சீரமைக்கப்பட்ட தடுப்பணையில் 15 லட்சம் லிட்டர் தண்ணீர்… இளைஞர்களின் சாதனை

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பொதுமக்களிடையே விவசாயம், நிலத்தடி நீர் ஆகியவற்றைப் பற்றிய விழிப்புஉணர்வு பெருகி வருகிறது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் தமிழக அரசை நம்பாமல், சுய உதவிக் குழுக்கள், நண்பர்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள் ஆகியவை விதைப்பந்து தூவுதல், நீர்நிலைகளைத் தூர்வாருதல் எனப் பல்வேறு பணிகளைச் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

இன்னும் சிலர் ஒருபடி மேலே போய், வாட்ஸஅப், ஃபேஸ்புக் ஆகியவற்றில் ஒன்றிணைந்தும் பல்வேறு சமூகசேவைகளில் ஈடுபடவும் ஆரம்பித்து விட்டனர். அவர்களுக்குச் சமூகசேவையில் ஈடுபடும்போது உடனே பலன் கிடைத்தால் அது இன்னும் ஆர்வத்தை தூண்டக்கூடியதாக இருக்கும்.

அப்படிக் கடந்த 25 வருடங்களாக வீணாக இருந்த தடுப்பணையை மீட்டெடுத்து தண்ணீரைச் சேமித்திருக்கிறார்கள், ராஜபாளையம் தாலுகா, சமுசிகாபுரம் பஞ்சாயத்துக் கிராம மக்கள்.

பராமரிப்பில்லாத தடுப்பணை

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் தாலுகா, சமுசிகாபுரம் பஞ்சாயத்தில் அமைந்திருக்கிறது சொக்கலிங்காபுரம், கலங்காப்பேரி மற்றும் மீனாட்சியாபுரம் கிராமம். இங்கு உள்ள ஓடையில் மூன்று கிராமங்களுக்கு நீராதாரமாக இருக்கக் கூடிய தடுப்பணை, இருபத்தைந்து வருடங்களுக்கு மேல் சேதமடைந்த நிலையில் இருந்துள்ளது. இதனால் அப்பகுதியில் நிலத்தடிநீர் மட்டம் குறைந்து விவசாயம் அழிந்துவிடும் ஆபத்தில் இருக்கிறது. இந்தத் தடுப்பணையைத்தான் புதுப்பித்து 15 லட்சம் லிட்டர் தண்ணீரைச் சேமித்திருக்கிறார்கள் அக்கிராம வாசிகள். இப்பணிக்குத் தலைமை தாங்கிய முத்துக் குமாரிடம் பேசினோம்.

சீரமைக்கப்பட்ட தடுப்பணை

“தடுப்பணையைச் சரி செய்ய நான்கு வருடங்களாக முயற்சி செய்தோம். அதற்காக அரசு அலுவலகங்களில் மனு அளித்தும் தடுப்பணையை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் முன்வரவில்லை. நாங்கள் செலவை ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தபோதும், அனுமதி கிடைக்காததால் தடுப்பணையைச் சரி செய்யும் பணியைச் செய்ய முடியவில்லை.

இதனால் வருடந்தோறும் 15 இலட்சம் லிட்டருக்கு மேல் தண்ணீர் வீணாகிக் கொண்டிருந்தது. இதற்காக இராஜபாளையத்தில் உள்ள ’துளி’ என்ற அமைப்பைத் தொடர்பு கொண்டு உதவி கோரினோம். அவர்களின் முயற்சியால் தடுப்பணையை சீர் செய்ய அனுமதி கிடைத்தது. அதன் பின் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து நண்பர்களிடமும், மூன்று ஊர் பொதுமக்களிடமும் நிதியுதவி கேட்டு தேவையான தொகையைச் சேர்த்தோம்.

துளி அமைப்பும் எங்களுக்கு போதிய நிதி அளித்து உதவியது. தேவையான நிதியைச் சேர்த்த பின்னர் தடுப்பணையை சரி செய்யும் பணியைக் கடந்த மாதம் (ஜூலை 19) தொடங்கினோம். தடுப்பணையைச் சரி செய்தபின் நீர் வரும் பாதை மற்றும் கரை முழுவதும் உள்ள சீமைக் கருவேலமரங்களை அகற்றும் பணியையும் முடித்தோம். இப்பணியைப் பாராட்டும் விதமாக இயற்கையின் கருணை எங்கள் கிராமத்திற்கு கிடைத்தது. சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணி முடியும் போதே கன மழை பெய்ய ஆரம்பித்து விட்டது.

நாங்கள் பணியை முடிக்கும் வரை இயற்கை காத்திருந்து மழை பெய்தது போல இருந்தது. தடுப்பணை முழுவதும் நீர் நிரம்பி இருக்கும் அக்காட்சியைக் காண 25 வருடங்கள் காத்திருந்தோம். தடுப்பணையில் நீர் மேல்மட்டத்தைத் தாண்டி தளும்பிக் கொண்டிருந்தது. இப்பணி பல போராட்டங்களுக்குப் பின்னர்தான் சாத்தியமானது. இதனால் நிச்சயமாக மூன்று கிராமங்களிலும் நிலத்தடி நீர் மட்டம் உயரும், விவசாய கிணறுகளிலும் விவசாயம் செய்ய தேவையான நீர் கிடைக்கும். தடுப்பணையைச் சரி செய்ய நிதியுதவி அளித்து ஆதரவாக இருந்த இளைஞர்கள், ஊர் பொது மக்கள் மற்றும் துளி அமைப்பினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவர்கள் இல்லையெனில் தடுப்பணை நிச்சயம் சாத்தியமில்லை. மேலும் இப்பணியைத் தொடர விரும்புகிறோம்” என்றார்.

நன்றி: பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *