நெற்பயிரில் கூண்டுப்புழுக்களை கட்டுப்படுத்தும் வழிகள்

தாமிரவருணி பாசனப் பகுதியில் நெற்பயிர்களைத் தாக்கியுள்ள கூண்டுப் புழுக்களை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி பூச்சியியல் துறைப் பேராசிரியரும், தலைவருமான கோ.ரவி, ஆராய்ச்சியாளர்கள் வி.ஞா.பிரகாஷ், க. ராஜேஷ் குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

  • தாமிரவருணி பாசனப் பகுதியில் இப்போது நெற்பயிர்கள் அதிகம் பயிரிடப்பட்டுள்ளன. இந்த நெற்பயிர்களில் கூண்டுப்புழு பரவலாக காணப்படுகிறது.
  • இப்புழுக்கள் இலைகளில் உள்ள பச்சையத்தை சுரண்டி உண்ணுவதால் இலைகள் வெள்ளை நிறக் காகிதம்போல் காணப்படும்.
  • இலைகள் வெட்டப்பட்டு சிறு,சிறு குழாய் வடிவ கூண்டுகள் தூர்களைச் சுற்றிக் காணப்படும்.
  • மேலும், இலைகள் கத்தரிக்கோல் கொண்டு சரியான கோணத்தில் வெட்டப்பட்டதுபோல் காணப்படும்.
  • இப்புழுக்களைக் கட்டுப்படுத்த பயிரின் குறுக்கே கயிறைப் போட்டு இழுப்பதன் மூலம் தூர்களில் இருக்கும் புழுக்கள் நீரில் விழும்.
  • அவ்வாறு விழுந்தவுடன் வயலில் இருந்து வெளிவரும் நீரை வடிகாலின் வழியாக சாக்குப்பை கொண்டு வடிகட்ட வேண்டும்.
  • இவ்வாறு வடிகட்டுவதன் மூலம் நீரில் மிதந்து வரும் கூண்டுப்புழுக்களை சாக்குப்பையில் சேகரித்து அழித்து விட வேண்டும்.
  • இதேபோல் வயலினுள் வரும் நீரையும் மேற்கண்டவாறு சாக்குப் பை கொண்டு வடிகட்டிய பின்னரே தண்ணீர் வயலின் உள்ளே வர விட வேண்டும்.
  • மேலும், இவ்வகை பூச்சிகளுக்கு செயற்கை பைரித்திராய்டு வகையைச் சார்ந்த மருந்துகளை தெளிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை அனைத்தும் முதலில் பூச்சிகளை நன்கு கட்டுப்படுத்தும். அதனால் சாறு உறிஞ்சும் பூச்சிகளான புகையான், பச்சை தத்துப் பூச்சி, நெல் சிலந்தி போன்ற பூச்சிகளின் மறுஉற்பத்தித் திறன் அதிகரிக்கும்.
  • எனவே ஒரு ஏக்கருக்கு கார்பரில் 10 சதவீத தூளை 10 கிலோ என்ற அளவில் தூவ வேண்டும்.அல்லது பென்தோயேட் 50 இசி மருந்தை 400 மி.லி. என்ற அளவில் 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து அதனுடன் 100 மி.லி. ஒட்டும் திரவம் கலந்து கைத் தெளிப்பானைக் கொண்டு பயிரில் நன்கு படும்படி காலை அல்லது மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும்.
  • மேலும், விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மை அலுவலகத்தையோ அல்லது கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரியின் பூச்சியியல் துறையையோ அணுக வேண்டும்

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *