழி சொல்கிறார்கள். நாம் சென்றிருந்தபோது அவரது மகன் முத்துகுமார் வந்து நம்மை அழைத்துச்சென்றார்.

மகசூல்: 70 சென்ட்... ஆண்டுக்கு ரூ.3,15,000... ஏற்றம் கொடுக்கும் எலுமிச்சை!

எலுமிச்சை அறுவடை பணியிலிருந்த முத்துவைச் சந்தித்தோம். இன்முகத்தோடு வரவேற்றவர், “எனக்குப் பூர்வீகம் இதே ஊர்தான். 4 ஏக்கர் நிலமிருக்கு. அதுல ஒரு ஏக்கர்ல எலுமிச்சை இருக்கு. மீதி நிலம் மானாவாரிங்கறதால நிலக்கடலை, சோளம்னு போட்டுட்டு வர்றோம். முன்னெல்லாம் மொத்த நிலமும் மானாவாரி நிலமாத்தான் இருந்துச்சு. மழை பெய்ஞ்சா பயிர் வெச்சிடுவோம். மானாவாரி விவசாயங்கிறதால வேலை அவ்வளவா இருக்காது. நேரம் அதிகமா இருந்ததால தெருக்கூத்து ஆடப் போயிடுவேன். ஒருகட்டத்துல கிணறு வெட்டித் தண்ணி கிடைச்சது. அதுக்குப் பிறகு மல்லிப் பூ விவசாயத்த ஆரம்பிச்சேன். மல்லி விவசாயத்துல வருமானம் இருந்தாலும் வேலை அதிகம். பூ அறுவடை செஞ்சு பெங்களூருக்கு நானே எடுத்துட்டு போவேன். அந்த நேரத்துலதான் என்னோட நிலத்துல, எலுமிச்சைச் செடி ஒன்னு, தன்னால வளர்ந்து வந்துச்சு. அப்போ தெரியாது, அது என் வாழ்க்கையை மாற்றிப் போடும்னு. அது வளர்ந்து காய்க்க ஆரம்பிச்சதும், அறுவடை செஞ்சு வீட்டுக்கும் அக்கம் பக்கத்துல இருந்தவங்களுக்கும் கொடுத்தேன். ருசி நல்லா இருக்கிறதா சொன்னாங்க. மரத்தைப் பார்த்தா முழுக்கவே நல்லா காய்ச்சிருந்தது. பழங்களும் திரட்சியா நல்லா சைனிங்கா இருந்துச்சு.

அறுவடை செய்த எலுமிச்சைக் காய்களுடன் பூ முத்து

அறுவடை செய்த எலுமிச்சைக் காய்களுடன் பூ முத்து

அந்த மரத்திலிருந்து விண்பதியன் முறையில கன்றுகள உற்பத்தி செஞ்சு முதல்ல 70 சென்ட்ல போட்டேன். அதுல நல்ல வருமானம் கிடைக்கவும் இப்போ இன்னும் 30 சென்ட்ல போட்டு 1 ஏக்கர்ல எலுமிச்சை இருக்கு. எனக்கு 75 வயசாகுது. 50 வயசு வரைக்கும் பலவிதமான விவசாயத்தைப் பாத்துட்டேன். அதுக்குபிறகுதான் எலுமிச்சை விவசாயத்துக்கு வந்தேன். இதுல கிடைச்ச வருமானம் வேறு எதுலயும் கிடைக்கல” என்று எலுமிச்சை குறித்துப் பெருமை பொங்கியவர் தொடர்ந்தார்.

தனது நிலத்தில் தானாக வளர்ந்த தாய் எலுமிச்சை மரத்துடன்

தனது நிலத்தில் தானாக வளர்ந்த தாய் எலுமிச்சை மரத்துடன்

“எலுமிச்சை வருஷம் முழுக்கக் காய்க்கும். கோடைக்காலமான ஏப்ரல், மே, ஜூன்ல பழச்சாறு கடைகளுக்கு நிறைய போகும். அந்த நேரத்துல மகசூல் குறைவாத்தான் இருக்கும். ஆனா, விலை கூடுதலா இருக்கும். ஆடி மாசம் அம்மன் விழாக்கள், ஆவணி மாசத்துல ஆயுத பூஜைனு எப்படியும் எலுமிச்சைக்கு ஒரு நல்ல விலை கிடைச்சுகிட்டே இருக்கும். எலுமிச்சை மரத்துக்கு வெள்ளாட்டு எரு நல்ல ஊட்டமா இருக்கு. ஒரு ஏக்கருக்கு எருப்போட நாலு வெள்ளாடுகள் போதும். இதுக்காகவே வெள்ளாடுகளை வளர்த்துட்டு வர்றேன். இதோடு 2 நாட்டு மாடுகளையும் வளர்த்துட்டு வர்றேன். ஆட்டு எருவோடு பிண்ணாக்குக் கரைசல், வேப்பெண்ணெய் கரைசல், மீன் அமிலக் கரைசல் கொடுத்துட்டு வந்தா நல்ல மகசூல் கிடைக்கும்.

நாட்டு மாடுகளுடன் மகன் முத்துகுமார்

நாட்டு மாடுகளுடன் மகன் முத்துகுமார்

எலுமிச்சைக்கு, வாரத்துக்கு ரெண்டு தண்ணி கொடுத்தே ஆகணும். தண்ணி வசதி இல்லாதவங்க எலுமிச்சை விவசாயம் பக்கம் வராதீங்க. நானும் சொட்டுநீர்ப் பாசனம் போட்டிருந்தேன். அது சரிவரல. இப்ப வாய்க்கால் பாசனத்துலதான் பாசனம் செஞ்சிட்டு வர்றேன். செடிக்குச் செடி 18 அடி இடைவெளிவிட்டு நட்டிருக்கேன். இப்படி நட்டா ஒரு ஏக்கருக்கு 120 செடிகள் பிடிக்கும்” என்றவர் வருமானக் கணக்கு பற்றிப் பேசினார்.

“ஒரு ஏக்கர்ல எலுமிச்சை நடவு செஞ்சிருந்தாலும், 70 சென்ட்லதான் நல்ல அறுவடை செஞ்சிட்டு வர்றோம். ஒரு செடியிலிருந்து வருஷத்துக்கு 5,000 காய்கள் வரை கிடைக்குது. குறைந்தபட்சம் 3,000 காய்கள்னு கணக்கு வெச்சுக்கிட்டா கூட தரத்தைப் பொறுத்து 1 ரூபாயிலிருந்து 4 ரூபாய் வரை விற்பனை ஆகுது. இந்த கொரோனா ஊரடங்கு வந்தபிறகு ரூ.1, ரூ.2க்குத்தான் போகுது. 70 மரங்களிலிருந்து ஒரு வருஷத்துக்கு 2,10,000 காய்கள் கிடைக்குது. ஒரு காய் சராசரியாக 1.50 ரூபாய் என்ற கணக்கில் 3,15,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. அறுவடையும் நாங்களே பாத்துக்குறோம். போக்குவரத்துக்கு மட்டும் 50,000 ரூபாய் செலவு போக 2,65,000 ரூபாய் லாபமாகக் கிடைச்சிட்டு இருக்கு.

மீன் அமிலக் கரைசலுடன்

மீன் அமிலக் கரைசலுடன்

ரொம்ப வருஷமா எலுமிச்சை விவசாயம் செஞ்சிட்டு வர்றதால, சில நேரங்கள்ல வியாபாரிகளே நேரடியா வந்து எடுத்துட்டு போறாங்க. போன் பண்ணினா நாங்களே கொண்டு போய்க் கொடுத்திடுறோம். அதனால விற்பனைக்குப் பிரச்னை இல்லை” என்றவர் நிறைவாக,

“இந்த ஒரு மரத்துல இருந்துதான் இந்தத் தோட்டத்தை உருவாக்கியிருக்கேன். இந்த எலுமிச்சைக்குப் பேர் எதுவும் வைக்கல. நாட்டு ரகம்ங்கற பேர்லயே விற்பனை செய்றேன். இந்த எலுமிச்சை மூலமாத்தான் நாடு முழுக்கத் தெரிஞ்சிருக்கேன். விருதுகளெல்லாம் வாங்கியிருக்கேன். பல்கலைக்கழகத்துலயும் போயும் வகுப்பெடுக்கிறேன். என் வாழ்வுக்கு அர்த்தம் கற்பித்த எலுமிச்சை விவசாயத்துக்கு நன்றி” என்று புன்முறுவலோடு விடை கொடுத்தார்.

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

ஒரு ஏக்கரில் எலுமிச்சைச் சாகுபடி செய்வது குறித்துப் பூ முத்து சொல்லிய தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

செம்மண், செம்பொறை மண்ணில் நன்றாக வளரும். எலுமிச்சை நடவுக்குப் பட்டம் தேவையில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தை இரண்டு சால் உழவு ஓட்டி 18 அடிக்கு 18 அடி இடைவெளியில் இரண்டரை அடி ஆழத்தில் ஜே.சி.பி. மூலம் குழிகள் எடுக்க வேண்டும். ஏக்கருக்கு 134 குழிகள் எடுக்க முடியும் (இவர் 120 குழிகள் எடுத்திருக்கிறார்). தரமான கன்றை வாங்கி வந்து குழியில் எதையும் போடாமல் நடவு செய்ய வேண்டும். நடவு செய்த மூன்றாவது நாள் உயிர் தண்ணீர் கொடுக்க வேண்டும். தொடர்ந்து 3 நாள்களுக்கு ஒருமுறை தண்ணீர் கொடுத்து வர வேண்டும். நடவு செய்து 2 மாதங்கள் கழித்து ஒரு செடிக்கு 1 கிலோ வீதம் வெள்ளாட்டு எருவை மாதம் ஒருமுறை வைக்க வேண்டும். இதையே, மரமாகிவிட்டால் 2 கிலோ என அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். வெள்ளாட்டு எரு வைத்த ஒரு வாரம் கழித்து, தலா 100 கிலோ கடலைப் பிண்ணாக்கு, வேப்பம் பிண்ணாக்கை எடுத்து 250 லிட்டர் தண்ணீரில் ஒருநாள் ஊற வைக்க வேண்டும். இதோடு 10 கிலோ கடுக்காய்த்தூளை வாங்கி நன்கு இடித்துச் சேர்க்க வேண்டும். பிறகு இந்தக் கரைசலிலிருந்து செடிக்கு 2 லிட்டர் கணக்கில் மக்கில் எடுத்து வேர்ப்பகுதியில் ஊற்ற வேண்டும். இதன்மூலம் எலுமிச்சையின் வேர்ப்பகுதியில் நுண்ணுயிர்கள் பெருகி செடி வளர்ச்சிக்கு உதவும். இதை ஆண்டுக்கு ஒருமுறை செய்ய வேண்டும்.

முதல் ஆண்டிலேயே பூக்க ஆரம்பித்துவிடும். ஆனால், பூக்களை இரண்டாண்டுகளுக்குக் கிள்ளி விட்டுவிட வேண்டும். மூன்றாவது ஆண்டிலிருந்து மகசூல் எடுக்கலாம். ஐந்தாவது ஆண்டிலிருந்து நல்ல மகசூல் கிடைக்கும். மூன்றாவது ஆண்டில் மகசூல் அதிகரிக்கவும் பூச்சிகளை விரட்டவும், மோர் கலந்த மீன் அமிலத்தை ஒரு டேங்குக்கு 1 லிட்டர் வீதம் மாதம் ஒருமுறை தெளித்து வர வேண்டும். வெள்ளை ஈ, இலைப்பேன் தொல்லையைக் கட்டுப்படுத்த ஒரு டேங்க் (10 லிட்டர்) தண்ணீருக்கு 60 மி.லி வேப்பெண்ணெய், ஒரு முட்டை வெள்ளைக்கரு, 30 கிராம் காதிசோப் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் கவாத்து மேற்கொள்ளலாம். லேசான பச்சை நிறத்திலிருந்து மஞ்சள் நிறமாக மாறும்போது எலுமிச்சையை அறுவடை செய்து விட வேண்டும். இயற்கையில் விளையும் எலுமிச்சை ஒரு வாரம்வரை தாங்கும்.

மீன் அமிலக் கரைசல் தயாரிப்பு

10 கிலோ மீன் கழிவுடன் 3 கிலோ வெல்லம், 3 லிட்டர் புளித்த மோரைக் கலந்து 10 நாள்களுக்குத் தினந்தோறும் கலக்கி விட்டு வர வேண்டும். 11-ம் நாள் கரைசல் தயார். இதை ஒரு டேங்க் (10 லிட்டர்) தண்ணீருக்கு ஒரு லிட்டர் வீதம் கலந்து தெளிக்கலாம்.

தொடர்புக்கு, பூ முத்து செல்போன்: 9344469645

நன்றி: பசுமை விகடன்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “70 சென்ட்..ஆண்டுக்கு ரூ.3,15,000.. எலுமிச்சை சாகுபடி சாதிப்பு

  1. K.Chandrasekaran says:

    எலுமிச்சை எந்த ரகம் என்று குறிப்பிடவில்லை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *