நீர் தாய் (Water mother) ராஜஸ்தானில் வறட்சியை வென்ற கதை!

“இந்தியாவின் எதிர்காலம் அதன் கிராமங்களில் உள்ளது’’ என்றார் மகாத்மா காந்தி. அவர் சொன்னதுபோலவே இந்திய கிராமங்களின் அடிப்படை பொருளாதாரம் வேளாண்மை சார்ந்தது. இருப்பினும் கிராமங்களின் இன்றைய சூழ்நிலை நாளுக்கு நாள் மிக மோசமாகி வருகிறது. மோசமான ஆட்சி, குறைந்த கல்வியறிவு, மோசமான சந்தைவாய்ப்பு, நீர்ப்பற்றாக்குறை, விவசாயி பற்றாக்குறை எனப் பல காரணங்களால் கிராமங்களின் நிலை தற்போது பின்தங்கியிருக்கிறது. அப்படி இருக்கும் மோசமான கிராமங்கள் உயர வேண்டுமானால், “இதைச் செய்ய வேண்டும்’’ எனச் செய்து சாதித்துக் காட்டியிருக்கிறார் மும்பையைச் சேர்ந்த அம்லா ருயா (Amla Ruia).

கோடைக்காலத்தில், ராஜஸ்தானில் உள்ள பல கிராமங்கள் வெப்பத்தால் மோசமாகப் பாதிக்கப்படும். அப்போது குடிநீருக்காக, பல மக்கள் துயரங்களை அனுபவிக்க நேர்வதும் உண்டு. குடிநீருக்கே அந்த நிலை என்றால், விவசாயத்துக்குத் தண்ணீரை நினைத்தே பார்க்க முடியாது. அப்படித்தான் அங்கே பல கிராமங்கள் கோடைக்காலத்தை எதிர்கொள்ளும். ராஜஸ்தானில் பல விவசாயிகளுக்கு வருடம் முழுவதும் தண்ணீர் கிடைக்காத கிராமங்களும் உண்டு.

1999 – 2000-ம் ஆண்டில் ராஜஸ்தான் கடுமையான வறட்சியை எதிர்கொண்டது. அதைத் தொலைக்காட்சிகளில் பார்த்த மும்பையைச் சேர்ந்த அம்லா ருயா (amla ruia), அந்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கிறார். அந்தக் கிராமங்களுக்கு இப்போது உணவும் தண்ணீரும் கொடுப்பது தீர்வல்ல, அவர்களுக்கு நிரந்தரத் தீர்வு கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார். உடனடியாக விவசாயிகளின் பிரச்னையைத் தீர்க்க மும்பையிலிருந்து ராஜஸ்தானுக்குப் பயணம் செய்கிறார். கடுமையான நீர்ப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரடியாகச் சந்திக்கிறார். அவர்களின் குறைகளைக் கேட்டுவிட்டு பிரச்னைகளைப் போக்குவதற்கு வழிமுறைகளை யோசித்தார் ருயா.

கிராமங்களில் சுற்றுப்பயணத்தின்போது, கிராமங்களைச் சுற்றியுள்ள பல மலைகளைக் கண்டார். மழைக்காலத்தின்போது, மலைகளில் இருந்துவரும் தண்ணீர் மூலம் விவசாயத்தை மேற்கொண்டுள்ளனர். ஆனால், தண்ணீரைத் தேக்கிவைப்பதற்கான எந்த வழிமுறைகளையும் அவர்கள் கையாளவில்லை என்பதைத் தெரிந்துகொண்டார். அதனால் நீர்ப்பிரச்னையை வேரோடு அகற்ற ஒரு வழியை ஏற்படுத்தினால் மட்டுமே, விவசாயிகளுக்கு முழுமையான தீர்வு இருக்கும் என நினைத்துச் செயல்படத் தொடங்கினார்.

ராஜஸ்தான் விவசாயிகளுக்கு கைகொடுத்த தடுப்பணைகள்

Photo – thelogicalindian.com

அதிக தண்ணீர் வரும் காலகட்டங்களில் தண்ணீரைத் தேக்கி வைக்கத் தடுப்பணை கட்டத் தீர்மானித்தார் அம்லா ருயா. தனது ஆகார் சாரிடபிள் ட்ரஸ்ட் (Aakar Charitable Trust) மூலம் திட்டத்தை நிறைவேற்ற ஆரம்பித்தார். இதற்காக மாநிலங்களில் பல கிராமங்களுக்கும் பயணம் செய்தார். அங்குள்ள மக்களிடம் இதற்கான ஒரே தீர்வு தடுப்பணைதான் என எடுத்துச் சொல்கிறார். கிராம மக்களும் தங்களது ஆதரவைக் கொடுத்தனர்.

தடுப்பணையின் முதல்கட்டமாக டாசா (Dausa district) மாவட்டத்தில் உள்ள மாண்டவரா (Mandawara) கிராமத்தில் இரண்டு தடுப்பணைகளைக் கட்டி சோதனை மேற்கொண்டார்கள். அதன் விளைவாக நீர்த்தேக்கங்களில் நீர் முழுவதுமாகத் தேங்கியது. அந்த நீரைக் கொண்டு விவசாயம் செய்த அந்தக் கிராம மக்கள் அந்த வருடம் 12 கோடியை வருமானமாகப் பெற்றனர். இந்தச் செய்தி அருகிலுள்ள மாவட்டங்களுக்கும் காட்டுத்தீ போலப் பரவியது. இதனால் டாசா மாவட்டம் போலவே அல்வார், சிகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் தடுப்பணை கட்டும் பணி நடைபெற்றது. ஒவ்வோர் ஆண்டும் மொத்தமாக 2 லட்சம் மக்கள் பாதிக்கப்படும் 156 கிராமங்களைத் தேர்வு செய்தார். ஒரு வருடத்துக்கு ஒருமுறை பயிர் செய்ய முடியாத விவசாயிகள் இப்போது மூன்று போகமும் விளைவித்து வருகின்றனர். மொத்தமாக 156 கிராமங்களிலிருந்து 500 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.

விருது வாங்கும் ருயா

இதற்கு முன்பு, மக்களிடம் யோசனை முன்வைக்கும்போது, தடுப்பணை கட்டுவதில் உள்நோக்கம் இருப்பதாக அந்த மக்கள் கருதினர். அவர்களைச் சமாதானப்படுத்த பல மணிநேரங்கள் செலவானது. சில மக்கள் இவர்களை நம்பி வேலை செய்கின்றனர். இன்னும் சில மக்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. பெரும்பான்மையான மக்களின் ஆதரவைப் பெற்று இந்தத் திட்டம் வெற்றிகரமாகத் தொடங்கியது. மக்கள் ஆர்வத்துடன் வேலை செய்ய வந்தனர். இவர்களை மேற்பார்வையிடும் அதிகாரிகளாக அந்தந்த கிராம மக்களே பணியமர்த்தப்பட்டனர். இந்தத் தடுப்பணையின் 40 சதவிகித செலவை விவசாயிகளும், 60 சதவிகிதம் ருயாவும் ஏற்றுக்கொண்டு வேலையை ஆரம்பிக்கின்றனர். இப்போது கட்டி முடிக்கப்பட்ட தடுப்பணையின் பராமரிப்பை அந்தந்த கிராம மக்களே பாதுகாத்து வருகின்றனர்.

ஆறுகள் மற்றும் ஓடைகளின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் தடுப்பணைகளால் வறட்சியான கிராமங்கள் பெரிதும் பயனடைந்திருக்கின்றன. கிராமங்களின் வருமானம் மூன்று மடங்காகி இருக்கிறது. இதுபோல கால்நடை வளர்ப்பும், மூன்று போகமும் பயிர் விளைவிக்கும் முறையும் விவசாயிகள் பின்பற்றத் தொடங்கினர். கிராமவாசிகள் சிறிய அளவிலான குடிசைத் தொழிலை செய்து தங்கள் விவசாயப் பொருள்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்து வருகின்றனர். இதன் அடுத்தகட்டமாக ஒடிசா, மகாராஷ்ட்ரா, மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய இடங்களில் பணியாற்ற ருயாவுக்கு அழைப்பு வந்தது. அங்கும் தடுப்பணைகளைக் கட்டிக் கொடுத்திருக்கிறார் ருயா. இவர் செய்த சேவைக்காக பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

 

இவரை பற்றிய பிபிசி ஒளி தொகுப்பு!


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *