கத்தரியை தாக்கும் காய்துளைப்பான்

கத்தரியை தாக்கும் காய் துளைப்பானை உரிய முறையில் கட்டுப்படுத்த வேண்டும்’ என குளித்தலை தோகைமலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் ராஜேந்திரன் கூறினார்.அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  • கத்தரி சாகுபடி செய்யப்படும் அனைத்து இடங்களிலும் கத்தரி இளந்தண்டு காய் துளைப்பான் தாக்குதல் மிக அதிகமாக காணப்படும்.
  • இதன் காரணமாக கத்தரி நடவு செய்த 20 நாட்களில் இருந்து அறுவடை முடியும் வரை தொடர்ந்து பூச்சிக்கொல்லிகளை விவசாயிகள் அதிகள வில் பயன்படுத்துகின்றனர்.
  • இதனால் சுற்றுப்புறச்சூழல் மாசு அடைகிறது.
  • இந்த பூச்சியானது கத்திரி உருளைக் கிழங்கு பாகல் பச்சைப் பட்டாணி மணத்தத்தக்காளி சுண்டை கண்டங்கத்திரி மற்றும் ஊமத்தை செடிகளை தாக்குகிறது.
  • கத்தரி நடவு செய்து 15 முதல் 20 நாட்களில் இருந்து இந்த புழுவின் தாக்குதல் தொடங்குகிறது. புழுக்கள் செடிகளின் நுனிக்குருத்தின் கீழ் துளைத்து உள்பகுதியை உண்பதால் குருத்துப் பகுதி வாடி காய்ந்து விடுகிறது.
  • அதன்பின் பூக்கும் மற்றும் காய்க்கும் தருணத்தில் பூ மொட்டுகள் பூக்கள் மற்றும் பிஞ்சுக்காய்களையே இந்த புழு தாக்குகிறது.
  • இதனால் பூ மொட்டுகளும் பூக்களும் உதிர்ந்துவிடும். காய்பிடிப்புத் திறன் பாதிக்கப்பட்டு மகசூல் 75 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது.
    தாக்கப்பட்ட காய்களின் மேல் துவாரங்கள் காணப்படும்.
  • இந்த துவாரங்களின் மேல் புழுவின் கழிவுப் பொருட்கள் தள்ளப்பட்டிருப்பதைக் காணலாம்.
  • கத்தரி இளந்தண்டு மற்றும் காய்த்துளைப்பான் ஓராண்டில் பல வாழ்க்கை சுழற்சிகளை மேற்கொள்கிறது. இதனால் ஆண்டு முழுவதும் இப்பூச்சியின் தாக்குதல் காணப்படும். தாய் அந்துப் பூச்சியானது வெண்நிற இறக்கைகளை கொண்டது.
  • இறக்கைகளின் மேல் பழுப்பு கலந்த சிவப்பு நிறக்கோடுகள் காணப்படும். ஒரு தாய் அந்து பூச்சி 80 முதல் 250 முட்டைகள் வரை இடும்.
  • முட்டைகள் இலையின் பின்புறம் குருத்துக்கள் பூ மற்றும் காய்களின் புள்ளி வட்டங்களில் காணப்படும். முட்டைகள் தட்டையாகவும் வெள்ளையாகவும் இருக்கும். முட்டைப்பருவம் 3 முதல் 4 நாட்கள். இளம்புழுக்கள் வெண் நிறமாக இருக்கும்.
  • முட்டையிலிருந்து வெளி வந்த 6 மணி நேரத்திற்குள் இந்த புழு குருத்து அல்லது காய்களை துளைத்து உள்ளே சென்று விடும். பெரும்பாலும் குருத்துகளைவிட இப்புழுக்கள் காய்களையே விரும்பி உண்ணும்.
  • கத்தரியை மட்டும் தொடர்ந்து பயிரிடாமல் தானியங்கள் பயறு வகைகள் கொண்ட பயிர்களை சுழற்சி முறையில் சாகுபடி செய்ய வேண்டும்.
  • தாக்குதல் அதிகமாக காணப்படும் நேரங்களில் வேப்பங்கொட்டைச்சாறு 5 சதவீதம் அல்லது புரபனோபாஸ்சை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மிலி அல்லது கார்பரில் நனையும் தூள் ஏக்கருக்கு 400 கிராம் என்ற அளவிலும் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
  • பூக்கும் தருணத்தில் மாலத்தியான் 50 இசி மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மிலி வீதம் 15 நாட்கள் இடைவெளியில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
  • மருந்து தெளிக்கும் போது காய்களை பறித்துவிட்டு தெளிக்க வேண்டும்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *