நெற் பயிரில் குருத்து பூச்சியை கட்டுப்படுத்தும் வழி முறைகள்

நெற் பயிரை தாக்கும் குருத்து பூச்சியை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றி தென்காசி வேளாண்மை உதவி இயக்குநர் ஐரிஷ் சேகர் விளக்கம் அளித்துள்ளார்.

  • இப்பூச்சியின் அந்து பூச்சியானது இலையின் நுனியில் கொத்தாக முட்டையிட்டு தனது மஞ்சள் நிற ரோமத்தால் மூடிவிடும்.
  • முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள் தூர்களை தாக்குவதால் இளம் பயிர்களில் நடுக் குருத்து காய்ந்து விடும்.
  • கதிர் பருவ பயிர்களில் இப்புழு தாக்கினால் வெள்ளை கதிர் உருவாகும். காய்ந்த குருத்து மற்றும் வெள்ளை கதிர்கள் கையால் இழுப்பதால் எளிதாக வந்து விடும். காலதாமதமாக பயிர் செய்யப்பட்ட இப்பூச்சி அதிக அளவில் தாக்க வாய்ப்புள்ளது.

கட்டுப்படுத்துதல் :

  • இப்பூச்சியை கட்டுப்படுத்த டிரைகோகிரம்மா ஜப்பானிக்கம் என்ற ஒட்டுண்ணியை நட்ட 15ம் நாள் முதல் 15 நாட்கள் இடைவெளியில் ஏக்கருக்கு 40 ஆயிரம் என்ற அளவில் வெளியிட வேண்டும்.
  • இது குருத்து பூச்சியின் முட்டையை தாக்கி அழிக்கவல்லது.
  • பறவை குடிதாங்கி ஏக்கருக்கு 10 வீதம் அமைக்க வேண்டும். இதனால் புழுக்கள் கட்டுப்படுத்தப்படும்.
  • பேசில்லஸ் துரின்ஜியன்சிஸ் என்ற பாக்டீரியா கரைசலை ஏக்கருக்கு 400 மில்லி என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
  • குருத்து பூச்சி தாக்குதல் பொருளாதார சேத நிலையை தாண்டும் போது அதாவது 10 சத காய்ந்த நடு குருத்தும், ஒரு சதுர மீட்டருக்கு இரண்டு முட்டை குவியல் இருக்கும் போதும், பூச்சி கொல்லி மருந்துகளை தெளித்து இதனை கட்டுப்படுத்த வேண்டும்.
  • குருத்து பூச்சியை குருணை மருந்து இட்டோ அல்லது பூச்சி கொல்லி மருந்தை தெளித்தோ கட்டுப்படுத்தலாம். குருணை மருந்துகளில் கார்டாப் ஹைட்ரோகுளோரைடு 4 சதம் 8 கிலோ, பிப்ரோனில் 0.3 சதம் 10 கிலோ, போரேட் 10 சதம் 4 கிலோ, கார்போபியூரான் 3 சதம் 10 கிலோ, கார்போ சல்பான் 6 சதம் 6 கிலோ ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை ஒரு ஏக்கர் நெற் பரப்பளவில் இட்டு குருத்து பூச்சியை கட்டுப்படுத்தலாம். பூச்சி கொல்லி மருந்துகளில் கார்டாப் ஹைட்ரோகுளோரைடு 50 சதம் பவுடர் 400 கிராம், பிப்ரோனில் 5 சதம் 400 மில்லி, பிப்ரோனில் 80 சதம் 20 மில்லி, தையாகுளோபிரிட் 21.7 சதம் 200 மில்லி, புளுபென்டையமைடு 20 சதம் 50 மில்லி, புளுபென்டையமைடு 39.35 சதம் 20 மில்லி, கார்போ சல்பான் 25 சதம் 400 மில்லி, தையா மெத்தாக்சாம் 25 சதம் 40 மில்லி, லாம்டா சைகேலாத்திரின் 2.5 சதம் 200 மில்லி, லாம்டா சைகோலாத்திரின் 5 சதம் 100 மில்லி, புரோபனோபாஸ் 50 சதம் 400 மில்லி, குளோரிபைரிபாஸ் 50 சதம் 300 மில்லி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு மருந்தை ஒரு ஏக்கர் பரப்பில் தெளித்தும் குருத்து பூச்சியை கட்டுப்படுத்தலாம்.
  • இம்மருந்துகளை தெளிக்கும் போது ஒட்டும் திரவத்தை ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி என்ற அளவில் கலந்து தெளிப்பதால் பூச்சி கொல்லி மருந்துகள் வீணாகாமல் பூச்சிகளை கட்டுப்படுத்த பயன்படும்

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *