பரிதாபமாக மடியும் அரிய உயிரினங்கள்

எல்லா மிருகங்களுக்கும் பிள்ளை பெற்று கொள்ளும்  காலம் (Breeding season) என்று ஒன்று  உண்டு. அந்த நேரத்தில் தான் அவை  கூடி, கூடு கட்டி பிள்ளை  பெறும். கடவுள் ஏனோ மனித மிருகத்திற்கு வருடம் முழுவதும் இதை கொடுத்து  விட்டார். 60 வயது தாண்டிய பணக்கார சீன தாத்தாக்கள் ஆண்மை அதிகரிக்க என்று எதை தின்றால் நல்லது என்று எல்லா மிருகங்களையும் அழித்து வருகின்றனர். புலிகள் அப்படி தான் கொல்லப்பட்டு அவற்றின் ஆணுறுப்புக்கள் ஆண்மை அதிகாரிக்கும் மருந்துகள் செய்ய கடத்த  படுகின்றன.இப்போது புலிகள் போய் கடலில் உள்ள உயிரினங்கள் மனிதனின் ஆண்மை பசிக்கு  இரையாகின்றன.இதை பற்றிய செய்தி விகடனில் இருந்து… 

பரிதாபமாக மடியும் அரிய உயிரினங்கள்

செய்திகளில் போதைப் பொருட்கள் பிடிபட்டன’ என்ற செய்திகள் இடம்பெறுவது குறைந்து ‘வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற நட்சத்திர ஆமைகளும், கடற் குதிரைகளும் பிடிபட்டன’ என்பதுதான் அன்றாட செய்தியாகியிருக்கின்றன இப்போதெல்லாம்.

கடலில் கிடைக்கும் மீன், இறால், நண்டு, கடமான் போன்றவைகள் சராசரி  உணவுக்காக அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. அதேசமயம் மனிதர்கள் அறிந்து வைத்திருக்கும், உணவுக்காகப் பயன்படுத்தப்படாத கடல்வாழ் உயிரினங்கள் வெகுவேகமாக அழிந்து கொண்டு வருகிறது.

கடல் குதிரைகள், நட்சத்திர ஆமைகள், கடல் பல்லிகள், கடல் அட்டைகள், அபூர்வ வகை கடல் நத்தைகள், கடல்குழி சங்குகள் (இது கலைப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது) போன்றவைகள் தொடர் கடத்தலால் அழிந்து வருகிற உயிரினங்களாகும்.

நட்சத்திர ஆமைகளும், அதற்கு துணையாக கடற்குதிரைகளும் அதிகளவில் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவது ஏன் ? இதை ஏன் தடுக்க முடிவதில்லை…? இதன் பின்னணியில்  மறைந்து இருக்கும் விஷயங்கள்தான் என்ன ?

ஆண்மை விருத்தி, அதிர்ஷ்டம், மாந்திரீகம் தொடர்பான நம்பிக்கைகளால் இவைகள் பல நாடுகளில் கிராக்கி உள்ள பொருளாகவே ஆகிவிட்டது. இதனால் கடத்தல் தொழிலில் இப்போது நட்சத்திர ஆமைக்குதான் நட்சத்திர அந்தஸ்து. லட்சத்தீவுகளில் காணப்படும் ஆமைகளே அளவிலும், எடையிலும் (700 கிலோ வரை) பெரியவை. உலகளவில் பல டன் எடைவரை ஆமைகள் இருந்தாலும், அவைகள் சாதுவான பிராணி.

அதேபோல் கடத்தலுக்கு இரையாகும் நட்சத்திர ஆமைகள் பாசி, புற்கள் போன்றவற்றை மட்டுமே உண்டு வாழும் சுத்த சைவ இனம். இந்த ஆமைகள் அனைத்துமே 450 முதல் 500 கிராம் எடையைத் தாண்டாத அளவில்தான் இருக்கும். அதன் வளர்ச்சியும் அவ்வளவுதான்.

அதே சமயம் கடல் ஆமைகள் அதிகபட்சமாக, அரை டன் எடை வரையில் கிடைத்துள்ளன. இரண்டு அடுக்குகளாக குறுக்கே மெல்லிதாய் ஒரு தடுப்பைக் கொடுத்து பிரத்யேக சூட்கேஸ்களில் அடைத்து, நட்சத்திர ஆமைகள் ஆகாய மார்க்கமாகவும், கடல் மார்க்கமாகவும் கடத்தப்படுகின்றன.

சென்னையைச் சேர்ந்த கோமல் நித்யா என்ற மீனவர்,  சமூக அக்கறையுடன் நம்மிடம் சில விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.

” இந்திய அரசால் பாதுகாக்கப்பட்ட பதினாறு வகையிலான கடல்வாழ் உயிரினங்களில் நட்சத்திர ஆமைகளும், கடல்குதிரைகளும் முக்கியமானவை. பெரும்பாலும் அழகுக்காக வீடுகளில் நட்சத்திர ஆமைகளை வளர்ப்பதாகவும், ஆண்மை தொடர்பான குறைபாடுகளை சரி செய்ய கடற்குதிரைகளை ‘பாடம்’ செய்து பயன்படுத்துவதாகவும் சொல்கிறார்கள். ஆனால், மீனவர்களாகிய நாங்கள் இதை நம்புவதில்லை.

கடலை அன்னையாக கருதும் எந்த மீனவனும், வலைவீசி கடல் குதிரை களையோ, நட்சத்திர ஆமைகளையோ பிடிப்பதில்லை. இவைகளை உணவாகக் கொள்வதும் இல்லை. கடத்தல் நோக்கத்துடன் வெளியிலிருந்து  வருகிற நபர்கள் செய்கிற வேலை இது.

கடலின் நீர் மட்டத்தில் நூறடி ஆழத்தில் சுத்தமான பாசி, மண் சார்ந்த பகுதிகளில் மட்டுமே வளரக் கூடியது கடற்குதிரை. நட்சத்திர ஆமையும் அப்படியே. இவைகளை நாங்கள் பிள்ளைகளாகத்தான் பார்ப்போம்” என்கிறார் கோமல் நித்யா.

குதிரைமுகம்,  நீளமான குரங்கு வால், ஏதோ ஒரு குழல் போல நீண்டு முடிவில் லேசாய் சுருண்டாற் போல் இருக்கும் வாய்ப்பகுதி, மொத்த எடையே அதிக பட்சமாக (வளர்ந்த நிலையில்) 150 கிராமை தாண்டாது. வளையங்களை உடல் முழுவதும் சுற்றியிருப்பது போல உடல்வாகு, இதுதான் கடல் குதிரை.  கடற்குதிரையில் 42 இனங்கள் இருப்பதாக குடுலு ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பெயரளவில் (கடற்)குதிரை என்றாலும், இதன் வேகமானது, 3 நாட்கள் விடாமல் முயற்சித்தால் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க முடியும், அவ்வளவுதான்.

கடல் ஆமைகள் போன்றே இதுவும் ஒரே சமயத்தில் 100 முதல் 200 முட்டைகள் வரையில் வெளியிடக் கூடியவை. நட்சத்திர ஆமையானது உள்ளங்கை அளவுக்கு  ஸ்டாரை நசுக்கியது போல ஒரு அடையாளத்துடன் நீலம், கருப்பு, வெளிர் நீலம், ஆரஞ்சு என்று ஓடுகளில் வண்ணம் பூசிக் கொண்டு,  மற்ற ஆமைகளை விட அழகாய் இருக்கும்.

மத்திய தரைக்கடலில் இதன் எண்ணிக்கை அதிகம் என்கிறார்கள். ஒரே சமயத்தில் லட்சக் கணக்கில் கூட்டமாகவே பயணிக்கும்போது கடலின் மேல் மட்டத்தில் வண்ணப் பாறை நகர்வது போன்று இருக்கும்.

அரிய வகை உயிரினமாக அரிதாகிக் கொண்டே வருகின்றன கடற்குதிரையும், நட்சத்திர ஆமையும். இவற்றை அழிவிலிருந்து தடுத்து காப்பாற்ற முடியாதா?

இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத காவல்துறை அதிகாரி ஒருவர், “ முதலில் இதில் உள்ள பிரச்னையை புரிந்து கொண்டாலே இதை அழிவிலிருந்து காப்பாற்றி விடலாம். கடத்தலைத் தடுத்து விடலாம். கடலோரங்களில் குறிப்பாய் கோடியக்கரை, அதிராம்பட்டினம், தொண்டி,  ராமநாதபுரம்  போன்ற இடங்களில் காவல்துறையினரோ, கடலோரக் காவல் படையோ கடத்தல் ஆசாமிகளை மடக்கிப் பிடித்தால் அதை வனத்துறை வசம்தான் ஒப்படைக்க வேண்டும்.

அவ்வாறு பிடிபடும் சமயம், சம்பந்தப்பட்ட துறையினருக்கு தகவல் தெரிவித்து அவர்கள் வருவதற்குள்,  இவைகளின் உயிர் எங்கள் கண்முன்னே பறிபோவதை பலமுறை பார்த்திருக்கிறோம்.

இதனால் சாதுர்யமாக கடத்தல் நபர்களை பிடித்தாலும் இந்த உயிரினங்களை காப்பாற்ற முடியவதில்லை. அவைகளை நாங்கள் மீட்டதுமே கடலியல், கடல் சார்ந்த துறை வசம் ஒப்படைக்க இதுவரையில் சரியாக திட்டமிடப்படவில்லை. அவற்றை முறைப்படுத்துவது அவசியம்” என்கிறார் வருத்தமான தொனியில்.

வான்வழியாக இந்த உயிரினங்களை கடத்துபவர்களை பிடிக்கும் விமானத்துறை அதிகாரிகள் தரப்பில் நம்மிடம் பேசிய ஓய்வு பெற்ற விமான நிலைய அதிகாரி ஒருவர், அதிர்ச்சிக்குரிய தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

” சென்னை விமான நிலையத்தில் கோலாலம்பூர், மலேசியா வழி செல்லும் விமான வழித்தடத்தில் கடத்தல் ஆசாமிகள் பிடிபடுகிறார்கள். அவர்களின் சூட்கேசில் இருக்கும் கடற்குதிரைகளும், நட்சத்திர ஆமைகளும் உயிரோடு இருப்பதை நீங்கள் பார்க்கலாம். செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சியிலும் கண்டிருப்பீர்கள். கடலோரத்தில் படகுகளில் கடத்தி வரும்போது போலீசார் மடக்கிப் பிடிக்கின்றனர். வனத்துறையினர் வருவதற்குள் அவைகள் இறந்து விடுகின்றன.

ஆனால், கடல் பகுதியில் இருந்து விமான நிலையம் இருக்கும் தூரம் எவ்வளவு என்று பாருங்கள்… ஆனாலும்,  இவைகள் அங்கு மட்டும் உயிரோடு எப்படி இருக்க முடிகிறது? உண்மையில் தரைவழியாக கவனிக்க வேண்டிய இடங்களைக் கவனித்து விட்டு, மிகுந்த பாதுகாப்புடன் அவைகளை ஏர்போர்ட்டுக்கு அருகாமையில் அவைகளுக்கேற்ற சூழ்நிலையில் வைத்து பாதுகாத்து அதேபோன்ற சூழ்நிலை விமான நிலையத்திலும் உண்டான பிறகே ஆமைகளும், கடற் குதிரைகளும் ஆகாயத்தில் பயணிக்கின்றன” என அதிர்ச்சி தருகிறார்.

“இப்படி பிடிபடும் கடற்குதிரை மற்றும் நட்சத்திர ஆமைகளின் எண்ணிக்கையும் அதன் மதிப்பும் அதிகாரிகளால் வெளியுலகிற்கு குறைத்து மதிப்பிடப்பட்டு அறிவிக்கப்படுகிறது. இதன்மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கடத்தல் தொழிலில் மறைமுகமாக பங்கேற்கிறார்கள்” என்கிறார் இந்த அதிகாரி.

காவல்துறை, கடத்தல் ஆசாமிகள், அரசு அதிகாரிகள் என இந்த முக்கோணக் கூட்டணி கைகோர்த்து செயல்படுவதை தடுத்து,  கடல்வாழ் உயிரினங்களை காக்கும் சட்ட விதிமுறைகளை இன்னும் பலப்படுத்தினால் மட்டுமே அரியவகை உயிரினங்களை அரசு காப்பாற்ற முடியும்.

நன்றி: விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “பரிதாபமாக மடியும் அரிய உயிரினங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *