மதிப்புக்கூட்டல் மூலம் தேங்காய் ஒன்றுக்கு 40 ரூபாய்!

“ஒரு தேங்காயின் அதிகபட்ச விலை 15 ரூபாய். இதுதான் இதுவரை தென்னை விவசாயிகளுக்குக் கிடைத்துவந்தது. ஆனா, அதை மாற்ற முடியும். தேங்காய் ஒன்றிலிருந்து 40 ரூபாய் வரை லாபம் பார்க்க முடியும்” என்கிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த பொறியியல் வல்லுநரும் ஏற்றுமதியாளருமான ராஜரத்தினம்.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அடுத்துள்ள துங்காவி கிராமத்தில் உள்ள தென்னைநார்க் கட்டித் தொழிற்சாலையில் அவரைச் சந்தித்தோம். “எனக்குப் பூர்வீகம் உடுமலைப்பேட்டை. பொறியியல் படிப்பு முடித்துக் கோயம்புத்தூரில் உள்ள கம்பெனியில் வேலைபார்த்தேன். ஒரு கட்டத்துல விருப்ப ஓய்வு கொடுத்துவிட்டு, தென்னைசார் தொழில் இயந்திரம் மற்றும் மதிப்புக்கூட்டல் தொழிலில் இறங்கி நடத்திவருகிறேன். பொள்ளாச்சிப் பகுதியில் முற்றிய தேங்காய்களை உடைத்துக் களத்தில் காயவைத்து, கொப்பரைகளை எண்ணெய் ஆலைகளுக்கு அனுப்பும் தொழில் பல ஆண்டுகளாக நடக்கிறது. 1996-ம் ஆண்டுக்குப் பிறகு தென்னைநார் உற்பத்தித் தொழில் பரவலாகத் தொடங்கப்பட்டது.

 

தேங்காய்நார்க் கட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில்..
தேங்காய்நார்க் கட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில்..

முற்றிய தேங்காய்களை உரிக்கும்போது கிடைக்கும் மட்டைகளை அரைத்து மஞ்சியாக மாற்றி, பேரல்களாகக் கட்டுவார்கள். அதைக் கயிறு, மெத்தை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மூலப்பொருளாக அனுப்புவார்கள். தென்னைநார் உற்பத்தி செய்யப்படும்போது மரத்தூள் போன்று காட்சி தரும் கழிவுத் துகள் வெளியாகும். எதற்கும் பயனில்லாத அதைப் புறம்போக்கு நிலங்களில் மலைபோல் குவித்து வைத்துத் தீமூட்டிச் சாம்பலாக்கி அழிப்பார்கள். தேவையில்லை என்று சாலையோரம் கொட்டி, எரிக்கப்பட்ட அந்தக் கழிவுகள்தான் இன்றைக்குத் தென்னைநார்க் கட்டிகளாக உலகமெங்கும் பயணிக்கிறது.

அப்போது நான் கோயம்புத்தூரில் நூற்பாலை இயந்திரங்கள் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் பொறியாளர் வேலையிலிருந்தேன். அந்த நேரத்தில், வேறு வேலையாக எங்கள் கம்பெனிக்கு வெளிநாட்டுக்காரர் ஒருவர் வந்தார். அவர் கையில் தென்னைநார்க் கட்டி (காயர் பித்) ஒன்றையும் கொண்டுவந்தார். எங்க கம்பெனிக்குச் சம்பந்தமில்லாத பொருள் அது. அதனால, அவரிடம் அதுகுறித்துக் கேட்டேன்.

அவர், ‘எங்க நாட்ல விவசாயம் செய்யப் போதிய மண்வளம் இல்லை. அதனால, இதுபோன்ற தென்னைநார்க் கட்டிகளைப் பயன்படுத்திச் செடிகள் வளர்க்கிறோம்’ என்று பதில் சொன்னார். மேலும், ‘தென்னை மரங்கள் அதிகம் உள்ள தமிழ்நாட்டில் தென்னை நார்க்கட்டி எங்கு கிடைக்கும் எனத் தேடி வருகிறேன். அதற்கான சாம்பிள் காட்டவே இதைக் கொண்டுவந்துள்ளேன். அதற்கான தேவை வெளிநாடுகளில் அதிகம் இருக்கிறது’ என்றார்

தேங்காய் மட்டைகளுடன் ராஜரத்தினம்
தேங்காய் மட்டைகளுடன் ராஜரத்தினம்

அந்தக் காலகட்டத்தில் தென்னைநார்க்கட்டித் தொழிலில் வெகுசிலரே ஈடுபட்டுவந்தனர். ஏதாவது தொழில் ஒன்றைச் சொந்தமாக ஆரம்பிக்க வேண்டும் என்கிற எண்ணத்திலிருந்த எனக்கு, தென்னை நார்க்கட்டித் தயாரிப்பு சிறப்பாக இருக்கும் எனத் தோன்றியது. ஒரு கட்டத்தில் வேலையை விட்டுவிட்டு, தொழிற்சாலை தொடங்கினேன். ஆனா, தென்னைநார்க் கட்டிகள் தயாரிப்பு இயந்திரங்கள் கிடைப்பது சிரமமாக இருந்தது. அடிப்படையில் நான் பொறியாளர் என்பதால் நானே இயந்திரங்களை வடிவமைத்துச் சொந்தமாகத் தயாரிக்க முடிவு செஞ்சேன். வங்கியில் கடன் பெற்று, கோயம்புத்தூரில் இயந்திரத் தயாரிப்புத் தொழிற்சாலை அமைச்சேன். ஆறு மாசத்துல இயந்திரத்தைத் தயாரிச்சு, தென்னை நார்க்கட்டி உற்பத்தியைத் தொடங்கினேன். இலங்கை, தாய்லாந்து, வியட்நாம்னு தென்னை அதிகம் விளையும் வெளிநாடுகளுக்குச் சென்று வந்தேன். அங்கு ஆய்வு செஞ்சதுல, அந்த நாடுகள்ல தென்னை நார்க்கட்டித் தயாரிப்பு இயந்திரங்களோட தேவை அதிகம் இருப்பதைத் தெரிஞ்சுகிட்டேன். அங்குள்ள தொழில்முனைவோர் சிலரை இங்கு வரவழைச்சு, இயந்திரங்களோட செயல்பாடுகளை விளக்கினேன்.

தேங்காய் நீருக்கான தேவை வெளிநாடுகளில் அதிகம் உள்ளது. தேங்காய் விலை சில சமயங்களில் வீழ்ச்சி அடைகிறது. தேங்காய் ஒன்றின் அதிகப்பட்ச விலையே 15 ரூபாய்தான்.

அதுல திருப்தி அடைஞ்ச வெளிநாட்டினர் பலரும் இயந்திரங்கள் கேட்டார்கள். புதிய புதிய இயந்திரங்களைத் தயாரித்துத் தேவையுள்ள நாடுகளுக்கு அனுப்பினேன். தொடர்ந்து தயாரித்தும் வருகிறேன். நான் இதுவரை 600 இயந்திரங்களை உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் விற்பனை செய்துள்ளேன். இந்தத் தொழில் ஒருபுறம் நடந்தாலும், நடுத்தர மற்றும் சிறு விவசாயிகளையும் தென்னை சார் தொழில் முனைவோராக மாற்ற வேண்டும் என நினைத்தேன்.

தினசரி 1,000 முதல் 10,000 தேங்காய் வரை மதிப்புக்கூட்டல் செய்யும் விதமாகச் சிறிய இயந்திரங்களைத் தயாரித்துவருகிறேன். ‘தென்னைசார் தொழில்கள் ஆராய்ச்சிக் குழு’ ஒன்றை எங்கள் நிறுவனம் மூலம் உருவாக்கி அதன் வாயிலாகத் தென்னை விவசாயிகளைச் சந்தித்து, மதிப்புக்கூட்டல் குறித்த விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டும் கூட்டங்களை நடத்தி வருகிறோம். அதேநேரம், எங்கள் தொழிற்சாலையில் தென்னைநார்க் கட்டிகளை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்துவருகிறோம்’’ என்றவர் தொடர்ந்து தென்னை விவசாயிகளுக்கான சில ஆலோசனைகளையும் கூறினார்.

தேங்காய் நீர்

‘‘புட்டியில் அடைக்கப்பட்ட தேங்காய் நீருக்கான தேவை வெளிநாடுகளில் அதிகம் உள்ளது. பொள்ளாச்சி, உடுமலை, காங்கேயம் பகுதிகளில் மட்டும் சிறிதும் பெரிதுமாக ஐந்நூறுக்கும் மேற்பட்ட கொப்பரை உற்பத்திக் களங்கள் உள்ளன. நாள் ஒன்றுக்குச் சராசரியாக 30 லட்சம் முற்றிய தேங்காய்கள், அந்தக் களங்களில் உடைக்கப்படுகின்றன. முற்றிய தேங்காய் ஒன்றிலிருந்து 100 முதல் 150 மில்லி நீர் கிடைக்கும். 30 லட்சம் தேங்காய் மூலம் குறைந்தபட்சமாக 3 லட்சம் லிட்டர் தேங்காய் நீர் கிடைக்கும். இப்போதுவரை அந்தத் தண்ணீர் எந்தப் பயனும் இல்லாமல் வீணாக்கப்பட்டு வருகிறது.‘‘வீணாகப்போகும் முற்றிய தேங்காய் நீருக்கு விலை கொடுத்தால் களம் வைத்திருப்பவர்களும் ஆர்வத்துடன் சேகரித்து வைப்பார்கள்.’’

ஆனா, அதையே நாம் ஒரு தொழிலாக மாற்ற முடியும். முற்றிய தேங்காய் நீரில் படிந்திருக்கும் எண்ணெய்த் தன்மை காரணமாக அதன் சுவை மாறியிருக்கும். அதற்கான இயந்திரம்மூலம் அதைச் சுத்திகரிப்புச் செய்து பதப்படுத்திப் புட்டியில் அடைத்து ஏற்றுமதி செய்யலாம். நாள்தோறும் களங்களுக்குச் சென்று அங்கு கிடைக்கும் தேங்காய்நீரைச் சேகரித்துக்கொள்ளலாம். வீணாகிப்போகும் நீருக்கு விலை கொடுத்தால் களம் வைத்திருப்பவர்களும் ஆர்வத்துடன் சேகரித்து வைப்பார்கள்.

தேங்காய்ப்பால், வெர்ஜின் ஆயில், தேங்காய்த் துருவல், ரெடிமேடு சட்னின்னு மதிப்புக்கூட்டல் பொருள்களைத் தேங்காயிலிருந்து தயாரிக்க முடியும். அதற்கான சிறிய இயந்திரங்களையும் அதில் தயாரிக்கப்பட்ட தென்னை சார் பொருள்களையும், கோயம்புத்தூர் அடுத்த வேடபட்டியில் இயங்கிவரும் எங்கள் நிறுவனத்தில பார்வைக்கு வைத்துள்ளோம். எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும், அங்கு வந்து பார்வையிடலாம், ஆலோசனை பெறலாம்’’ என்றவர் நிறைவாக,

‘‘மா, கொய்யா, எலுமிச்சை போன்ற பழவகைகள் ஆண்டு முழுவதும் கிடைக்காது. பருவகாலத்தில மட்டும்தான் கிடைக்கும். ஆனா, தேங்காய் ஆண்டு முழுவதும் கிடைக்கும். தென்னைசார் தொழில்கள் செய்பவர்களுக்கு மூலப்பொருளான தேங்காய் உள்ளூரிலேயே கிடைக்கும்.

குறிப்பாகத் தேங்காய் விலை சிலசமயம் வீழ்ச்சி அடைந்துவிடுகிறது. தேங்காய் ஒன்றின் அதிகப்பட்ச விலையே 15 ரூபாய்தான். அதே நேரம், தேங்காய் நீர், வெர்ஜின் ஆயில், தேங்காய்ப் பால், துருவல் என்று மதிப்புக்கூட்டல் செய்து விற்பனை செய்தால், தேங்காய் ஒன்றுக்கு 40 ரூபாய் கிடைக்கும்’’ என்றபடி மகிழ்ச்சி பொங்க விடை கொடுத்தார் ராஜரத்தினம்.

தொடர்புக்கு, ராஜரத்தினம், செல்போன்: 9843099054 .

நன்றி: பசுமை விகடன்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *