கடலின் மழைக்காடுகள்

பவழத் திட்டுகள் (Coral Reef) உயிரற்றவை என்றும், அலங்காரத்துக்குப் பயன்படுபவை என்றும்தான் பெரும்பாலும் நினைக்கிறோம். ஆனால், கடலுக்கு அடியில் இருக்கும் பவழத் திட்டுகள் நமக்குப் பல்வேறு விலை மதிக்க முடியாத சேவைகளைச் செய்துவருகின்றன. அவை:

கடலோரப் பாதுகாவலர்கள்

கடற்கரைகளில் தடுப்பு போல் செயல்பட்டு அலையின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பவழத்திட்டுகள் கடற்கரைகளைப் பாதுகாக்கின்றன. பகுதிக்கு வந்துசேரும்போது, பவழத் திட்டுகளின் மீது பட்டு உடைந்து சிதறுகின்றன. இதன் மூலம் அலைகள் தங்கள் சக்தியைப் பெருமளவு இழக்கின்றன. ஏற்கெனவே, நமது கடற்கரைகள் பல்வேறு சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் கடல் அரிப்புக்கு உள்ளாகிவருகின்றன.

Courtesy: Wikipedia
Courtesy: Wikipedia

பவழத் திட்டுகள் மட்டும் இல்லையென்றால், நமது கடற்கரையின் பெரும்பகுதி அரிக்கப்பட்டுக் கடலுக்குள் மூழ்கிவிடும். தீவுகள் குறுகிக் குறுகி சிறிய புள்ளிகளாகிவிடும். பவழத் திட்டுகள்தான் கடற்கரைகளையும் தீவுகளையும் பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன. ஆழிப் பேரலையின் வீரியத்தைக் குறைப்பதிலும் இவற்றுக்குப் பங்கு உண்டு.

உணவுக் கிடங்குகள்

பல கடல் உயிரினங்கள், மீன்களுக்குத் தங்குமிடம், உணவு தேடுமிடம், இனப்பெருக்கம் செய்யுமிடம், குஞ்சுகளை வளர்க்கும் இடமாகப் பவழத் திட்டுகள் இருக்கின்றன.

வணிக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பல மீன்கள் இங்குதான் உற்பத்தி ஆகின்றன. ராமேஸ்வரம் மன்னார் வளைகுடா பகுதியில் பவழத்திட்டுகள் அதிக அளவில் உள்ளன.

இப்பகுதியில் மீன் வகைகளும், மீன் வளமும் செழித்திருப்பதற்குப் பவழத் திட்டுகளும் முக்கியக் காரணம். நிலப்பகுதியில் மழைக்காடுகள் எப்படி இயற்கை வளமும் செழிப்பும் நிறைந்திருக்கின்றனவோ, அதுபோலக் கடலின் மழைக்காடுகள் என்று பவழத் திட்டுகள் கருதப்படுகின்றன.

அற்புதச் சிற்பங்கள்

கடலுக்கு உள்ளே இருந்தாலும்கூட பவழத் திட்டுகளின் பளிச்சிடும் நிறங்களும் வடிவங்களும், உயிர்ச் செழிப்பும் மிகப் பெரிய ஆச்சரியங்கள். இறந்த பவழத் திட்டுகளில் இருந்து அலங்காரப் பொருட்களும், பவழமும் முன்பு எடுக்கப்பட்டன. பவழத் திட்டுகளின் ஊடாகக் கோமாளி மீன்கள் (Clown Fish) உள்ளே நுழைந்து வெளியே வரும் காட்சி மிகவும் அற்புதமானது.

ஆபத்துகள்

புவி வெப்பமடைதலால் கடல் நீர் மட்டம் அதிகரிப்பு, கடல் நீர் வெப்பநிலை அதிகரிப்பதால் பவழத்திட்டுகள் வெளுத்துப் போய் (Bleaching) அழிந்துவருகின்றன.

மீன் பிடிக்கும்போது உடன் கிடைக்கும் பவழத் திட்டுகள் தூக்கியெறியப்படுகின்றன. மற்றொரு புறம் சுண்ணாம்புக் கூடுகளால் பவழத் திட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளதால் சுண்ணாம்புக்காக வெட்டியெடுக்கப்படுகின்றன. இதற்கெல்லாம் மேலாக அலங்காரப் பொருட்கள் செய்வதற்காகவும், ஏற்றுமதி செய்வதற்காகவும் பெருமளவு உயிருடன் சேகரிக்கப்படுகின்றன.

தொழிற்சாலைக் கழிவுநீராலும், வீட்டுக் கழிவாலும் கடல்நீர் மாசுபட்டுப் பவழத் திட்டுகள் உயிரிழக்கின்றன. மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகத்தை ஒட்டித்தான் தமிழகத்தில் மோசமாக மாசுபட்ட நகரமான தூத்துக்குடி இருக்கிறது. தூத்துக்குடியில் முத்துக்குளித்தல் ஏற்கெனவே முற்றிலும் அழிந்து போய் விட்டதை இந்த இடத்தில் நினைவுகூர வேண்டும்.

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *