தரைக்கு கீழே உள்ள பொக்கிஷம்

கனத்த இருட்டு. கண்ணெடுகிலும் அவர்களால் நிலப்பரப்பையே காணமுடியவில்லை. உணவு, நீர் எனக் கப்பலில் இருந்த எல்லாக் கையிருப்புகளுமே தீர்ந்துபோயிருந்தன. பசியைவிட தாகம் அவர்களை வாட்டி எடுத்தது. எங்கேயாவது குடிக்கத் தண்ணீர் கிடைக்காதா என்று தேடித்தேடி, கப்பலில் இருந்தவர்கள் சோர்ந்து போயினர்.

வெகு தூரத்தில் ஒரு விளக்கு அவர்களை நோக்கி வருகிறாற்போல இருந்தது. அருகில் வந்த விளக்கு பொருத்தப்பட்ட கப்பலை ஆவலுடன் நோக்கியவர்கள், “தயவு செய்து கொஞ்சம் குடிக்கத் தண்ணீர் கொடுங்கள்” என்று கத்தினர்.

அந்தக் கப்பலில் இருந்த ஒருவர் சிரித்துக் கொண்டே “இந்த இடத்துக்கு நீங்கள் புதுசா என்ன, இது அமேசான் நதி. இவ்வளவு நேரமாக குடிக்கும் நீரின் மேல்தான் நீங்கள் இருக்கிறீர்கள்; எவ்வளவு வேண்டுமானாலும் அள்ளிக் குடித்திருக்கலாமே!” என்றார்.

எவ்வளவு வளங்கள் இருந்தாலும் அதை நாம் உணர்வதே இல்லை என்பதுதான் நிஜம்.

கங்கை, யமுனை, பிரம்மபுத்திரா, சிந்து, கோதாவரி, மகாநதி, கிருஷ்ணா, காவேரி, நர்மதை, தபதி என பத்துப் பெரு நதிகளையும் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிளை நதிகளையும் கொண்டுள்ளது இந்தியா. ஆனால் பெரும்பாலான நதிநீர்கள் குடிப்பதற்கு ஏற்றதாக இருப்பதில்லை. ஏறக்குறைய தமிழ்நாட்டிலும் இதே நிலைதான்.

ஏராளமான வேலைவாய்ப்புகளையும், நவீன வாழ்க்கை முறையையும் வழங்கி வந்தாரை வாழ வைக்கும் சென்னையில் தண்ணீர், தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கிறதா? தண்ணீர்த் தூய்மை எந்தளவுக்குக் கடைபிடிக்கப்படுகிறது? வருடாவருடம் தண்ணீருக்கான தேவை எல்லா இடங்களிலும் அதிகரித்து வரும் நிலையில் பெரும்பாலும் ஏரிகளையே நம்பியிருக்கும் சென்னையின் நிலை என்ன?

இந்த வருடம் மழைப்பொழிவே இல்லாத காரணத்தால் செங்குன்றம், சோழவரம் ஏரிகளில் நீர்வரத்து சுத்தமாக இல்லை. பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர்வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. கொரட்டூர், தாமரைப்பாக்கம் ஏரிகளில் தேக்கி வைக்கவோ, திறந்துவிடவோ தண்ணீரே இல்லை. 3645 மில்லியன் கன அடி நீரைத் தேக்கி வைக்கும் கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் இப்போதிருப்பது என்னவோ வெறும் 625 மில்லியன் கன அடி நீர்தான்.

செங்குன்றம் ஏரியில் போன வருடத்தைய கொள்ளளவு 1535 மில்லியன் கன அடியாக இருந்தது. ஆனால் இந்த முறையோ 1092 மில்லியன் கன அடி நீர்தான் உள்ளது. மொத்தத்தில் 11,057 மில்லியன் கன அடி நீரைத் தேக்கி வைக்கும் கொள்ளளவு கொண்ட இந்த ஏரிகளில் இருப்பது வெறும் 1,830 மில்லியன் கன அடி நீர் மட்டுமே. (ஏறக்குறைய ஐந்தில் ஒரு பங்கு மட்டும்)

ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டு சென்னையில் இயங்கிவரும் கலாச்சார நிறுவனம், கொயோத்தே இன்ஸ்டிட்யூட் (Goethe Institute). ஜார்ஜ் கிறிஸ்டோஃப் பெர்ட்ச் என்னும் ஜெர்மன் பல்கலைக்கழகப் பேராசிரியருடன் இணைந்து தண்ணீர் குறித்த விழிப்புணர்வை சென்னை மக்களுக்கு ஏற்படுத்த எண்ணியது கொயோத்தே.

சென்னையில் தண்ணீரின் நிலை குறித்து கொயோத்தே இன்ஸ்டிட்யூட்   மேற்கொண்ட ஆய்வில் கிடைத்த தகவல்கள் குறித்து ஜார்ஜ் கூறியது:

ஜெர்மன் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜார்ஜ் கிறிஸ்டோஃப் பெர்ட்ச்|Courtesy: Hindu
ஜெர்மன் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜார்ஜ் கிறிஸ்டோஃப் பெர்ட்ச்|Courtesy: Hindu

“சென்னைக்குக் குடிநீர் வழங்கும் பெரும்பாலான ஏரிகள் வட சென்னையில்தான் அமைந்திருக்கின்றன. அதிகம் வளர்ச்சி அடையாத சென்னையின் கிராமங்களிலும், கடலோரக் குப்பங்களிலும் தண்ணீரின் தூய்மை குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. தண்ணீரின் அவசியம் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

அரசு அமைத்திருக்கும் குடிநீர்க் குழாய்களையே பெரிதளவில் நம்பியிருக்கும் அம்மக்கள், அதிக அளவில் சுகாதார சீர்கேட்டினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஏரிகளும், ஆறுகளும் அதிகளவில் அசுத்தமாகிக் கொண்டே வருகின்றன என்றும் அவர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

விளைநிலங்களின் அருகில் கட்டப்படும் கட்டிடங்கள் நிலத்தடி நீரின் தன்மையை வெகுவாகப் பாதிக்கின்றன. கடற்கரையோரங்களில் எழுப்பப்படும் கட்டிடங்களால் உப்புநீர் மண்ணின் அடியில் உட்புகுந்து நிலத்தடி நீரின் தன்மையையே குலைத்துவிடுகிறது. உப்பு நீராகவே மாறிவரும் நதியாலும், கிணற்றுத் தண்ணீர் மூலம் விவசாயம் செய்யும்போதும் நிலம் நச்சுத்தன்மையை அடைகிறது.

’15 வருஷத்துக்கு முன்னாடி நான் குளிச்சு விளையாடின ஆறு, இன்னிக்கு கால் கூட வைக்கமுடியாத அளவுக்கு ஆயிடுச்சி; குப்பை, கூளம் சேர்ந்து அழுக்காகி, ஆத்தோட நிறமே மாறிடுச்சு’ என்று கவலைப்படுகிறார் விவசாயி ஒருவர்.

கிராமங்களில் மட்டுமல்லாது, நகர்ப்புறங்களிலும் இதே பிரச்சனை நீடிக்கிறது. விவசாயம் செய்வதற்கான நீரைப் பாழாக்கி விட்டோம்; குளிப்பதற்கான நீரும் சீர்கெட்டுவிட்டது. குடிநீருக்கான நிலை என்ன?

குரோம்பேட்டையில் மேற்கொண்ட ஆய்வில், 12 தெருக்களுக்கு மொத்தமாகச் சேர்த்து ஒரேயொரு தண்ணீர்த் தொட்டி மட்டுமே இருக்கிறது. நீண்ட நாட்களாக சுத்தம் செய்யப்படாமல் இருப்பதால் ஏராளமான சிவப்புப் புழுக்கள், தொட்டி முழுவதும் நிரம்பிக் கிடக்கிறது. குடிப்பதற்கு மட்டுமல்லாமல் வேறு எந்தவொரு பயன்பாட்டிற்கும் உபயோகமில்லாமல் நிற்கிறது தண்ணீர்த்தொட்டி.

அங்கேயே மற்றோரு இடத்தில் திறந்து கிடக்கும் பாதாள மற்றும் கழிவுநீர் சாக்கடையால் நிலத்தடி நீருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. முறையாகக் கட்டி முடிக்கப்படாத பொதுச்சாக்கடைக் குழிகளால் நிலத்தடி நீர் மாசு அடைவதோடு மட்டுமின்றி, உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது. அதனருகே விளையாடும் குழந்தைகளும் இதனால் உடல்நலக் குறைவுக்கு உள்ளாகிறார்கள்.

தண்ணீர் மாசுபாடு, அதன் தேவை குறித்த விழிப்புணர்வை முதலில் குழந்தைகளிடம் இருந்தே ஊட்ட வேண்டும். தங்கள் அருகிலுள்ள ஆறு, குளம், ஏரி பற்றிய விவரங்களையும், அதன் தொன்மையான வரலாற்றையும் புரியவைத்தல் அவசியம்.

அங்கே என்னென்ன வகையான மீன்கள் வசிக்கின்றன, என்ன மாதிரியான விளையாட்டுகள் அங்கே நடத்தப்பட்டன போன்ற தகவல்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

முக்கியமாய் மரங்கள் வளர்க்கப்பட வேண்டும். தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையைக் கட்டுப்படுத்தவும், மழையை உற்பத்தி செய்யவும் மரங்கள் பயன்படுகின்றன.

குளியலறையிலும், சமையலறையிலும் தேவையான அளவு நீரையே பயன்படுத்த வேண்டும். பொதுக் குடிநீர்க் குழாய்களும், வீட்டின் தண்ணீர்த்தொட்டிகளும் நிரம்பி வழிவதைத் தவிர்ப்பதே பொது சேவைதான். நீர்க்கசிவு ஏற்படும் குழாய்களை உடனடியாகச் சரி செய்ய வேண்டும். ஒவ்வொரு தனி மனிதனும் இதைக் கடைப்படித்தாலே லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை மிச்சப்படுத்தலாம்.

“விளைநிலங்களில் கட்டிடங்கள் எழுப்பும் போக்கை அறவே நிறுத்த வேண்டும். சென்னை நகரத்தில் உள்ள 470 விளை நிலங்களில் வெறும் 43 இடங்கள் மட்டும்தான் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. இது போன்ற செயல்பாடுகள் அழிவை நோக்கியே எடுத்துச் செல்லும்” என்கிறார் ஜார்ஜ்.

மக்களிடையே மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருப்பதாகக் கூறும் ஜார்ஜ், மக்கள் தங்கள் வீட்டின் நீர்த்தேவையைத் தாங்களாகவே மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் அமைத்துப் பூர்த்தி செய்ய அவர்கள் விருப்பப்படுவதாகவும் சொல்கிறார்.

அமேசான் கப்பல் பயணிகள் போல் இருக்காமல், காலுக்கடியில் கிடக்கும், கிடைக்கும் பொக்கிஷத்தை உணர்ந்து இன்றில் இருந்தாவது, நாம் நம் நீர்வளத்தைக் காப்போம்.

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *