தென்னை வாடல் நோய் தடுக்கும் வழிமுறைகள்

தென்னையில் தற்போது புதிதாகப் பரவிவரும் வாடல் நோயைக் கட்டுப்படுத்தும் முறைகளை வேளாண் அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.

தமிழகத்தில் கோயம்புத்தூர், திருப்பூர், கிருஷ்ணகிரி, மதுரை, ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை பயிரிடப்பட்டுள்ளது. தென்னை மரங்களில் எரிப்பூச்சிகள், கருந்தலைப் புழுக்கள், செம்பான் சிலந்திகள் போன்ற பூச்சிகளின் தாக்குதலைப் போல், தற்போது தஞ்சாவூர் வாடல் நோய் எனும் பென்சில் பாயிண்ட் நோய் தாக்குதல் பரவலாகிவருகிறது. இது தென்னை விவசாயிகளுக்குப் பொருளாதார இழப்பை ஏற்படுத்திவருகிறது.

இந்த நோய் தொடர்ச்சியாகப் பரவி வருவதால் தென்னை விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஏற்கெனவே போதிய மழையின்றித் தென்னை மரங்கள் காய்ந்துவரும் நிலையில், இந்த நோய் தாக்குதல் விவசாயிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Courtesy: Hindu
Courtesy: Hindu

பாதிப்புகள்

தென்னை மரங்களை வாடல் நோய் தாக்குதலில் இருந்து தடுப்பது குறித்துக் கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சபா நடேசன் விளக்குகிறார்:

தென்னந்தோப்புகளைச் சரிவரப் பராமரிக்காததாலும், உர நிர்வாகம், பூச்சி நோய் நிர்வாகம் மேற்கொள்ளாததாலும், சரியான முறையில் வடிகால் வசதி செய்யாததாலும், உழவு சார்ந்த நடை முறைகளைக் கடைப்பிடிக்காததாலும் இந்தப் பென்சில் பாயிண்ட் நோய் தாக்குதல் தென்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட மரங்களின் வளர்ச்சி குன்றியும், ஓலைகளின் அளவு சிறுத்தும், மஞ்சள் நிறமாக மாறிக் காய்ந்தும் விடுகின்றன. விளைச்சல் 100 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டு, மரத்தின் உச்சிப் பகுதி குறைந்துவிடுகிறது. இதனால், காய்க்கும் திறன் வெகுவாகக் குறைந்து இறுதியில் மரங்கள் காய்ந்தேவிடுகின்றன.

தடுக்கும் முறைகள்

இந்த நோயால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களின் வேர்களுக்கு அருகில் சணப்பை அல்லது பசுந்தாள் பயிர்களை வளர்த்து, மடக்கி உழவு செய்ய வேண்டும்.

ஒரு மரத்துக்கு 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 5 கிலோ மண்புழு உரம் இட வேண்டும். ஒரு மரத்துக்கு ஒரு கிலோ பொட்டாஷ் வீதம் 4 மாதங்களுக்கு ஒரு முறை இட்டு, நீர் பாய்ச்ச வேண்டும்.

ஹெக்சா கோணோசோல் ஒரு மில்லி அல்லது ஆரியோபஞ்சின் 2 கிராம் மற்றும் மயில்துத்தம் ஒரு கிராம் – இதில் ஏதாவது ஒன்றை 100 மில்லி தண்ணீரில் கலந்து வேர் மூலம் செலுத்த வேண்டும். இவ்வாறு செய்தால் இந்த நோயைக் கட்டுப்படுத்தலாம்.

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *