மழை நேரத்தில் தென்னைக்கு உரம்

தற்போது பெய்து வரும் கோடை மழையை பயன்படுத்தி, தென்னை மரங்களுக்கு உரமளிக்க மத்திய தென்னை வளர்ச்சி வாரிய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

பொள்ளாச்சி பகுதியில் தற்போது கோடை மழை ஆரம்பித்து பெய்து வருகிறது. வழக்கமாக ஜூன் மாதம் துவங்கும் மழை, இந்தாண்டு முன்னதாகவே ஆரம்பித்துள்ள நிலையில், அதை தென்னை மரங்களுக்கு உரமளிக்க விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளலாம் என தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் அறிவுறுத்தியுள்ளனர்.

  • மழையின் போது உரம் அளித்தால், பாசனம் செய்யும் வேலை குறையும் என்பதுடன், மரங்களும் நன்கு குறும்பை பிடிக்கும்.
  • ஒரு தென்னைக்கு, ஆண்டுக்கு, 50 கிலோ மக்கிய தொழு உரம், யூரியா 1.3 கிலோ, சூப்பர் பாஸ்பேட் இரண்டு கிலோ, பொட்டாஷ் இரண்டு கிலோ என பேரூட்ட சத்துக்கள் வழங்க வேண்டும்.
  • பேரூட்டமளித்த, 30 நாட்களுக்கு பிறகு, போரக்ஸ், 50 கிராம், மக்னீசியம் சல்பேட், 500 கிராம் அளிக்க வேண்டும். அழுகல் அல்லது வாடல் நோய் காணப்படும் மரங்களுக்கு மட்டும், டிரைகோ டெர்மா விரிடி நுண்ணுயிரியை, மரத்துக்கு, 50 கிராம் எனும் விகிதத்தில், தொழு உரம் அல்லது இயற்கை உரங்களுடன் கலந்து இட வேண்டும்.
  • ரசாயன உரங்களுடன் கலந்தால், நுண்ணுயிரிகள் இறந்து விடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மேற்சொன்ன உரங்களை, ஆண்டுக்கு இரு முறையாக பிரித்து அளிப்பது நன்கு பலனளிக்கும்.
  • ஆறு மாதத்துக்கு ஒரு முறை, தென்னையை சுற்றிலும் அறை வட்ட பாத்தி எடுத்து, அதில் உரத்தை இட்டு மூட வேண்டும்.
  • அடுத்த ஆறு மாதத்தில், இன்னொரு பகுதியில் அரை வட்ட பாத்தி அமைத்து, உரமிட வேண்டும்.
  • தற்போது பெய்து வரும் மழையை பயன்படுத்தி, பரிந்துரைப்படி உரமளித்தால், தென்னையின் காய்க்கும் திறன் கூடி, உற்பத்தி அதிகரிப்பதுடன், நோய் எதிர்ப்பு திறனும் அதிகரிக்கும் என தென்னை வளர்ச்சி வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *