வறண்ட நிலத்தில் திராட்சை சாகுபடி!

“நாங்க சொட்டு நீர் பாசனத்துல திராட்சையை பயிரிட்டிருக்கோம். இயற்கை முறையில சாகுபடி செய்றதால எதிர்பார்த்த மகசூலை விட அதிகமா கிடைக்குது.’’

Panneerselvam

Panneerselvam

உள்ளங்கையில் உலகை உருட்டிக்கொண்டிருக்கும் உலகில், விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது. ஆனால், வேலையாட்களை எதிர்பார்க்காமல், தனது உறவினர்கள் மூலமாகத் திராட்சை சாகுபடி செய்து, வறண்ட நிலத்திலும் நல்ல லாபம் பார்த்து வருகிறார் பன்னீர் செல்வம்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பட்டணம் கிராமம். ஊரில் கேட்டவுடன் அவரது திராட்சை தோட்டத்துக்கு வழி சொல்கிறார்கள். தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பன்னீர் செல்வத்தைச் சந்தித்தோம்.

“இதுதான் சொந்த ஊர். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்துல டிரைவரா வேலை செஞ்சேன். ஓய்வுக்கு அப்புறம் என்ன பண்ணலாம்னு யோசிக்கும்போது, அப்பா செஞ்ச திராட்சை விவசாயமே பாக்கலாம்னு தோணிச்சு. உடனே தொடங்கிட்டோம். திடீர்னு எல்லா பழமும் அழுகிப் போச்சு. என்ன பண்றதுன்னு ஒண்ணுமே எங்களுக்குப் புரியல. அப்போதான் தேனி போய், திராட்சையை எப்படி சரியா வளர்க்கணும், எப்படி பராமரிக்கணும்னு கத்துகிட்டு வந்தேன்.

Grapes

திராட்சை செடி பூப்பூத்திருந்த நேரம் பார்த்து தொடர்ந்து ரெண்டு நாள் அடை மழை. எல்லாம் வீணா போச்சு. தன் முயற்சியை எப்பவும் விடாத விக்ரமாதித்தனை போல, `இதுல இறங்கியாச்சு, நிச்சயம் ஜெயிக்கணும்’னு அந்த நாள்ல எடுத்த முடிவுதான் இப்போ இங்க வரைக்கும் என்னைக் கொண்டு வந்து சேர்த்துருக்கு.

தேனி, கம்பம், திண்டுக்கல்னு வெளியூர் போய், அங்க சொல்ற சில வழிமுறைகளைக் கத்துகிட்டு அத நம்ம தோட்டத்துல செய்யும்போது அதோட பலன் அதிகமா இருக்குது. விவசாயத்தை பொறுத்த வரை திராட்சை மட்டுமில்ல, எந்தப் பயிரோ அல்லது செடியோ அதுக்கு இயற்கை உரங்களைக் கொடுக்கும் போது நல்ல பலன் கிடைக்கிது. பன்னீர் திராட்சையை வெற்றிகரமா சாகுபடி செஞ்சிட்டு வர்றதுக்கு முக்கிய காரணம் எங்க குடும்பம் தான். எங்க தோட்டத்துல வேலையாள் யாரும் இல்லை. எல்லாம் மாமன், மச்சான், அண்ணன் பையன், மகன்னு எல்லா வேலையும் நாங்கதான் செய்றோம்.

செடி நடவுல இருந்து அறுவடை வரைக்கும் உரம் போடுறது, மருந்து அடிக்குறது, கொடி படரும்போது வெட்டி, பந்தல்ல படரவிடுறதுன்னு எல்லா வேலையும் நாங்க எல்லாரும் ஒண்ணா சேர்ந்துதான் செய்வோம்.

நான் விவசாயத்துல வெற்றி அடைஞ்சதுக்கு என் குடும்பமும் முக்கிய காரணம். அவங்க காட்டுற அக்கறைதான், என்னை இந்த இடத்துக்குக் கொண்டு வந்துருக்கு.

திராட்சை செடிக்கு எந்த அளவுக்கு உரம் போடுறோமோ, அந்த அளவுக்கு நல்ல பலன் கிடைக்கும். ஆடு, மாடு சாணம்,கடலைப் பிண்ணாக்கு, வேப்பம் பிண்ணாக்கு உரமா போடுறது முக்கியம். சில இடங்கள்ல செடியோட வேர் அழுகி போகும். வேப்பம் பிண்ணாக்கைத் தொடர்ந்து கொடுத்தா வேர் அழுகல் வராது.’’ என்றவர், சாகுபடி குறித்து விரிவாக விளக்கினார்.

grapes
grapes

திராட்சை சாகுபடி செய்வது எப்படி ?

“திராட்சை, செம்மண்ணில் சிறப்பாக வளரும். செடியை நடவு செய்யும்போது வரிசைக்கு வரிசை, செடிக்கு, செடி10 அடி இடைவெளி விட்டு நட வேண்டும். செடி நட்டு அது கொடியாகப் படர்ந்து அறுவடைக்கு ஒன்றரை வருடம் ஆகும். அப்போது கடலைப் பிண்ணாக்கை அளவுக்கதிகமாக இல்லாமல் சரியான விதத்தில் உரமாக இடும்போது நல்ல பலன் கிடைக்கும். கொடி பந்தலை அடைந்த பிறகு, கட்டிங் செய்து பந்தலில் நன்கு படருமாறு செய்ய வேண்டும். பறவை தாக்குதலிலிருந்து தப்பிக்க, தோட்டத்தைச் சுற்றிலும் வலை அமைக்க வேண்டும்.

மழை மாதங்களான ஐப்பசி, கார்த்திகையில் கவனமாக இருக்க வேண்டும். அப்போது பூக்கள் மலர்ந்து இருக்கும் அல்லது பழம் பழுக்கும் நிலையில் இருக்கும். அந்தச் சமயத்தில் மழை வந்தால் அனைத்தும் வீணாகிவிடும்.

“நாங்க சொட்டு நீர் பாசனத்துல திராட்சையை பயிரிட்டிருக்கோம். இயற்கை முறையில சாகுபடி செய்றதால எதிர்பார்த்த மகசூலை விட அதிகமா கிடைக்குது.

Grapes

வருஷத்துக்கு மூணு தடவை திராட்சை அறுவடை செய்யலாம்.1 முறைக்கு ரெண்டரை டன் முதல் 3 டன் வரை கிடைக்கும். வருஷத்துக்கு ஒரு ஏக்கருக்கு 4 லட்சம் வரையும் கிடைக்குது. கடையில விற்கிற விலையை விடக் குறைஞ்ச விலைக்கு விற்கிறோம். இடைத்தரகர் யாரும் இல்லாம விற்கிறதுனால, அக்கம் பக்கத்து ஊருல இருந்து நிறைய பேர் வந்து வாங்கிட்டு போறாங்க” என்று நம்பிக்கையுடன் முடித்தார் பன்னீர்செல்வம்.

நன்றி: பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *