கஜா புயல் அவலம்: பனை மரங்கள் அழிக்கப்பட்டதும் பாதிப்புக்கு காரணமா?

கஜா புயலால் 7 மாவட்டங்கள் அடியோடு சிதைந்து கிடக்கிறது. காற்றின் வேகத்துக்கு இவ்வளவு பலமா என எண்ணி பார்க்கும் போது அதையும் முன்னோர்கள் சமாளித்த விதம் வியப்பை தருகிறது. ஆழிப் பேரலையை சமாளிக்கு திறன் பனைமரத்துக்கு உண்டு என்பதை அறிந்த முன்னோர்கள் கடலோர மாவட்டங்களில் ‘பனைக்கு பத்தடி’ என்ற முறையில் வளர்த்துள்ளனர்.

கோடிக்கணக்கான பனை மரங்கள் அணிவகுத்து நின்ற தமிழக கடற்கரையோரங்களில் இன்று தேடி பார்த்தாலும் ஒரு பனை மரத்தை கூட பார்க்க முடியாத அளவுக்கு வெட்டி அழித்துவிட்டனர்.

அதன் பாதிப்பு தான் இன்று புயல் போன்ற இயற்கை சீற்றங்களை சமாளிக்க முடியாமல் கடலோர மாவட்டங்கள் தவிக்கும் நிலை உள்ளது.

இந்தியாவில் உள்ள மொத்த பனைமரங்களில் 50 சதவீதம் தமிழகத்தில் தான் உள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் 30 கோடி பனை மரங்கள் இருந்துள்ளது. ஏரி, குளங்களில் மண் அரிப்பை தடுப்பதற்காக கிராமப்புறங்களில் பனை மரங்கள் சுற்று சுவர் போன்று நடப்பட்டிருந்த காலம் எல்லாம் போய் அவற்றை எல்லாம் தாறுமாறாக வெட்டி எடுத்து செல்கின்றனர்.

அதன் எதிரொலியாக பனை மரங்களின் அழிவை காட்டும் புள்ளி விபரங்கள் நமக்கு அதிர்ச்சியை தருகிறது. அதாவது, 1970ம் ஆண்டுகளில் சுமார் 6 கோடி பனை மரங்கள் இருந்துள்ளன.

இந்த 40 ஆண்டுகளாக எவ்வளவு பனை மரங்கள் குறைந்தனவோ, அந்த அளவுக்கு கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் பனை மரங்களை வெட்டி வீழ்த்தியிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தற்போது, வெறும் 4 கோடி பனைமரங்கள் மட்டுமே தமிழகத்தில் இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. பனை மரங்கள் அழிவுக்கான காரணங்களை பார்க்கும் போது அதிர்ச்சி தருவதாக உள்ளது. தமிழகத்தில் மட்டும் கள் எடுக்க தடைச்சட்டம் உள்ளது.

கள் விற்பனை சூடு பிடித்தால் மது விற்பனை குறைந்து விடும் என கருதி தமிழக அரசும் பனை மரங்கள் வெட்டப்படுவதை கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் வேதனைக்குரிய ஒன்று.

இதுகுறித்து தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லுசாமி கூறியதாவது: சுனாமி, புயல் காற்று வரும் போது அரணாக இருந்து தடுத்து நிறுத்தக் கூடிய வலிமை பனை மரத்துக்கு உண்டு. தானோ புயலாலும் சரி. கஜா புயலாலும் பனை மரத்தை வீழ்த்த முடியவில்லை.

மற்ற மரங்களை எல்லாம் சுருட்டி வீசியிருக்கிறது. ஆனால் பனை மரத்தை வீழ்த்த முடியவில்லை. கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் பனை மரம் மட்டுமே நிமிர்ந்து நிற்கிறது. இப்படிப்பட்ட பனை மரத்தின் அருமை பெருமைகள் தெரியாமல் வேட்டையாடி வருகிறார்கள்.

இலங்கை யாழ்பானத்துக்கு போருக்கு முன்னாடியும், பின்னாடியும் சென்றேன். அங்கு ஒரு பனை மரத்தை வெட்டினால் ஜாமீனில் வெளி வரமுடியாத பெரும் குற்றம் ஆகும். தமிழகத்திலோ அரசாங்கத்தின் பொக்லைன் போனால் தோண்டுவது பனை மரமாகத் தான் உள்ளது. இலங்கையில் சட்டம் போட்டு காப்பாற்றுகின்றனர். இங்கு திட்டமிட்டு பனையை அழித்து கொண்டிருக்கின்றனர். இளைஞர்கள் ஆர்வலர்கள் எல்லாம் ஒன்றிணைந்து இதை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி: தினகரன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *