காணவில்லை: இங்கே இருந்த கடற்கரை!

உலகின் இரண்டாவது மிகப் பெரிய கடற்கரையான மெரினா கடற்கரையின் வயது என்ன தெரியுமா, வெறும் 135 ஆண்டுகள்தான். சென்னை துறைமுகம் கட்டப்படுவதற்கு முன் மெரினா கடற்கரை கிடையாது. மெரினா என்ற ஆங்கிலப் பெயரே, அது காலம்காலமாகச் சென்னையில் இருந்துவந்த கடற்கரையல்ல என்பதைத் தெளிவுபடுத்தும்.

மெரினாவை இன்றைக்குப் பெருமையாகக் கருதுகிறோம். அதேநேரம், சென்னை துறைமுகம் கட்டப்படுவதற்கு முன் திருவொற்றியூர் பகுதியில் இருந்த கடற்கரை காணாமலே போய்விட்டது.

இப்படி நமது கடற்கரைகளில் மேற்கொள்ளப்பட்ட, மேற்கொள்ளப் பட்டுவரும் துறைமுகம் உள்ளிட்ட வளர்ச்சி நடவடிக்கைகள் கடலரிப்பை உருவாக்கி ஊரைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தின்றுவருகின்றன.

கணம்தோறும் ஆர்ப்பரித்து எழுந்துவரும் கடலலைகள் கடற்கரைகளில் உள்ள வீடுகளையும் மீனவக் கிராமங்களையும் எப்படிக் காவு வாங்குகின்றன என்பதை மனதில் தைக்கும் வகையில் சொல்கின்றன அந்தக் காட்சிகள்.

நாடு முழுவதும் கடற்கரைகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சி நடவடிக்கைகள் நிறுத்தப்படவில்லை என்றால், மணல் நிறைந்த இந்தியக் கடற்கரைகள் என்பது கனவாகிவிடும் என்கிறது சமீபத்தில் யூடியூபில் வெளியிடப்பட்ட ‘India’s Disappearing Beaches – A Wake Up Call’ என்ற ஆவணப் படம்.

Courtesy: Hindu
Courtesy: Hindu

கவனமின்மை

“தரைவாழ் தாவரங்கள், உயிரினங் களின் அழிவு பற்றி சுற்றுச்சூழலில் அக்கறையுள்ள பெரும்பாலோர் கவலைப்படுகின்றனர். ஆனால், மணல் நிறைந்த கடற்கரைகள் நம் கண் முன்னே காணாமல்போவது பற்றி கவனிக்கத் தவறிவிட்டோம். ” என்கிறார் சென்னையைச் சேர்ந்த பிரபலக் காட்டுயிர் ஆவணப்படக் கலைஞர் சேகர் தத்தாத்ரி.

அவருடன் ஒளிப்படக் கலைஞர்

கே. ராம்நாத் சந்திரசேகரும் இந்தப் படத்தை உருவாக்குவதில் பங்காற்றியுள்ளார். புதுச்சேரி, தமிழ்நாடு கடலரிப்பு குறித்து நீண்டகாலமாக ஆவணப்படுத்தியும், ஆராய்ச்சியும் செய்துவரும் பாண்டிகேன் (PondyCAN- புதுவை மக்கள் செயல்பாட்டு வலையகம்) அமைப்புக்காக இந்தப் படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

இயற்கை சீர்குலைவு

புதுச்சேரி துறைமுகம் கட்டப்பட்டதால்தான், அந்த மாநிலம் அழகான கடற்கரையை இழந்து நிற்கிறது. மகாகவி பாரதியார் பாண்டிச்சேரியில் நூறு ஆண்டுகள் முன்பு வாழ்ந்த பொது கடற்கரையில் இருந்து நிறைய தூரம் நடந்து  கடல் அலையை பார்த்ததாக எழுதியுள்ளார். இப்போது புதுச்சேரி கடல்கரை வெறும் கருங்கல் துறைதான்!

புதுவை மக்கள் பொழுது போக்குவதற்கும், நிலத்தடி நீரைப் புதுப்பிக்கவும், பல்லுயிர் வளம் நிறைந்த பகுதியாகவும் இருந்த கடற் கரை காணாமல் போனது. மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர்.

இப்படி இயற்கை சமன்பாட்டைக் குலைக்கும் வகையிலும், தொந்தரவு செய்யும் வகையிலும் மனிதர்கள் ஏற்படுத்தும் வளர்ச்சி நடவடிக்கைகள் கடலரிப்பை அதிகரிக்கின்றன.

பயனற்ற சுவர்கள்

துறைமுகங்கள், கடற்கரையோர அனல்மின் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி நடவடிக்கைகளின் காரணமாக இந்தியக் கடற்கரைகளில் 40 சதவீதம் அழியும் ஆபத்தில் உள்ளன. இந்த நடவடிக்கைகளால் ஏற்படும் கடலரிப்பைத் தடுப்பதற்கான அடிப்படைக் காரணங்களுக்குத் தீர்வு காணாமல், எதற்கும் பயனற்ற கடற்கரை தடுப்புச் சுவர்களை மாநில அரசுகள் எழுப்பி வருகின்றன.

சென்னை திருவொற்றியூர் கடற்பகுதியிலும், புதுச்சேரி கடற்கரையிலும், தமிழகத்தின் பல கடற்கரைகளிலும் இப்படித் தடுப்புச் சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளதைக் காணலாம். இவற்றால் கடலரிப்பு நிற்கப் போவதில்லை.

வளர்ச்சி நடவடிக்கைகளால் இயற்கையான மணல் நகர்வு தடுக்கப்படுவதால்தான் கடலரிப்பே நிகழ்கிறது. இந்த நிலையில் வளர்ச்சி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தாமல், வெறுமனே கடற்கரை தடுப்புச் சுவர்களை மட்டும் அரசுகள் எழுப்பிக் கொண்டிருக்கின்றன. இது போகாத ஊருக்கு வழி.

நம் கைகளில்

இப்படித் தவறுகளைச் சுட்டிக்காட்டுவது மட்டுமில்லாமல் கடலரிப்பைத் தடுத்து நிறுத்தவும், ஏற்கெனவே காணாமல் போன கடற்கரைகளை மீட்டெடுப்பதற்குமான வழிமுறைகளையும் இந்தப்படம் சுட்டிக்காட்டுகிறது.

மனித இனம் கிழக்கு ஆப்பிரிக் காவில் தோன்றிக் கடற்கரைகள் வழியாகவே பயணித்துத்தான் உலகம் முழுவதும் பரவியது என்கின்றன அறிவியல் ஆய்வுகள். அன்று தொட்டு இன்றுவரை மனிதக் குலத்துக்கு வளம் தந்த கடற்கரைகள், நமது சந்ததிகளுக்கும் அதே வளத்தைத் தரும் என்று சொல்வதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இப்போது எஞ்சியிருக்கும் கடற்கரைகளைக் காப்பாற்றுவது, முற்றிலும் நம் கைகளில்தான் அடங்கி இருக்கிறது.

‘அழிந்து வரும் இந்தியக் கடற்கரைகள் – ஒரு எச்சரிக்கை! என்ற இந்தப் படத்தைத் தமிழிலும் பார்க்கலாம். வீடியோ இணைப்பு இங்கே பார்க்கலாம்

நன்றி:ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *