கழிவுநீரிலிருந்து குடிநீர்… விருதுநகர் `சாண்ட் ஃபில்டர்’

குடிநீருக்காக தமிழக மக்கள் அனைவரும் காலிக் குடங்களுடன் ஊர்ஊராய் அலைந்துகொண்டிருக்கும் வேளையில், அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டி என்ற கிராமத்தில் கழிவுநீரை சுத்திகரித்து குடிநீராகப் பயன்படுத்திவருகிறார்கள். அவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளாகக் கைகொடுத்திருப்பது சாண்ட் ஃபில்டர்.

கழிவுநீர்

அடித்தட்டு மக்கள் இன்று குடிப்பதற்கே தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். ஆயிரம் அடிக்கு மேல் ஆழ்துளைக் குழாய் கிணறுகள் அமைத்து தனியார் நிறுவனங்களும், தனிநபர்களும் ஒரு குடம் குடிநீரை 10 அல்லது 15 ரூபாய்க்குச் சர்வசாதாரணமாக வேன்களில் விற்பனை செய்துவருகின்றனர். இதனால் குடிநீர் விற்பனை செய்யும் வாகனங்களின் எண்ணிக்கையும், தண்ணீர் கேன் விற்பனையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

விருதுநகர்

குடிநீர் விநியோகம் செய்யும் பொறுப்பை தனியார் எடுத்துக்கொண்டுள்ளதால் அரசால் பொதுமக்களுக்குத் தேவையான குடிநீரை விநியோகம் செய்ய முடியவில்லை. இதனால் பல இடங்களில் 10 நாள் அல்லது 15 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே அரசால் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தினந்தோறும் தங்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படைத் தேவையான குடிநீர் கிடைக்காததால் எங்காவது ஓரிடத்தில் பொதுமக்கள் சாலைக்கு வந்து போராடும் சம்பவங்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

ஆனால், வறட்சி மாவட்டமான விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆத்திபட்டி என்ற கிராமத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு கடந்த 6 ஆண்டுகளாகப் பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது.

தண்ணீர்

இதுகுறித்து முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரான கோவிந்தராஜனிடம் கேட்டபோது, “ஆத்திபட்டி ஊராட்சியில் 5,500 வீடுகள் உள்ளன. ஆனால், சில ஆண்டுகளுக்கு முன் ஆயிரம் அடி தோண்டினாலும் தண்ணீர் கிடைக்கவில்லை. பல ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் முற்றிலும் வற்றிவிட்டது. அதேவேளையில் மக்களிடம் தினந்தோறும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் தேவை இருந்தது.

எனவே, கழிவுநீர் மேலாண்மை (waste water management) திட்டத்தைத் தொடங்கினோம். 2013-ம் ஆண்டு அரசு சார்பில் ரூ.10 லட்சம் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் அமைக்கப்பட்டது. ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வெளியேறும் கழிவுநீரை ஓரிடத்தில் இணைத்தோம். கழிவுநீர் செல்லும் வாய்க்கால் முழுவதும் ஆங்காங்கே நாணல், கல்வாழை, வெட்டிவேர் நட்டுவைத்தோம்.

தண்ணீர் - சாண்ட் ஃபில்டர்

பின்னர் 10 அடி நீளம் 10 அடி ஆழத்துக்குக் குழி அமைத்து சாண்ட் ஃபில்டர் முறையில் மணல், கரித்துண்டு, செங்கல், கூழாங்கல், ஜல்லி ஆகியவற்றை அந்தக் குழிக்குள் நிரப்பினோம். இறுதியாகக் கழிவுநீர் பூமிக்குள் செல்லும்போது பயன்படுத்தக்கூடிய வகையில் சுத்தமான குடிநீராக நமக்குக் கிடைக்கும். அந்தத் தண்ணீரை மீண்டும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீராகப் பொதுமக்களுக்கு வழங்குகிறோம். வீணாகும் தண்ணீரை இங்கே உள்ள மரங்கள் மற்றும் செடிகளுக்கு பாய்ச்சுவோம். எனவே, இங்கே கழிவுநீரே இல்லை என்ற நிலையை உருவாக்கியுள்ளோம்.

தற்போது போதிய மழையின்மை காரணமாக தண்ணீர் குறைவாகவே கிடைக்கிறது. பராமரிப்புச் செலவு மற்றும் மின்சார செலவு மட்டுமே ஒவ்வொரு மாதமும் பல ஆயிரங்களைத் தாண்டிவிடும். தற்போது ஒரு நாளைக்கு 500 முதல் 700 குடம் குடிநீர் விநியோகம் செய்கிறோம். எனவே, அனைத்துச் செலவுகளையும் சமாளிக்கும் வகையில் ஒரு குடம் தண்ணீர் 5 ரூபாய்க்கு வழங்குகிறோம். வேன் மூலமும் குடிநீர் விநியோகம் செய்கிறோம். செலவு போக மீதி முழுவதும் ஊராட்சிக்கு வருமானம். அந்தத் தொகையைக் கொண்டு வேறு ஏதாவது திட்டங்களைச் செயல்படுத்துவோம். கடந்த ஒன்றரை ஆண்டுகளாகக் கண்மாய் மற்றும் கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரப்படாமல் உள்ளது. இதைத் தூர்வாரினால் இன்னும் கூடுதலாக தண்ணீர் கிடைக்கும்” என்று தெரிவித்தார்.

ஆபரேட்டர் மணிகண்டனிடம் கேட்டபோது, தினமும் காலை 6 மணியிலிருந்து குடிநீர் வழங்குகிறோம். ஒரு குடம் 5 ரூபாய். ஒரு லிட்டர் நல்ல தண்ணீர் கிடைத்தால் 2 லிட்டர் தண்ணீர் வீணாகும். அந்தத் தண்ணீரை மீண்டும் பூமிக்குள்ளேயே அனுப்பி மறுபடியும் நல்ல தண்ணீராக எடுப்போம். அதிலிருந்து மீண்டும் வீணாகும் தண்ணீரை இங்கே உள்ள மரங்களுக்குப் பாய்ச்சுவோம். இதனால் இந்த இடமும் ஒரு பூங்காவாக மாறியுள்ளது எனத் தெரிவித்தார்.

நன்றி: பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *