பிச்சாவரத்தில் அலையாத்திக் காடுகளின் நடுவே ஒரு படகு சவாரி

நீண்ட நீர்வழிப்பாதை, எழில்கொஞ்சும் பசுமை நிற மரங்கள் என இயற்கையால் அலங்கரிக்கப்பட்ட ஒரு சொர்க்கபுரியாகக் காட்சி தருகிறது பிச்சாவரம்.

சிதம்பரத்தில் 17 கி.மீ தூரத்தில் இந்த இடம் அமைந்துள்ளது. கடலூர் மற்றும் சிதம்பரத்திலிருந்து இங்கு வருவதற்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பார்க்க ரம்மியமாக இருப்பது மட்டுமல்ல; கயாகிங், படகு சவாரி போன்ற கூடுதல் சிறப்பம்சங்களும் இங்கே இருக்கின்றன.

பிச்சாவரம்

“எமனின் பினாமி சுனாமி; அலையாத்திக் காடுகள் இருக்க தாக்குமோ இனி சுனாமி… பாதுகாப்பீர் அலையாத்திவனம் காடுகளை! ” – பிச்சாவரத்திலிருந்த ஒரு வரவேற்புப் பலகையில் இடம்பெற்றிருந்த வாசகம் இது.

அதில் இருப்பதுபோலவே அலையாத்திக் காடுகளின்(Mangrove forests)  முக்கியத்துவத்தை இன்றைய தலைமுறைக்கு உணர்த்த பிச்சாவரத்தை விடவும் சிறந்த இடம் எதுவுமில்லை எனலாம். இந்தியாவிலேயே கொல்கத்தாவிற்கு அடுத்து சுந்தரவனக் காடுகள் சுற்றுலா தலமாக இருப்பது இங்குதான் என்கிறது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்.

முதலில் படகு சவாரி செய்யும் இடத்துக்குச் சென்றோம். படகு சேவைக்கான கட்டணங்கள் எவ்வளவு என்பது குறித்து அங்கிருந்த பலகையில் எழுதப்பட்டிருந்தது. இரண்டு பேர் கொண்ட துடுப்பு படகிற்கு 189 ரூபாயும், நான்கு பேர் கொண்ட துடுப்பு படகிற்கு 283 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. 8 பேர் கொண்ட துடுப்பு படகிற்கு 2000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதில் சிலர் ஏறவும், அவர்களுடன் இணைந்து நாங்களும் படகு சவாரியைத் தொடங்கினோம். படகோட்டியாக வந்திருந்தவரிடம் நம்மை அறிமுகம் செய்துகொண்டு உரையாடலை ஆரம்பித்தோம்.

பிச்சாவரம் படகு சவாரி

“கிட்டத்தட்ட 30 வருஷமா இங்கதான் படகோட்டிட்டு இருக்கேன். இதோட பரப்பளவு 1350 ஹெக்டர். இந்தச் சதுப்பு நிலக்காட்டை சுற்றி 50-க்கும் மேற்பட்ட தீவுகளும் 100 மேற்பட்ட கால்வாய்களை ஓடைகளும் இருக்கின்றன. இங்கு மொத்தம் 18 வகையான மரங்கள் இருக்கு. நரி, நீர் நாய் எல்லாம் இங்க இருக்கு. ஆனால் நம்ம பாக்குறது கஷ்டம். இருபத்தைந்துக்கும் மேற்பட்ட பறவைகள் வெளிநாடுகளிலிருந்து இங்கு வருகின்றன.” என்றார்.

இங்குள்ள கருத்தியல் காட்சிக் கூடத்தில் மாங்குரோவ் மரங்கள் குறித்து, இங்கு வரும் எண்ணற்ற பறவைகள் குறித்த செய்திகள் வைக்கப்பட்டுள்ளன. சிறிது தூரம் பயணித்த பிறகு படகை நிறுத்தியவர் ஒரு மரத்தைக் காட்டி இதுதான் ரைஸ்சோபோரா rhizopora எனக் கூறினார். இதில் மூன்று வகை உண்டு ரைஸ்சோபோரா அப்பிக்குலடா (rhizopora apiculata), ரைஸ்ஒபோரா முக்கிரனட்டா (rhizopora mucranata) ரைஸ்சோபோரா  லமார்க்கி (rhizopora lamarckii). இதைத் தவிர இங்கு அவிசினியா என்ற மரமும் இருக்கு எனக் கூறியவர் அதில் இங்கு இரண்டு வகை இருக்கு எனச் சொல்லி அதன் வகைகளையும் பட்டியலிட்டார். அவை, அவிசினியா மரீனா மற்றும் அவிசினியா அவிசினாலிஸ் ஆகியவை. “சுவாசிக்கும் வேர்கள் இந்த மரத்திற்கு இருக்கு. எம்.எஸ்.சுவாமிநாதன் இந்தக் காட்டை தத்தெடுத்து வளர்க்கிறார்.” என்றும் பகிர்ந்துகொண்டார். பயணமும், உரையாடலும் ஒரே அலையாகத் தொடர்ந்தது.

படகு சவாரி

“துடுப்புப்படகு மொத்தம் 40 படகு இங்கு இருக்கிறது. மோட்டார் படகு இரண்டு மூன்று இருக்கு. எங்களுக்கு ஒரு கி.மீ தூரத்துக்கு ஒரு  தடவை படகு ஓட்றதுத்துக்கு 65 ரூபாய் கிடைக்கும் அது இரண்டு பேராக இருந்தாலும் சரி; நாலு பேராக இருந்தாலும் சரி.அது போக மீதி எல்லாம் அரசாங்கத்துக்குத்தான். இங்க உள்ள பிரச்னைனு பாத்தா படகுதான் கம்மியா இருக்கு. இங்க படகு ஒட்டுறவங்களுக்கு சலுகைகள் ஏதும் தரதில்லை. எங்களுக்கு என எந்த ஒரு காப்பீட்டு திட்டமும் தரவில்லை” எனத் தெரிவித்தார்.

பிச்சாவரம் படகு இல்லம்

“சமீப காலத்தில துப்பறிவாளன் படம் இங்க எடுத்தாங்க. பிச்சாவரத்துக்கு சென்னை, கேரளாவிலிருந்து அதிகமான மக்கள் வருவாங்க. அப்புறம் வெளிநாட்டவர்கள், வட இந்தியர்களும் இங்க வருவாங்க. விடுமுறை தினங்கள்ல சாதாரண நாள்களை விட அதிகமாக்க கூட்டம் வரும். குறிப்பிட்டுச் சொல்ல முடியாது இவ்ளோதான் வருமானம் கிடைக்கும்னு. அது மக்கள் வருகையைப் பொறுத்து மாறும். நகர வாழ்க்கைல இருந்து விடுபட நினைக்கும் நகர வாசிகளுக்கு இது ஒரு நல்ல இடமாக அமையும். படகில் பயணிக்கும் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பாதுகாப்பு கவசம் அளிக்கப்படுகிறது.

Pichavaram

சுற்றுலா பயணிகள் இங்குள்ள சுரபுன்னை மரங்களுக்கு இடையில் பயணம் செய்வதன் மூலம் பசுமைச்சூழலை குதூகலத்தோடு அனுபவிக்கலாம் என்பதோடு, மன அமைதியையும் தேடிக்கொள்ளலாம். இது அவர்கள் மனதுக்கும் அமைதியை அளிக்கிறது. படகு ஓட்டும் எங்களுக்கும் சுற்றுலா பயணிகளுடன் பேசி மகிழ்வதால் எங்களது வாழ்க்கை பிரச்னையை மறக்கடிக்கச் செய்கிறது. இந்தத் தொழிலில் இருக்கும் ஒரே மகிழ்ச்சி இதுதான். எனவேதான் வருமானம் குறைவு என்றாலும் இந்தத் தொழிலை விட்டு செல்வதற்கு மனமில்லை.” என சிரித்தார் அந்த மனிதர். நம் பிச்சாவரத்தைப் பயணத்தை இனிமையாக்கிய அவருக்கு நன்றி சொல்லி விடைபெற்றோம்.

நன்றி: விகடன்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *