பாலிதீன் பைகளை உண்ணும் கால்நடைகளுக்கு ஏற்படும் தீங்கு

லகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கால்நடைகள் பொதுவாக பாலிதீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை உண்ணுகின்றன. ஏனென்றால் தீவனப் பொருட்களை பகுத்தறியும் குணமும், சுவையை உணரும் தன்மையும் அவைகளுக்கு கிடையாது. மேய்ச்சலின் போது தலையை கீழே தாழ்த்தி தரையில் மேய்வதால் புல் மற்றும் தீவனங்களோடு பாலிதீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களையும் சேர்த்து சாப்பிடுகின்றன.

தீராத செரிமான கோளாறு

அயற் பொருட்களை சாப்பிடும் கால்நடைகளுக்கு வயிற்று நோய்கள் உட்பட அதனை சார்ந்த பிற நோய்களும் ஏற்படுகின்றன. பகுத்தறியும் தன்மை கால்நடைகளுக்கு இல்லாத காரணத்தால் அவை தீவனத்தோடு இந்த அயல் பொருட்களையும் விழுங்கி விடுகின்றன. உலோகம், பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்களை கால்நடைகள் விழுங்கிய பின் அவை வயிற்றுக்குள்ளேயே இருந்தால் பெரிய பாதிப்புகள் ஏதும் ஏற்படுவதில்லை.
ஆனால் இவை வயிற்றை துளைத்து கொண்டு உடலின் மற்ற பாகங்களை அடையும் போது ஈரல், மண்ணீரல், உதரவிதானம், நுரையீரல், இருதயம் போன்ற உள் உறுப்புகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகின்றன. பாலிதீன் பைகள் வயிற்றுக்குள்ளே தங்கி கால்நடைகளுக்கு தீராத செரிமானக் கோளாறுகளை உண்டாக்குகின்றன.

வேகஸ் நரம்புகள் பாதிப்பு

கால்நடைகளின் ‘வேகஸ்’ எனும் நரம்புகள் பாதிக்கப்படும் போது பசியின்மை, எடை குறைதல், இரைப்பை வீக்கம் மற்றும் குறைந்த அளவு சாணம் வெளியேறுதல் போன்ற உடல் நலக்குறைவுகள் உண்டாகும். இருதயத்தை பாதித்தால் பசியின்மை, வலியால் பற்களை கடிப்பது, கழுத்தில் உள்ள பெரு ரத்தக்குழாய் வீக்கம், கீழ் மார்பில் வீக்கம் போன்ற அறிகுறிகளால் கால்நடைகள் அவதிப்படுகின்றன.
பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை கால்நடைகள் உண்பதால் வயிறு நிறைவை ஏற்படுத்தும். இதனால் தீவனம் எடுப்பதில் நாளடைவில் நாட்டம் இருக்காது. நகர மயமாக்குதல் எனும் கொள்கைப்படி தற்போது மேய்ச்சல் நிலங்கள் குறைந்து வருகின்றன. இதனால் பசுந்தீவனங்களை அதிகம் விளைவிக்க வழியில்லை. கட்டுமான உபரிப்பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் சம்பந்தப்பட்ட பொருட்களை சாலை ஓரங்களில் வீசி எறிவதால் அவை கால்நடைகளுக்கு தீவனமாகின்றன.

குப்பையை துாக்கி வீசாதீர்

பிளாஸ்டிக், உலோகம், பாலிதீன் போன்ற அயற் பொருட்களால் கால்நடைகளுக்கு ஏற்படும் தீமையை தடுக்க பெரிய அளவில் பண்ணைகள் வைத்திருப்போர் தீவனம் நறுக்கும் இயந்திரங்களில் காந்தங்களை பயன்படுத்துவது நல்லது. கால்நடைகளுக்கு எல்லா காலங்களிலும் சரியான அளவு அடர் தீவனம் மற்றும் உலர் தீவனப் பொருட்களை தர வேண்டும். மேய்ச்சல் நிலங்களில் பாலிதீன் பைகள் துாக்கி எறிவதை தவிர்க்கவும் விழிப்புணர்வு வேண்டும்.
டாக்டர் வி.ராஜேந்திரன்
முன்னாள் இணை இயக்குனர் கால்நடை பராமரிப்புத்துறை

9486469044.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *