கொய்யாவில் எலிகாது இலை நோய்

கொய்யாவில் ஏற்படும் எலிகாது இலைகளை கட்டுப்படுத்தலாம் என்று தோட்டக்கலைத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் (பொ) பொ.மணிமொழி விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

கடலூர் மாவட்டத்தில் அதிக அளவில் கொய்யா சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது பரவலாக மரத்தின் கிளைகளில் உள்ள இலைகள் பொன்மஞ்சள் நிறமாக மாற்றமடைந்து உதிர்ந்து விடுகின்றன.

மேலும் ஒருசில கிளைகளில் வழக்கமான இலைகளை விட எலியின்காது போன்ற வடிவம் கொண்ட சிறுசிறு இலைகள் காணப்படுகின்றன. இதனால் மகசூல் குறைவு ஏற்பட்டு நாளடைவில் மரங்கள் பட்டுப்போகவும் வாய்ப்புள்ளது. இதுபோன்ற பாதிப்பு நுண்ணூட்டச்சத்து குறைபாட்டினால் ஏற்படுகிறது.

இதனைக் கட்டுப்படுத்த துத்தநாகம் சல்பேட், மெக்னீசியம் சல்பேட், மேங்கனீஸ் சல்பேட் தலா 5 கிராம், காப்பர் சல்பேட், பெரஸ் சல்பேட் தலா 2.5 கிராம் என்றவாறு 1 லிட்டர் தண்ணீரில் கரைத்து நான்கு முறை தெளிக்க வேண்டும்.

முதல் முறை துளிர் பருவத்தில் தெளித்து ஒரு மாத இடைவெளிக்குப்பிறகு பூ பூக்கும் பருவம், பிஞ்சு பிடிக்கும் பருவம் மற்றும் காய் பருவம் ஆகிய தருணங்களில் கைத்தெளிப்பான் மூலம் காலை அல்லது மாலை வேளையில் தெளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *