10 தென்னை மரங்கள்… மாதம் 1 லட்சம் வருமானம்… நீரா கொடுக்கும் நம்பிக்கை!

தென்னை மரத்திலிருந்து ‘நீரா’ பானம் இறக்கிக் கொள்ள தமிழக அரசு கடந்த வாரம் அனுமதி வழங்கியது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து விவசாய சங்கங்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றன.

Courtesy: Hindu

நீரா என்பது தென்னை மரங்களில் உள்ள பாலைகளில் இருந்து எடுக்கப்படும் ஒருவகை பானம்தான் இந்த நீரா. பதநீருக்கும், கள்ளுக்கும் இடைப்பட்ட பான வகையைச் சேர்ந்தது. மண்கலயங்களில் சேகரிப்பதற்குப் பதிலாக அதற்கென வடிவமைக்கப்பட்ட ஐஸ் பானைகளை மரத்தில் பொருத்த வேண்டும்.

ஐஸ் பானைகளில் சேகரிக்கும் நீராவை ப்ரீஸர் உள்ள வாகனத்தில் ஏற்றி கடைகளில் விற்பனை செய்யலாம். அதேபோல கடைகளிலும் ஐஸ்பெட்டி உள்ள கடைகளில் மட்டுமே நீரா பானத்தை விற்பனை செய்ய முடியும்.

இதனை மூன்று மாதங்களுக்கு இருப்பு வைத்து விற்றாலும் கெட்டுப்போகாமல் இருக்கும். கேரளாவில் கடந்த மூன்று ஆண்டுகளாக நீரா விற்பனை சக்கைபோடு போட்டு வருகிறது. கேரளாவில் ஒரு விவசாயி 25 மரங்களில் இருந்து நீராவை இறக்க முடியும்.

தமிழக விவசாயிகள் வேளாண்மைத்துறை ஆத்மா திட்டத்தின் மூலம் கேரளாவுக்குச் சென்று நீரா பானம் இறக்குவது பற்றி பயிற்சி பெற்றும் வருகிறார்கள். கேரளா சென்று பயிற்சி பெற்றவர்களில் ஒருவரும், சுருள்பாசி உற்பத்தியாளருமான ரத்தின ராஜசிங்கம் நீரா பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

நீரா பானம்

“தமிழகத்தில் எளிதாக நீரா பானத்தை இறக்கலாம். முன்னர் மண்பானைகளில்தான் பதநீர் இறக்குவார்கள். ஆனால் நீராவை தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்பட்ட ஐஸ்பெட்டியில் பிடித்துத்தான் விற்பனை செய்ய வேண்டும். நீராவை பதநீரைப்போல இறக்க முடியாது.

அந்தப் பெட்டி பால்கேன் வடிவில் இருக்கும். அதை மரத்தில் கட்டிவிட வேண்டும். அதன்பின்னர் தென்னை பாலையைச் சீவிவிட்டு வடியும் பதநீரை பாலித்தீன் பைகள் மூலமாக கேன்களில் சேகரமாகும். இப்படிச் சேகரிக்கும்போது அதன் உண்மைத்தன்மை மாறாமல் இருக்கும்.

இப்படிச் சேகரிக்கும் நீரா பானத்தை 5 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் வைக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு பாலையில் இருந்து 5 லிட்டர் நீரா எடுக்கலாம். இதுவே ஒரு மரத்துக்கு இரண்டு பாலைகளில் எடுத்தால் நீரா வடியும் தன்மையை பொருத்து அளவுகள் மாறுபடும்.

வெறும் 10 மரங்கள் கொண்ட ஒரு விவசாயிக்கு நீரா நிச்சயமாக வரப்பிரசாதம்தான். ஒரு மரத்தில் தினமும் 5 லிட்டர் நீரா கிடைக்குமானால் 10 மரத்துக்கு 50 லிட்டர் நீரா கிடைக்கும். ஒரு லிட்டர் 50 ரூபாய்க்கு விற்பனை செய்தால் 50 லிட்டருக்கு 2500 ரூபாய் தினமும் வருமானம் கிடைக்கும். மொத்தமாக 30 நாட்களும் விற்பனை செய்தால் 75,000 ரூபாய் வருமானம் கிடைக்கும்.

இதுவே இரண்டு பாலைகள் உள்ள மரங்களில் வடியும் நீராவை விற்பனை செய்யும்போது இன்னும் கூடுதலாக வருமானம் கிடைக்கும். இந்த முறையைத்தான் எங்களுக்கு கேரளாவில் பயிற்சியாகக் கொடுத்தனர். மொத்த வருமானமாக (தேங்காய் விற்பனை, மட்டைகள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள்) பத்து தென்னை மரங்களுக்குக் கிட்டத்தட்ட ஒரு லட்சம் வரை வருமானம் பார்க்கலாம். இது உடலுக்கு நன்மை தரக்கூடிய பானமும் கூட. இந்த முறை பின்பற்றினால் விவசாயிகளுக்கு நஷ்டம் வராது. நீரா தமிழகத்தில் இறக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டால் பன்னாட்டு நிறுவன குளிர்பானங்களுக்கு சரியான சவாலாக இருக்கும்.

கொச்சியில் இயங்கிவரும் மத்திய தென்னை வளர்ச்சி வாரியத்தில் நீரா இறக்கப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், நீராவை இறக்கிப் பதப்படுத்தி தொழில்நுட்பக் கல்வி மற்றும் மதிப்புக்கூட்டிய பொருட்கள் தயாரிப்பு பயிற்சிகளை ஊக்கத்தொகை கொடுத்து பயிற்சி அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

நன்றி: பசுமை விகடன்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *