காணாமல் போன பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த விவசாயிகள்

சாகுபடியில் காணாமல் போன விவசாயிகள் மறந்துவிட்ட பாரம்பரிய மருத்துவ குணம் கொண்ட வறட்சியையும், நோய்த் தாக்குதலையும் தாக்குப்பிடிக்கக்கூடிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் பணியில் புதுக்கோட்டையைச் சேர்ந்த இயற்கை விவசாயிகள் தமிழகத்துக்கே முன்னோடியாகத் திகழ்ந்து வருகின்றனர்.

ஆயிரமாயிரம்  புதிய கண்டுபிடிப்புகள் தொடர்ந்து  கொண்டிருந்தாலும், இயற்கையை அவற்றால் வெல்ல முடியாது என்பதற்கு தற்போது புழக்கத்தில் உள்ள ஒட்டு நெல் இரகங்களை உதாரணமாகக்கூறலாம்.  பெரும்பாலான ஒட்டு ரக நெல் வகைகள்  நமது மண்ணுக்கும், சூழலுக்கும் ஏற்றதாக இல்லை. “குறைந்த நாட்களில் அதிக விளைச்சல்” என்ற  நோக்கத்தில் கொண்டுவரப்பட்டவைதான் இந்த குட்டை ரக நெல்கள். ஆனால் பாரம்பரிய நெல் ரகங்கள், மாட்டுக்கு வைக்கோல், மண்ணுக்குத் தழைச்சத்து, விவசாயிக்கு நெல் ஆகிவற்றை  உள்ளடக்கியதாக இருந்தன.

மேலும், மண்வளம், பூச்சி வளம், நீர் வளம், நம் உடல் வளம் ஆகியவற்றை காக்கும் வலிமையுடையது. சுமார் 160  பாரம்பரிய நெல் ரகங்கள்  அனைத்தும் பசுமைப் புரட்சியால் மறக்கடிக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டன.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளும், தொண்டு நிறுவனங்களும் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வாரின் வழிகாட்டுதலுடன்  பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டுள்ளனர். அந்த வகையில்,  புதுக்கோட்டை மாவட்ட இயற்கை விவசாயிகளால் 24 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.

Courtesy: Dinamani
Courtesy: Dinamani

 

 

 

 

 

 

 

 

 

 

 

மீட்கப்பட்டுள்ள பாரம்பரிய நெல் ரகங்கள்:(வயது நாள்கள் அடைப்புக்குள்):

பூங்கார்    -(100 – 105), மாப்பிள்ளைச் சம்பா-(165 – 170 ), கருடன் சம்பா-(170 – 180),சிவப்பு கவுனி-(135 – 140),     பனங்காட்டு குடவாழை-(135 – 145 ), கருத்தக்கார்-(105 – 110), சண்டிகார்-(155 – 165), கருங்குறுவை-(120 -125), குருவைக்களஞ்சியம்-(140 – 145), தூயமல்லி-(135 – 140),தங்கச்சம்பா-(160 – 165),நீலச்சம்பா-(175 – 180),செம்புளிச்சம்பா-(135 – 140),கிச்சடிச்சம்பா-(135 – 140), இலுப்பைப்பூ சம்பா-(135 – 140),அறுபதாம் குறுவை-( 80 – 90), சீரகச்சம்பா-(125 – 130), காட்டுயானம்-(180 – 185), சொர்ணமுசிறி-(140 – 145) சிவப்பு குருவிக்கார்-(120 – 125),கருப்புக்கவுனி-(140 – 150), மிளகி-(120 – 130),சம்பாமோசனம்-(160 – 165), கைவிரச்சம்பா-(160 – 165) ஆகிய ரகங்கள் அடங்கும்.

பாரம்பரிய நெல் ரகங்களில் உள்ள மருத்துவ குணங்கள்:

  • அனைத்து ரகங்களுமே எளிதில் ஜீரணமாகக்கூடியது, மலச்சிக்கலை நீக்கும், நரம்புகளை பலப்படுத்தும் தன்மை கொண்டது.
  • பூங்கார்:   உடம்பில் சுரக்கும் கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது. கர்பிணிப் பெண்களுக்குப் பத்தியக் கஞ்சி வைத்துக் கொடுத்தால் சுகப்பிரசவத்திற்கு வழிவகுக்கும், துத்தநாக சத்து உள்ளது.
  • மாப்பிள்ளைச்சம்பா: நேரடி விதைப்பிற்கும் ஏற்றது, சத்துள்ள இந்த நீராகாரத்தை சாப்பிட்டால் இளவட்டக் கல்லைக் தலைக்கு மேல் சுலபமாகத் தூக்க முடியும். நரம்புகளை வலுப்படுத்தும், ஆண்மைத்தன்மையை அதிகரிக்கும்
  • சிவப்பு கவுணி: இதயத்தை பலப்படுத்தும், பல் அலகுகளை பலப்படுத்தும், இரத்த ஓட்டத்தை சீர்ப்படுத்தும், மூட்டு வலியை நிவர்த்தி செய்யும்.
  • குடவாழை:குடலை வாழ வைப்பதால் இப்பெயர் வந்தது. சர்க்கரை நோய் வராமல் தடுக்கும், அஜீரண கோளாறை குணப்படுத்தும்.    நீர்ப்பிடிப்பு பகுதிக்கு மிகவும் ஏற்றது.
  • கருங்குறுவை: ரண குஷ்டத்தையும் சிற்சில விஷத்தையும் நீக்கும்.போக சக்தியையும் தரும், இது இந்தியன் வயாகரா என்று அழைக்கப்படுகிறது.
  • கருத்தக்கார்: வெண்குஷ்டத்தை போக்கும் காடி தயாரிப்பதற்கு பயன்படுகிறது. பாதரசத்தை முறித்து மருந்து செய்வதற்கு பயன்படுகிறது.
  • சண்டிகார்: தீராத நோய்களை தீர்க்க வல்லது, உடல் வலிமையை கொடுக்கும், முறுக்கேற்றும்நரம்புகளை பலப்படுத்தும்.  பல்வேறு வகையான மருத்துவ குணங்களை உள்ளடங்கியுள்ளன.

இதையறிந்திருந்த நம் முன்னோர்கள் நோய் எதிர்ப்பு சக்தி மிக்க, வறட்சியையும், வௌ்ளத்தையும் தாங்கி வளரக்கூடிய பல்வேறு வகையான பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு நோயற்ற வாழ்க்கையை ருசித்து  வந்தனர்.  ஒரு சில விவசாயிகளிடம் இருந்த இந்தப் பாரம்பரிய நெல் ரகங்களை தேடிப் பிடித்து அதை புதுக்கோட்டையில் சாகுபடி செய்து அதை தமிழகம் முழுதும் பரவச் செய்யும் வேலையை இயற்கை விவசாயிகளும், தொண்டு நிறுவனங்களும் செய்து வருகின்றனர்.

இது குறித்து ரோஸ் தொண்டு  நிறுவனத்தின் இயக்குநர் ஆதப்பன் கூறியது:

கடந்த 20 ஆண்டுகளாக  இயற்கை விவசாயத்தை பரப்பும் நோக்கில் செயல்பட்டு வருகிறோம். கடந்த  2010 -ம் ஆண்டு முதல் நபார்டு வங்கியுடன் இணைந்து பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்கும் திட்டம் செயல்படுகிறது.  24 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாக்கப்பட்டு அன்னவாசல், அரிமழம், அண்டக்குளம் பகுதிகள் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு விதைகளை கொடுத்து பரவலாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

சிறு குறு விவசாயிகளையும், பெண் விவசாயிகளையும் ஒருங்கிணைத்து, இயற்கை விவசாய யுக்திகளை பல்வேறு பயிற்சிகள் மூலமாகவும், களப்பார்வைகள் மூலமாகவும், இயற்கை விவசாய மீட்பு மாநாடுகள் மூலமாகவும், பாரம்பரிய உணவுத் திருவிழாக்கள் மூலமாகவும், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் போன்ற வல்லுநர்கள் மூலமாகவும்  மாவட்ட மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறோம்.  நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி அதிகாரி எஸ். சோமசுந்தரம், பாரம்பரிய நெல் நடவு செய்யப்பட்டுள்ள வயல்களை நேரில் ஆய்வு செய்து  பல்வேறு ஆலோசனைகளை  வழங்கி வருவதாகவும், பாரம்பரிய நெல் விதைகள் தேவைப்படும் விவசாயிகள் 09842093143 -ல் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “காணாமல் போன பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த விவசாயிகள்

  1. லட்சுமணண் says:

    அறுபதாங்கருவை சாகுபடி பற்றிய விபரம் தேவை. எல்லா பட்டத்திலும் விதைக்கலாமென கேள்வி. சரியா? அரிசியின் மருத்துவ குணங்கள் என்ன?
    அதை எப்படியெல்லாம் உபயோகிப்பது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *