சாயப்பட்டறைகளின் அடுத்த இலக்கு… விருதுநகர்!

திருப்பூரைத் தொட்டு ஓடிக்கொண்டிருக்கும் நொய்யல் ஆறுதான் 1985-ம் ஆண்டின் தொடக்கக் காலகட்டம் வரை அந்நகர மக்களின் குடிநீர் உள்ளிட்ட அனைத்து நீர்த் தேவைகளுக்குமான ஆதாரம். ஆனால், தொழில் வளர்ச்சி என்கிற பெயரில் ஆங்காங்கே ஆடைத் தயாரிப்பு நிறுவனங்கள், சாயப்பட்டறைகள் கால் பதிக்க ஆரம்பித்தன. அடுத்த சில ஆண்டுகளிலேயே நொய்யலாறு கொல்லப்பட்டது. ஆம், இயற்கை அன்னையின் இணையற்ற அன்பளிப்புகளில் ஒன்றான ஓர் ஆற்றையே கொலை செய்துவிட்டது தொழில்வளர்ச்சி என்கிற பெயரில்  நடத்தப்பட்ட விதிமீறல்கள்! இந்த விஷயத்தில் நீதிமன்றத்தின் சாட்டை சுழல ஆரம்பிக்கவே, திருப்பூர் சாயப்பட்டறைகள் அனைத்தும் அதிரடியாக மூடப்பட்டன. இப்போது, இவர்களின் பார்வை விருதுநகர் மாவட்டத்தின் பக்கம் திரும்பியிருக்கிறது. இது, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகளை கவலை கொள்ளச் செய்திருக்கும் அதேசமயம், போர்க்குரல் கொடுக்கவும் வைத்துள்ளது.

திருப்பூரில் ஆயத்த ஆடை மற்றும் பின்னலாடை தொழில் வளர்ச்சி என்பது தாறுமாறாக முன்னேற… சாயப்பட்டறைகளும் புற்றீசல்களாக பெருகின. நூற்றுக்கணக்கான சாயப்பட்டறைகள் இரவு பகலாக தங்களின் கழிவுநீரை வெளியேற்ற… அவை அனைத்தும் நொய்யலாற்றில் கலந்து, ஒட்டுமொத்த ஆற்றையே கபளீகரம் செய்துவிட்டது. பல வண்ணங்களில் நீர் ஓடிய நொய்யல் ஆறு, ஒரு கட்டத்தில் முற்றிலும் விஷ நீரைச் சுமக்கும் ஆறாக மாறிப்போனது. இத்தனைக்கும் மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் ‘தீவிர’ கண்காணிப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் சுத்தமாக்கப்பட்ட நீர்தான் நொய்யலாற்றில் கலப்பதாக கதை விட்டுக் கொண்டிருந்தது மாசுக்கப்பாடு வாரியம். காரணம்… அந்த அளவுக்கு சாயப்பட்டறை ஆலை அதிபர்கள் சிலர், வாரியத்தைச் சேர்ந்த பலருக்கும் ‘அதீத மரியாதை’ செய்து வந்தததுதான். தொடர்ந்து கழிவுநீர் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கவே, ஒரு கட்டத்தில் திருப்பூர் தொடங்கி, ஒரத்துப்பாளையம் அணைப் பகுதி வரை நொய்யலாறு விஷமாகிப் போனது. இந்த ஆற்றின் நீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்யப்பட்ட நிலங்களும் பாழாகின. பயிர்கள் கருகின, நீரைக் குடித்த கால்நடைகள் உயிரிந்தன. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்புக் குரல் கொடுக்கத் தொடங்கவே, 2011-ம் ஆண்டில் சாயப்பட்டறைகளை இழுத்து மூட உத்தரவிட்டது, நீதிமன்றம். அதோடு விவசாயிகளுக்கு இழப்பீடும் வழங்க உத்தரவிட்டது. இதையடுத்து இந்த ஆலைகளில் பலவும் பவானி, குமாரபாளையம் என்று கடைவிரித்தன. ஆனால், அங்கெல்லாமும் எதிர்ப்புகள் கிளம்பவே, வேறு இடம் தேடிக் கொண்டிருந்தனர். இந்நிலையில்தால், விருதுநகர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள காரியாபட்டி, தாமரைக்குளம், பொட்டல்குளம் பகுதிகளை இவர்களுக்குத் தாரை வார்த்துக் கொடுத்திருக்கிறது, தமிழக அரசு.

புதிதாக சாயப்பட்டறை அமையவுள்ள இடம்

இதுகுறித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘சதர்ன் டிஸ்ட்ரிக்ட் டெக்ஸ்டைல் ப்ராஸசிங் க்ளஸ்டர் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனம், டெக்ஸ்டைல் ப்ராஸசிங் பயன்பாட்டுக்கென ஒரு சாயமேற்றும் ஆலையை நிறுவத் திட்டமிட்டுள்ளது. பொதுசுத்திகரிப்பு நிலையம் மற்றும் மின்நிலையம் ஆகிய வசதிகளை உள்ளடக்கிய இத்திட்டம், விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி தாலூகா, பொட்டல்குளம் மற்றும் தாமரைக்குளம் கிராமங்களை உள்ளடக்கி அமையவுள்ளது. இந்தத் திட்டம் அமையவிருக்கும் நிலத்தின் மொத்த பரப்பளவு 100.46 ஏக்கர். இத்திட்டத்தின் மதிப்பீடு, 170 கோடி ரூபாய். சாயப்பட்டறை ஆலைக்கு அனுமதி கொடுக்கும் இந்தத் திட்டத்தில் 36 நிறுவனங்கள் மற்றும் அவற்றின் அருகிலுள்ள குறு நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் வகுக்கப்பட்டுள்ளது. பொது சுத்திகரிப்பு நிலையம், சேமிப்புக் கிடங்கு, ஆய்வகம், தொழிற்பயிற்சி மையம் மற்றும் வணிக வளாகம் ஆகியன அமையவுள்ளன. இத்திட்டத்தில் பசுமைப் போர்வை மற்றும் மழைநீர் சேகரிப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும்’ என கூறப்பட்டுள்ளது.

இத்திட்டத்துக்கு எதிர்ப்பு காட்டுபவர்களில் ஒருவரான சுற்றுச்சூழல் ஆர்வலர் ரமேஷ் கருப்பையா, “நம்முடைய பொருளாதார அணுகுமுறையில் மாற்றம் வேண்டும். ‘அந்நியச் செலாவணி கையிருப்பு’ என்ற பெயரில் ஏற்றுமதியை அதிகரிக்க உள்நாட்டில் இதுபோன்ற தொழில்கள் திணிக்கப்படுகின்றன. இதை ஒரு காரணமாகக் கொண்டு ஏற்றுமதி ஆசையில், நமது மக்களும் இதை வரவேற்கிறார்கள். அடித்தட்டு மக்களிடம் வீசப்படும் வேலைவாய்ப்பு என்ற மந்திரச்சொல் அனைத்துப் பிரிவினரையும் கட்டிப்போட்டு விடுகிறது. இதுபோன்ற திட்டங்களில், நிலம் வாங்கித்தரும் வேலை முதற்கொண்டு, வேலைக்கு ஆள் சேர்ப்பது, வாகனங்கள் வாடகைக்கு தருவது, கட்டுமானப்பணி என இடைநிலைத்தொழிலில் பெரும்புள்ளிகள் ஈடுபடுகிறார்கள். இவர்கள் உள்ளூரில் சாதிபலம், அரசியல் பலம், பண பலம் கொண்டவர்களை களம் இறக்கி விடுகிறார்கள். அதனால் உள்ளூர்  மக்கள் எதிர்க்க முடிவதில்லை. அதிகார வர்க்கத்தில் உள்ளவர்கள், அரசு புறம்போக்கு நிலம், நீரோடைகள் ஆகியவற்றை நிறுவனங்களுக்குக் கொடுப்பது, அனுமதி வழங்குவது போன்ற செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். இயற்கை வளங்களை அழிக்கக்கூடிய மற்றும் மாசு ஏற்படுத்தக்கூடிய தொழில்களை பிற நாடுகளில் திணிப்பதுதான் வளர்ந்த நாடுகளின் தந்திரம். நொய்யல் ஆற்றை அழித்து அந்நகரில் குடிநீர், உழவு இரண்டையும் அழித்து, உலக நாடுகளுக்கு உள்ளாடை ஏற்றுமதி செய்தாகிற்று. அடுத்து, விருதுநகர் மாவட்டம் அழியப் போகிறது” என்று வருத்தம் பொங்கச் சொன்னவர்,

காவிரியில் சாயப்பட்டறை கழிவுகள் வெளியேறியபோது புதிய சாயப்பட்டறை அமையவுள்ள இடம்

“36 நிறுவனங்கள் மற்றும் அவற்றின் அருகிலுள்ள குறு நிறுவனங்களுக்கும் சேர்த்து பொதுசுத்திகரிப்பு நிலைய கொதிகலன் பயன்பாட்டுக்காக ஒரு நாளுக்கு 28 டன் நிலக்கரியும், 5,721 கிலோ லிட்டர் தண்ணீரும் பயன்படுத்தப்பட உள்ளது. அதற்காக, மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தின் அனுமதியுடன் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட உள்ளன. சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டத்துக்கு ஆண்டுக்கு 3௦௦ லட்ச ரூபாய் செலவு செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. 25 நிறுவனங்கள், துணி சாயமேற்றும் பணியிலும்; 7 நிறுவனங்கள், வெப்ப செயல் முறையில் நூலிழை சாயமேற்றும் பணியிலும்; 4 நிறுவனங்கள் குளிர்முறையில் நூலிழை சாயமேற்றும் பணியிலும் ஈடுபட உள்ளன. மின்சாரம் இல்லாத நிலையில் டீசல் ஜெனரேட்டர் பயன்படுத்தும்போது… சல்பர் டையாக்சைடு மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு ஆகியவை வெளியேறும். இவையனைத்தையும் மாசுக்கட்டுப்பாடு வாரியமே ஒப்புக்கொண்டுள்ளது. ஏற்கெனவே நொய்யல் மற்றும் பவானி ஆறுகளின் நிலை என்ன என்பது எல்லோருக்கும் தெரியும். அருகிலுள்ள தாமிரபரணி ஆறுதான் விருதுநகரைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணமாக இருக்கக்கூடும். இப்பகுதியில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தொழிற்சாலை அமைப்பதற்கான வேலை, விரைவாக நடைபெறுகிறது. இதனைத் தடுக்க மக்களைத் திரட்டி போராட இருக்கிறோம். இதுகுறித்து விருதுநகர் மாவட்ட இளைஞர்கள் சிலர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனுக் கொடுத்துள்ளனர்” என்றார்.

சூழலியலாளர் நக்கீரன் இதுகுறித்து பேசியபோது, “புதிதாக சாயப்பட்டறை ஆரம்பிக்கும்போது, சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்களை கட்டுப்படுத்தி விடுவோம் என நாக்கில் தேன் வடிவது போலத்தான் பேசுவார்கள். ஆனால், சாதாரண விஷயமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏற்கெனவே பல தொழிற்சாலைகளால் நமது ஆறுகள் பல வண்ணங்களில் ஓடிக்கொண்டிருக்க, இந்நிலத்துக்குப் புதிய வண்ணங்களைச் சேர்க்க வருகிறது இதுபோன்ற தொழிற்சாலைகள். உலகில் நீரை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளில் 17% முதல் 20% ஆடை தயாரிப்புத் தொழிற்சாலைகள்தான் என உலக வங்கியே தெரிவித்துள்ளது. சாயக்கழிவுநீரில் 72 வகையான நச்சு வேதிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில் 30 வகை வேதிகள், எவ்வகையிலும் நீக்கப்பட முடியாதவை என்றும் பஞ்சாப் ஃபேசன் டெக்னாலஜி பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது.

பொதுவாக சாயமேற்றுதல் தொழிலுக்கு நீர்வளம் கண்டிப்பாகத் தேவை. விருதுநகரைப் பொறுத்தவரை ஆறுகள் வழியாக நீர்கிடைப்பது என்பது மிகவும் குறைவு. நிலத்தடி நீர்வளத்தைத்தான் அதிகமாக நம்பியிருக்கிறார்கள் இப்பகுதியினர். இது, மானாவாரி விவசாயப்பகுதி. தானியங்களைத்தான் இங்கு பயிரிடுவார்கள். சாயப்பட்டறை ஆலைக்காக நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டால், இருக்கும் நிலங்கள், தரிசாகப் போய்விடும். மற்ற நாடுகளுக்கு துணி ஏற்றுமதி செய்வதற்காக நம் சுற்றுச்சூழல் வளத்தை அழிக்கிறார்கள். ஏற்கெனவே தமிழ்நாடு மழைக்குறைவாக பெய்யும் மாநிலமாக மாறிவிட்டது. நொய்யலும் பவானியும் மாசுப்பட்டபோது பாதிக்கப்பட்டது அதன் அருகிலுள்ள மாவட்டங்கள் மட்டுமல்ல. அதன் கழிவுகள் இறுதியில் வந்து சேர்ந்த காவிரிப் படுகை மாவட்டங்களும்தான். தமிழ்நிலம் எங்கு பாதிக்கப்பட்டாலும் அதன் பாதிப்பு நம் அனைவருக்குமானதே” என்றார்.

 

சுற்றுச்சூழல் துறை தாக்க மதிப்பீட்டின் முடிவுரையில், ‘உத்தேசிக்கப்படும் திட்டம், சுற்றுச்சூழலின் மீது குறிப்பிட்ட அளவு தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இருப்பினும் இத்திட்டத்தால் கார்மென்ட்ஸ் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் வேலை வாய்ப்பு எனப் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன’ என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலின் மீது தாக்கத்தை ஏற்படுத்துவது நிச்சயம் என்பது தெரிந்திருந்தும், வேலை வாய்ப்பு ஒன்றை மட்டுமே காரணமாகக் காட்டி அனுமதி கொடுப்பது… அதுவும் சுற்றுச்சூழலை காக்க வேண்டிய ஒரு துறையே சமரசம் செய்து கொள்வது எந்த வகையில் நியாயம் எனத்தெரியவில்லை. அதுமட்டுமல்ல, இதே துறையின் அனுமதியோடுதான் திருப்பூரிலும் முன்பு அனுமதி கொடுக்கப்பட்டது. கடைசியில் நொய்யல் ஆறு கொல்லப்படும் வரை இந்தத் துறையைச் சேர்ந்த சிலர் வேடிக்கை பார்த்துக் கொண்டு மட்டுமே இருந்தனர் என்பதை மறந்துவிட முடியாது!

நன்றி: விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *