சம்பங்கி சாகுபடி முறைகள்

விவசாயிகளுக்கு அதிக லாபம் ஈட்டித்தரும் சம்பங்கி மலர் சாகுபடி முறைகள் குறித்து சேரன்மகாதேவி தோட்டக்கலை உதவி இயக்குநர் தி.சு. பாலசுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

பல்வேறு அலங்காரங்கள், மாலைகள், பூங்கொத்துகளில் பயன்பட்டு, நல்ல லாபமும் தரும் சம்பங்கி மலர் சாகுபடி முறைகளை விவசாயிகள் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

sampangi

 

 

 

 

 

 

 

சம்பங்கி மலர் சாகுபடிக்கு ஏற்ற காலம் ஜூன், ஜூலை மாதங்கள் ஆகும். மெக்சிகன் சிங்கிள், சிருங்கார், பிரஜ்வால், பியர்ள் டபுள், சுவாசினி, வைபவ் ஆகிய ரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை. மேலும், நல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் மண், 6.5 முதல் 7.5 வரை உள்ள கார அமிலத்தன்மை ஏற்றது.

25 முதல் 30 கிராம் எடையுள்ள கிழங்குகள் நடவுக்கு ஏற்றவை. ஏக்கருக்கு 44,800 கிழங்குகள் தேவைப்படும்.

45 செ.மீ. இடைவெளியில் பார் பிடித்து, பாரின் சரிவுகளில் 20 செ.மீ. இடைவெளிகளில் இரண்டரை செ.மீ. ஆழத்தில் ஊன்ற வேண்டும். ஜூன், ஜூலை மாதங்களில் கிழங்கு ஊன்றுதல் நல்லது. கிழங்கு எடுத்து 30 நாள் கழித்து ஊன்ற வேண்டும்.

ஏக்கருக்கு 10 டன் தொழு உரம், ஏக்கருக்கு 20 கி.கி. தழைச்சத்து தரவல்ல 44 கிலோ யூரியா, 80 கி.கி. மணிச்சத்து தரவல்ல 500 கிலோ சூப்பர் பாஸ்பேட், 80 கி.கி. சாம்பல் சத்து தரவல்ல 135 கிலோ முரேட் ஆப் பொட்டாஷ் ஆகிய ரசாயன உரங்களை அடியுரமாக இடவேண்டும்.

இரண்டு மாதங்கள் கழித்து ஒரு முறையும், பின் மூன்று மாதங்கள் கழித்து ஒரு முறையும், மீண்டும் மூன்று மாதங்கள் கழித்து ஒரு முறையும் என மூன்று முறை 44 கிலோ யூரியாவை மேலுரமாக இட வேண்டும்.

பயிர் பாதுகாப்பு:

நூற்புழு தாக்குதல் சம்பங்கியில் பிரச்னை தரும் ஒன்று. பகுப்பாய்வு  மூலம் நூற்புழு தாக்குதலை உறுதி செய்துகொண்டு, அதனைக் கட்டுப்படுத்த செடிக்கு ஒரு கிராம் வீதம் கார்போ பியூரான் குருணை மருந்தை வேர்மண்டலத்திற்கு அருகில் வைத்து நீர் பாய்ச்சவும்.

இது இரண்டாண்டுப் பயிர். நல்ல முறையில் பராமரிப்பதன் மூலம் மேலும் ஓராண்டு பலன் தரும். தினசரி மலர் பறிக்க வேண்டும். ஏக்கருக்கு ஆண்டுக்கு 6 டன் வரை மகசூல் எடுக்கலாம்.

நன்றி:  தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *