வருடத்துக்கு 13 ஆயிரம் வருமானம் தரும் கேரள நாவல் மரம்!

“வேண்டாம்னு ஒதுக்குன கல்தான் வீட்டுக்கு மூலைக்கல் ஆச்சு. விவசாய நிலத்துல நாவல் மரம் எதுக்குன்னு பிடுங்கி போட நினைச்சேன். அப்புறமா, அது ஓரமாத்தானே இருக்குன்னு விட்டுட்டேன். இப்ப இந்த ஒத்த மரம் பெத்த பிள்ளை மாதிரி உதவுது” என்கிறார், நாவல் பழ விவசாயி கன்னியப்பன்.

 

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பெரியேரிப்பட்டி கிராமத்தில் இருக்கிறது, கன்னியப்பனின் தோட்டம். தோட்டத்தில் நாவல் பழ மரங்களை பராமரித்துக்கொண்டிருந்தவரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு பேச்சை ஆரம்பித்தோம். “என் மனைவி பேரு மல்லிகா. எங்களுக்கு மொத்தம் 3 புள்ளைங்க. எனக்குச் சொந்தமா 4 ஏக்கர் நிலம் இருக்கு. 12 வருஷத்துக்கு முன்னால கார்த்திகை மாசம் இருமுடி கட்டி சபரி மலை ஐயப்பன் கோயிலுக்குப் போனேன்.

அங்கு அத்தி, நாவல், சப்போட்டா, கொய்யா கன்றுகள் இலவசமா கொடுத்தாங்க. அதை வாங்கிட்டு வந்து விவசாயம் செய்யுற காட்டுக்குள்ள நட்டு வச்சேன். எல்லாக் கன்றுகளும் நல்லா வளர்ந்துச்சு. அந்த வருஷம் நல்ல மழை. அதனால நிலத்துல பயிர் செய்யலாம்னு தோணுச்சு. நிலத்தைச் சீர் செய்யும்போது நட்ட மரங்கள் எல்லாம் விவசாயம் செய்ய இடைஞ்சலா இருந்தது.

அதனால் எல்லா மரத்தையும் பிடுங்கிப் போட்டுட்டேன். வயல் ஓரமா இருந்த இந்த நாவல் மரத்தையும் பிடுங்கலாம்னு தோணுச்சு. சரி ஓரமாத்தானே இருக்கு, இருந்துட்டுப் போகட்டும்னு விட்டுட்டேன்.

4 ஏக்கர் விவசாய நெலத்துல கிடைக்கிற வருமானம்போக, இந்த ஒத்த மரத்துல கிடைக்கிற வருமானம் வீட்டுச் செலவுக்குக் கொஞ்சம் உதவியா இருக்கு. நாவல் மரத்துக்கு களை, தண்ணீர், உரம், பூச்சிக் கொல்லி மருந்துனு எதையும் கொடுத்தது இல்லை. சுத்தமா எந்த ஒரு பராமரிப்பும் செய்யுறது இல்லை. காட்டுல ஓரமா ஒத்தையில நின்னுகிட்டு இருக்கும். சித்திரையில் பூ பூக்கும்.

ஆடியில பழம் கிடைக்கும். நவாப்பழ சீசன்ல காக்கை, காடை, குருவிகள் அதிகமா இளைப்பாற வரும். நானும் ரெண்டு காய்ப்புக்குக் கண்டுக்காம விட்டுட்டேன்.

நாவல் மரம்

இந்த மரத்திலிருந்து பழம் சாப்பிட்டவங்க கிலோ கணக்குல பழம் கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. அதுக்குப் பின்னாலதான் நாவல் பழம் விற்பனை செய்யும் யோசனை வந்துச்சு. ஒவ்வொரு வருடமும் சீசன்ல 250 கிலோ பழம் கிடைக்கும். அதை மூணு தரமா பிரிச்சு முதல் தரம் பழத்தை 60 ரூபாய், இரண்டாம் தரம் 50 ரூபாய், கடைசி ரகம் 40 ரூபாய்னு விற்பனை செஞ்சேன். அது மூலமா எனக்கு 13 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைச்சது.

நான் வச்சிருக்குற நாவல் மரம் கேரள நாட்டு நாவல் மரம். ஆந்திரா பழம் மாதிரி நீளமா இல்லாம உருண்டையா இருக்கும். இதுல மருத்துவக் குணங்கள் கொஞ்சம் அதிகம். எவ்ளோ சாப்பிட்டாலும் திகட்டாது. இந்த நாவல் பழத்தை வாங்குறதுக்கு வியாபாரிங்க வீட்டுக்கே வந்துடுறாங்க. அப்படியே மரத்தோட குத்தகைக்கும் கேட்குறாங்க. பழந்தின்னிப் பறவைகள், என்னோட வீட்டுக்கு வர்ற விருந்தாளிங்க, என்னோட குழந்தைங்கனு சாப்பிட்டது போகத்தான் விற்பனை செய்திருக்கேன்.

நாவல் மரத்துல பூத்த பூக்கள்ல 3-ல 1 பங்கு பூ மட்டுமே பழமா மாறிச்சு. மீதிப் பூக்கள் பராமரிப்பு இல்லாம விழுந்துடுச்சு. சரியான பராமரிப்பு செய்துக்கிட்டு வந்தா ஒத்த நாவல் மரத்திலிருந்து வருடம் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல பழம் விற்க முடியும். பத்து மரம் இருந்து பார்த்துக்கிட்டாலே போதும்… நல்ல வருமானம் பார்க்கலாம். அதனால இந்த நாவல் மர விதைகளைச் சேகரிச்சு கன்றுகளாக்கி காடு முழுக்க நடலாம்னு இருக்கேன்” என்று நாவல் மரத்தைக் கட்டி தழுவியவாறே விடைகொடுத்தார்.

நன்றி: பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *