கரும்பு சாகுபடி டிப்ஸ்

கரும்பு சாகுபடியில் எளிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அதிக  மகசூல் பெறலாம் என ஆண்டிபட்டி வேளாண்மை உதவி இயக்குநர் பெ. கோவிந்தராஜன் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கி உள்ளார்.

  •  கரும்பு பயிரின் மகசூல் திறனை நிர்ணயிக்கும் முக்கியக் காரணி மண்வளம். இயற்கை வேளாண்மை முறைகளான பயிற்சுழற்சி, பசுந்தாள் உரமிடுதல், இயற்கை எருக்கள், பயிர் உழவு முறை, இயற்கை முறையில் களை மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துதல்  ஆகியவை மண் வளமாக மாற உதவுகின்றன.
  •  விவசாயத்திற்கு பயிர் வளர்ச்சிக்குத் தேவையான சத்துகள் மற்றும் நச்சுத்தன்மை இல்லாதிருக்கும் மண் வளம் அமைந்திருக்க வேண்டும். கரும்பு எல்லாவகை மண்களிலும் பயிரிடப்பட்டாலும், நல்ல வடிகால் வசதியுள்ள மண் சாகுபடிக்கு ஏற்றது.
  •  கரும்பு வளர்ச்சிக்கு 6.5 முதல் 7.5 சதவீதம் வரை உள்ள கார அமில நிலை மிகவும் உகந்தது. ஒன்றரை அடி ஆழம் வரை மண் இறுக்கம் இல்லாமல் மிருதுவாக இருக்க வேண்டும். கரிமச் சத்து, ஊட்டச் சத்துகள் போதிய அளவில் இருக்க வேண்டும்.
  •  தொழு உரம், கம்போஸ்டு எரு, பசுந்தாள் உரம், கரும்பாலை ஆலைக் கழிவு, கரும்புத் தோகை ஆகியவற்றை இட்டு மண்ணின் இயல்பு குணங்களை சீர்படுத்தலாம்.
  •  கரும்பு பயிரிடப்படும் நிலம் களர் நிலமாக இருப்பின், இரும்புச் சத்து பற்றாக்குறை ஏற்பட்டு மகசூல் குறைந்து காணப்படும். இலைகள் மஞ்சள் நிறத்தில் வெளுத்து, பயிர் வளர்ச்சி பாதிக்கப்படும். அமிலகார நிலை (பி.எச்.,) 9-க்கு மேல் இருந்தால், எல்லா கரும்புகளும் காய்ந்துவிடும். களர் நிலத்தில் 0.1 யூனிட் பி.எச்., குறைப்பதற்கு ஏக்கருக்கு 400 கிலோ ஜிப்சம் இட வேண்டும். தொழு எரு, கம்போஸ்டு அல்லது கரும்பு ஆலை அழுக்கு 10 முதல் 15 டன்கள் இட வேண்டும்.
  •  கரும்பு பயிரின் வளர்ச்சிக்கு 16 ஊட்டச் சத்துக்கள் தேவைப்படுகின்றன. இவற்றில் ஒன்றில் பற்றாக்குறை ஏற்பட்டாலும், பயிர் வளர்ச்சி பாதிக்கப்படும். கடந்த பல ஆண்டுகளாக தழை, மணி, சாம்பல் சத்து உரங்களாகவே இடுவதாலும், தொழு உரம், கம்போஸ்டு, பசுந்தாள் உரங்கள் இடாததாலும் நிலத்தின் உற்பத்தி திறன் வெகுவாகக்  குறைந்துவிட்டது. அங்ஙக உரங்கள் இடுவதால் மகசூல் அதிகரிப்பதுடன், நுண்ணுயிர் பெருக்கம் ஏற்பட்டு மண்ணிலுள்ள சத்துகளை பயிர்கள் எடுத்துக்கொள்வதற்கு எளிதாகிறது.
  •   கரும்பு நடவுசெய்த 20 முதல் 30 நாள்களுக்கு பார்களுக்கு இடைப்பட்ட பகுதியில், வரிசையாக தக்கைப்பூண்டு அல்லது சணப்பை ஊடுபயிராக நடவு செய்யலாம். இவற்றை பூ பிடிக்கும் பருவத்தில் பிடுங்கி பாரின் இருபுறமும் அமுக்கி மண் அணைக்கலாம். இதனால் களைகள் கட்டுப்படுத்தப்படுவதுடன் தழைச்சத்து மற்றும் நுண்ணுயிர்கள் மண்ணில் அதிகரிக்கும்.
  •  நடவுசெய்த மூன்றரை மாதம் முதல் 10 மாதம் வரை 2 அல்லது 3 முறை தோகைகளை உரித்து பார்களின் இடைப்பட்ட பகுதிகளில் பரப்பலாம். தோகை பரப்புவதால் வறட்சி தாங்கும் தன்மை ஏற்படுகிறது. களைகள் கட்டுபடுத்தப்படுகின்றன. தோகை எரிக்கப்படும் போது, மண்ணில் பயன் தரும் நுண்ணுயிர்கள், மண் புழுக்கள் மடிந்து விடுகின்றன. இதனால் மறுதாம்பு பயிர்கள் மகசூல் வெகுவாக பாதிக்கப்படும்.
  •   கரும்புத் தோகையைப் பயன்படுத்தி, மண்புழு உரம் தயாரித்து மண்ணின் கரிம மக்கை மேம்படுத்தலாம். பயிர் சாகுபடிக்கு முன், மண் பரிசோதனை செய்து மண்ணில் உள்ள சத்துக்களின் அளவுகளை அறிந்து உரம் இட வேண்டும்.
  •   சொட்டுநீர் உரப் பாசனம் மூலம் தேவையான நேரத்தில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உரங்களை பயிர்களுக்கு அளிக்க முடிகிறது. மேலும் சொட்டுநீர் பாசன முறையில் களைகள் முளைப்பது குறைவு. எனவே கரும்பு சாகுபடிக்கு சொட்டுநீர் பாசன முறையை பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம்.
  •  கரும்பு பயிருக்கு நுண்ணுயிர் உரங்கள் இடுவதால், வேர்களை சுற்றி மண்ணில் தங்கி வளர்ந்து காற்றிலுள்ள தழைச் சத்தை கிரகித்து பயிருக்கு அளிக்கும். நுண்ணுயிர் உரங்களான அசோஸ் பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா ஆகியவறை, ஏக்கருக்கு 4 கிலோ அளவில் ஒரு கிலோ கம்போஸ்டு அல்லது தொழு உரத்துடன் கலந்து பாஸ்பேட் உரத்தை இட்ட பிறகு, நடவுகால்களில் கரும்பு நடுவதற்கு முன் இட வேண்டும்.
  •   துத்தநாகச் சத்து, இரும்புச் சத்து பற்றாக்குறையினால் பயிர்களின் இலை மஞ்சளாகி வெளுத்து காணப்படும். இதற்கு ஹெக்டேருக்கு 2 கிலோ பெரஸ்சல்பேட், ஒரு கிலோ துத்தநாக சல்பேட், 2 கிலோ யூரியா ஆகியவற்றை 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து கைத்தெளிப்பான் மூலம் கரும்புப் பயிர் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும்.

இத்தகைய எளிய தொழில்நுட்ப முறைகளைக் கடைபிடித்து, அதிகமான உரம், பூச்சி, களை, பூசானக்கொல்லி மருந்துகளை தவிர்த்து, மண் வளத்தை பெருக்கி கரும்பு மகசூலை அதிகரிக்கலாம் என வேளாண்மை உதவி இயக்குநர் பெ.கோவிந்தராஜன் தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “கரும்பு சாகுபடி டிப்ஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *