ஆண்டுக்கு 400 காய்கள் காய்க்கும் தென்னை!

தென்னை செழித்தால்… பண்ணை செழிக்கும்’ என்று கிராமத்தில் சொல்வார்கள். அதை வாழ்க்கையையும் செழிப்பாக்கி இருக்கிறார், கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி தென்னை விவசாயி ராஜேந்திரன். பொள்ளாச்சி பகுதியே செழிப்பான பூமி. அதிலும் ஆழியார் அணையை ஒட்டிய பகுதி என்றால், கேட்கவா வேண்டும்! இங்கே இருக்கும் புளியங்கண்டி பகுதியில்தான் பசுமை கட்டி நிற்கிறது, ராஜேந்திரனின் தென்னந்தோப்பு!

இங்கு மட்டுமல்ல பகுதி முழுக்கவே தென்னந்தோப்புகள் செழிப்பாகத்தான் நிற்கின்றன. ஆனால், ‘தென்னையில் பெரிதாக லாபம் இல்லை’ என்பதுதான் பெரும்பாலான விவசாயிகளின் குரலாக இருக்கிறது. அது நூற்றுக்கு நூறு உண்மை என்பது போலத்தான் தேங்காயின் விலை நிரந்தரமாக 2 ரூபாய் 3 ரூபாய் என்றே நீடித்துக் கொண்டிருக்கிறது! ஏதோ வரவுக்கும் செலவுக்கும் சரி என்கிற வகையில்தான் பலரும் தென்னை விவசாயத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்!

இத்தகைய நிலையில், ராஜேந்திரன் மட்டும் எப்படி தென்னை விவசாயத்தில் லாபத்தை சாத்தியமாக்கிக் கொண்டிருக்கிறார்? மஞ்சளும், பச்சையுமான இளநீர் குலைகளை ஆட்கள் லாரியில் ஏற்றிக்கொண்டிருக்க… அதைக் கணக்கெடுத்துக் கொண்டிருந்த ராஜேந்திரன், லாரிகளை அனுப்பிவிட்டு வந்து, நம்மிடம் அமர்ந்தார்.

பொள்ளாச்சி காய்க்கு நல்ல கிராக்கி !

”எனக்கு பூர்விகமே இந்த ஊர்தான். எங்க பகுதியில விளையிற தேங்காய்க்கும், இளநிக்கும் தமிழ்நாடு முழுக்க நல்ல வரவேற்பு இருக்கு. பொள்ளாச்சி மண்ணுக்கும், இங்க கிடைக்கற தண்ணிக்கும், சீதோஷ்ணத்துக்கும் தென்னை நல்லா வருது. அதிலும் இளநி சக்கைப் போடு போடுதுங்க. ஊரைச்சுத்தி எனக்கு நிறைய தென்னந்தோப்பு இருக்குது. ஒரு இடத்துல இருக்கற ஆறு ஏக்கர் தோப்புல 30 வயசுல நாட்டுத் தென்னை மரங்கள் இருக்கு. அதுல கிடைக்கிற காயை கொப்பரைக்குப் பயன்படுத்துறோம்.

இந்த இடம் ஆறரை ஏக்கர். இதுல முன்னாடி டி.ஜே. ரகத்தைத்தான் வெச்சுருந்தேன். ஏழு வருஷத்துக்கு முன்ன, ‘ராம் கங்கா’ ரகத்தைப் பத்திக் கேள்விபட்டு, 200 கன்னுகளை வாங்கி நடவு செஞ்சேன். இது மூணு வருஷத்துல காய்ப்புக்கு வர்ற ரகம். இதுல வருஷத்துக்கு சராசரியா 300 தேங்காய் கிடைக்குது. கொப்பரை உற்பத்தி, இளநீர் தேவை ரெண்டுக்கும் ஏத்த ரகம். பொதுவா இளநியா வெட்டுறப்போ, ஒரு மரத்துல இருந்து …. 200 காய்ங்கதான் கிடைக்கும். ஆனா, ராம் கங்கா ரகத்துல

400 காய்கள் வரைக்கும் கிடைக்கும். அதுதான் இந்த ரகத்தோட சிறப்பம்சம். திராட்சைக் குலைபோல காய் தொங்கறதப் பாருங்க” என்று சந்தோஷத்தோடு சொன்ன ராஜேந்திரன்… ராம் கங்கா ரக தென்னை மரங்களை நோக்கி கை நீட்டினார். மரம் கொள்ளாத அளவுக்குத் தொங்கிக் கொண்டிருந்தன, காய்கள்!

”சொன்னா நம்பமாட்டீங்க… இந்த ரகத்தை உருவாக்கினது நம்ம தமிழ்நாட்டைச் சேர்ந்த உமாபதிங்கிற விவசாயிதான்” என்று ஆச்சரியப்படுத்திய ராஜேந்திரன், தென்னை பராமரிப்பு விஷயங்களைச் சொல்லத் தொடங்கினார்,

நேரடி விற்பனையில் கூடுதல் லாபம் !

”இந்த ரகத்துல ஒரு மரத்துக்கு தினமும் 150 லிட்டர் தண்ணி கொடுத்தாகணும். ஆறு மாசத்துக்கு ஒரு தடவை 5 கிலோ கோழி எருவையும், 5 கிலோ தொழுவுரத்தையும் கொடுக்குறேன். யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ் மூணையும் கலந்து வருசத்துக்கு ஒரு தடவை கொடுக்குறேன்.

ஊசிவண்டு, காண்டாமிருக வண்டுகளை இனக்கவர்ச்சிப் பொறி மூலமா கட்டுப்படுத்திடுவேன். 25 நாளுக்கு ஒரு தடவை இளநி வெட்றேன். ஒரு இளநி பத்து ரூபாயில இருந்து பதினஞ்சு ரூபா வரைக்கும் விலைபோகுது. வால்பாறை சாலையில நானே ஒரு இளநி கடை வெச்சுருக்கேன். அங்க ஒரு இளநி 20 ரூபாய்னு விக்கிறேன். தினமும் 200 இளநி வரைக்கும் வித்துடுது. தென்னை விவசாயிகள், மொத்தத்தையும் முத்த விட்டு தேங்காயா விக்காம, 25 சதவிகித அளவுக்கு இளநீரா வித்தா நல்ல லாபம் பாக்க முடியும். இதை என்னோட அனுபவத்துல சொல்றேன். இளநியா விக்கிறதுனாலதான் எனக்கு தென்னையில நல்ல லாபம் கிடைக்குது” என்ற ராஜேந்திரன் நிறைவாக,

”இயற்கை பாதி, செயற்கை பாதினு விவசாயம் செய்றேன். முழுக்க முழுக்க இயற்கை முறையில இதற்கான மாற்று வழி இருந்தா… நிச்சயம் அதைக் கடைபிடிக்க நான் தயாராவே இருக்கேன். ஏன்னா… அதன் மூலமா இன்னும் கொஞ்சம் செலவு குறைஞ்சா… கூடுதல் லாபம்தானே!” என்றார்.

இதைக் கேட்டதுமே..  நாம், ‘இயற்கை விவசாய வல்லுநர்’ மது. ராமகிருஷ்ணன் மற்றும் ‘அரசூர்’ சோமசுந்தரம் ஆகியோரிடம் உடனடியாக செல்போன் மூலமாக ராஜேந்திரனிடம் பேச வைத்தோம். அவர்கள் இயற்கைத் தொழில்நுட்பங்கள் குறித்து விரிவாக அவருக்கு எடுத்துரைத்தனர். அதையெல்லாம் கேட்டுக் கொண்டு நம்மிடம் பேசிய ராஜேந்திரன், ”இதுவரைக்கும் அவங்க சொன்ன அத்தனை விஷயங்களுமே ரொம்ப திருப்திகரமானதா இருக்கு. அவங்களோட பண்ணைக்கு நேர்ல போய் பாத்துட்டு வந்து நானும் முழு இயற்கை விவசாயியா மாறப்போறேன்” என்று ஆவல் பொங்கச் சொன்னார்.

உப்பு நீருக்கும் ஏற்ற ரகம்…

 ராம்கங்கா ரகத்தை உருவாக்கிய உமாபதி, பல்லடம் அடுத்துள்ள நாவிதன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர். ”ஆந்திர மாநிலம் கோதாவரி பகுதியில் இருக்கும் ‘கங்கா பாண்டம்’ என்கிற குட்டைரகம், அதிக மகசூலைக் கொடுக்கக் கூடியது. அந்த ரகத்தோடு கேரள மாநிலத்தின் மேற்கு கடற்கரைப்பகுதி நெட்டை ரக தென்னையை இணைத்து, நான் உருவாக்கியதுதான், ‘ராம் கங்கா’. இது மூன்று ஆண்டுகளில் காய்ப்புக்கு வருவதுடன் அதிகளவு சுவையான தண்ணீர் உள்ள இளநியைக் கொடுக்கும். முற்றிய தேங்காயில் அதிக கொப்பரையும் கிடைக்கும் (100 தேங்காய்க்கு 18 கிலோ கொப்பரை). உரித்த தேங்காயின் எடை 600 கிராம் அளவில் இருக்கும்.

27 அடி இடைவெளியில் மூன்று கன அடி அளவுக்குக் குழியெடுத்து அதில், தொழுவுரம்-5 கிலோ, மணல் கலந்த மண்-5 கிலோ, தேவையான நுண்ணூட்டச் சத்துக்கள் ஆகியவற்றை இட்டு ஒன்றரையடி ஆழத்தை நிரப்பி, நாற்றை நடவு செய்ய வேண்டும். இப்படி நடவு செய்தால், ஒரு ஏக்கர் நிலத்தில் 63 நாற்றுகளை நடலாம். சொட்டுநீர்ப் பாசனம் அமைத்துக் கொள்வது நல்லது. இது உப்புத் தண்ணீரிலும் வளரக்கூடிய ரகம். அதேசமயம், அதிக தண்ணீர் வசதியுள்ள விவசாயிகள் மட்டுமே இதைப் பயிரிட முடியும்.

மத்திய தென்னை ஆராய்ச்சி நிலையம் இந்த ரகத்துக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஒரு நாற்றை உற்பத்தி செய்ய இரண்டு ஆண்டுகள் ஆகும். ஒரு நாற்றை

250 ரூபாய் விலைக்கு விற்பனை செய்கிறேன். இந்த ரகத்தை நடவு செய்த விவசாயிகள் அனைவரும் நல்ல மகசூல் எடுத்து வருகிறார்கள்” என்றார், உமாபதி.

 ராம் கங்காவுக்கு தனி கிராக்கி…

ராஜேந்திரன் தோப்பில் நாம் சந்தித்த மொத்த இளநீர் வியாபாரி சக்திவேல், ”பொள்ளாச்சி பகுதியில இருந்து மட்டும் கரூர், திருச்சி, சென்னைனு தினமும் ஒரு லட்சம் இளநி போகுது. இவரோட தோப்பில் மட்டுமே, மாசம் 7 ஆயிரம் இளநி வெட்டுறோம். பொள்ளாச்சி இளநிக்கு தனி கிராக்கி இருக்கு. இந்த காய்கள்ல அதிகமா தண்ணி இருக்கறதுதான் காரணம். அதுலயும் இந்த ராம் கங்கா இளநிக்கு தனி கிராக்கி இருக்கு. கடைக்காரங்க போனைப் போட்டு, ‘போன தடவை இறக்குன காயையே இறக்குங்க’னு இந்த ரக இளநியைக கேட்டு வாங்கறாங்க. அந்தளவுக்கு இதோட சுவை தூக்கலா இருக்கு. அதனால இந்த ரகத்துக்குக் கூடுதலா 50 காசு கொடுத்து வாங்கிக்கறாங்க” என்று சொன்னார்!

 

தொடர்புக்கு,
எஸ்.ராஜேந்திரன்,
செல்போன்: 09865997070

நன்றி: பசுமை விகடன்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “ஆண்டுக்கு 400 காய்கள் காய்க்கும் தென்னை!

Leave a Reply to Sivagami Pichappan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *