கரும்பு பயிருக்கு சொட்டு நீர் பாசனம் அமைப்பதன் அவசியம் குறித்து வாசுதேவநல்லூர் வேளாண்மை உதவி இயக்குநர் பெருமாள் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மழை இல்லாத காரணத்தால் கிணறுகளில் நீர் குறைவாக காணப்படுகிறது. எனவே குறைந்த நீரை கொண்டு சொட்டு நீர் பாசனம் மூலம் அதிக பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்து வருமானத்தை பெருக்கலாம்.கரும்பு பயிருக்கு தேவையான நீரையும், உரங்களையும், பூச்சி மருந்துகளையும் தேவையான நேரத்தில் தேவைக்கு ஏற்ப சிறிது சிறிதாக வேர் பகுதியின் அருகில் அளிக்கும் நீர்பாசன அமைப்பே சொட்டு நீர் பாசனம் எனப்படும். இதனால் பல்வேறு நன்மைகள் ஏற்படுகிறது. கரும்பின் மகசூல் 70 மெட்ரிக் டன்னுக்கு மேல் அறுவடை செய்யலாம். குறைந்த நீரை கொண்டு அதிக பரப்பளவில் பாசனம் செய்யலாம். பயிருக்கு நீர் தேவைப்படும் போது தேவையான அளவில் கொடுக்கலாம்.
குறைந்த நேரத்தில் அதிக பரப்பளவில் நீர் பாசனம் செய்வதால் மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம். உரங்களை சிறிது சிறிதாக ஏழு நாட்களுக்கு ஒருமுறை வேரின் அருகில் கொடுப்பதால் பயிரின் வளர்ச்சி சமச்சீராக இருக்கும். உரத்தின் சேதாரம் இருப்பதில்லை. எப்போதும் மண்ணின் ஈரப்பதம் காக்கப்படுவதால் இளங்குருத்து புழு தாக்குதல் இருக்காது.வேலையாட்களின் எண்ணிக்கை குறைவாகவே தேவைப்படும். மேடு பள்ளமான நிலங்களிலும் அதிகப்படியான மற்றும் சீரான கரும்பு விளைச்சலை பெற முடியும். விரைந்த முதிர்ச்சியும் அதிக அளவு சர்க்கரையும் கொண்ட கரும்பை தருகிறது. ஒரு மாதத்திற்கு முன் கரும்பு வெட்டு உத்தரவு கிடைக்கும்.
சொட்டு நீர் பாசன முறைகள்:நிலமட்ட சொட்டு நீர் பாசனம், நிலத்தடி சொட்டு நீர் பாசனம் என இரு வகைப்படுகிறது. நிலத்தடி சொட்டு நீர் பாசனத்தில் தீயினால் பாதிப்பு இல்லை. எலியினால் பாதிப்பு இல்லை. பயிரின் வளர்ச்சி சமச்சீராக இருக்கும். இயந்திரம் கொண்டு இடை உழவு மற்றும் கரும்பு அறுவடை செய்யலாம். கரும்பு வெட்டு ஆட்களால் பாதிப்பு இல்லை. மறுதாம்பு பயிருக்கு உடன் நீர் பாய்ச்சலாம். வெளியில் தெரியும் மண்ணின் மேல் பகுதி ஈரமாக ஆவது தடுக்கப்படுவதால் நீர் சேதாரம் இல்லை.
நிலத்தடி சொட்டு நீர் பாசனம் அமைத்தல்:நிலத்தை நன்கு குழ உழுது ஏக்கருக்கு பத்து டன் தொழு உரம் இட்டு நிலத்தை சமன் செய்ய வேண்டும். ஆறரை அடி இடைவெளியில் இரண்டடி அகலம் கொண்ட இணையான பார்கள் அமைத்து இரண்டு பார்களின் நடுவில் நிலத்தடி சொட்டு நீர் பாசன குழாயை 20 முதல் 30 செ.மீ.ஆழத்தில் அமைக்க வேண்டும். இவ்வாறாக நிலத்தை தயார் செய்ய வேண்டும். இணைப்பாரில் 150 கிலோ சூப்பர் பாஸ்பேட் இட்டு கரும்பு நடவு செய்ய வேண்டும். இதற்கு 3 டன் விதை கரும்பு போதுமானதாகும்.
பராமரிப்பு முறைகள்:நீரில் கரைய கூடிய உரங்கள் மற்றும் திரவ வடிவில் உள்ள உரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒரு மாதத்திற்கு ஒருமுறை அமில சிகிச்சை செய்ய வேண்டும். தினமும் மணல் வடிகட்டி சல்லடை வடிகட்டியையும் சுத்தம் செய்ய வேண்டும். வாரம் ஒருமுறை லேட்டரல் குழாய்கள் மற்றும் சப் மெயின் பிளஸ் வால்வுகளை சுத்தம் செய்ய வேண்டும்.
உரம் இடுதல்:உரம் கொடுக்கும் போது கவனமாக செயல்பட வேண்டும். யூரியா மற்றும் பொட்டாஷ் உரங்கள் போன்ற நீரில் கரைய கூடிய உரங்களை சொட்டு நீர் பாசனத்தில் கலந்து கொடுக்க வேண்டும். உரங்களையும் மருந்துகளையும் சொட்டு நீர் பாசனத்தில் கலந்து கொடுக்க கூடாது. பொட்டாஷ் உரங்களை ஒரு நாள் முன்னதாக கரைத்து வைத்து பயன்படுத்த வேண்டும். வடிகட்டிய உரநீர் கரைசலை மட்டும் உபயோகப்படுத்த வேண்டும். உரநீர் கொடுக்கும் முன்பும் கொடுத்த பின்பும் சொட்டு நீர் அமைப்பை 15 நிமிடம் இயக்க வேண்டும். உரத்தையும் அமிலத்தையும் சேர்த்து கொடுக்க கூடாது.இது தொடர்பான மேலும் விபரங்களுக்கு வாசுதேவநல்லூர் வட்டார கரும்பு கூடுதல் துணை வேளாண்மை அலுவலர் நமச்சிவாயம் மற்றும் வேளாண்மை துறை அலுவலர்களை அணுகலாம் என வேளாண்மை உதவி இயக்குநர் பெருமாள் அறிக்கையில் கூறியுள்ளார்.
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
கரும்பு சாகுபடி! https://pachaiboomi.in/tag/sugercane/