வறட்சிக்கு குட்பை சொல்லும் ‘வாட்டர் கேன்’ பாசனம்!

றட்சி காரணமாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உழவர்களின் உயிரிழப்பை சந்தித்துக்கொண்டுள்ளது தமிழகம். இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் விவசாயமே மாபெரும் கேள்விக்குறியாகிவிடும் இக்கட்டான காலகட்டத்தில் இருக்கிறோம்.

அதே நேரத்தில் சூழலுக்கு ஏற்ப நமது விவசாய முறைகளில், மூடாக்கு, சொட்டுநீர் பாசனம் என சுலபமான தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, பயிர்களை காப்பாற்ற முடியும் என்பதை பல விவசாயிகள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில், சாலையோரங்கள், பொது இடங்களில் தூக்கியெறியப்படும்  பிளாஸ்டிக் வாட்டர் கேன் மூலமாக, சொட்டுநீர் பாசனம் அமைத்து தரிசு நிலத்தில் வேம்பு சாகுபடியை முன்னெடுத்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த பொறியாளர் செல்வம்.

 

செலவில்லாத தொழில்நுட்பம்!

வாட்டர் கேன் பாசனம்

எந்த மண்ணிலும் சிறப்பாக வளரும் தன்மைகொண்டது வேம்பு. இதை தற்போது முழுமையான விவசாயமாகவே சில விவசாயிகள் சாகுபடி செய்யத் தொடங்கியுள்ளனர். சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் தற்போது வேப்பமரத்தை அதிகளவில் நடவு செய்து வருகின்றனர். அந்த வகையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள கோட்டையூரில், பல ஆண்டுகளாக தரிசாக கிடந்த ஆறு ஏக்கர் நிலத்தில் வேம்பு விதைகளை விதைத்து, பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியும் தண்ணீர் கேன்கள் மூலமாக பாசனம் செய்து வருகிறார் பொறியாளரான செல்வம். அந்த நிலத்தில் நுழையும் போதே, மண்ணில் குத்திவைக்கப்பட்டிருந்த தண்ணீர் பாட்டில்கள் தான் நம்மை வரவேற்றன.

வாட்டர் கேன் பாசனம்

எளிமையான முறையில் பாசனம் செய்து வேப்பமரங்களை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள செல்வத்திடம் பேசினோம். ‘‘ நான் சென்னையில இருக்க சிவில் இன்சினியர்..ஒரு பில்டிங் விஷயமா கோட்டையூர் வந்தேன். இந்த இடத்தோட உரிமையாளர், கோட்டையூர் சிதம்பரம் ஒரு தொழிலதிபர். இயற்கை மேல அவருக்கு தீவிரமான காதல் உண்டு. குறிப்பா மரம் வளர்ப்பு அவருக்கு பிடித்தமான விஷயம். நான், இங்க வந்தபோது இந்த இடத்துலயும் பல வகையான மரக்கன்றுகள் இருந்தன. ஆனால், அவை சரியான வளர்ச்சியில் இல்லை. இத்தனைக்கும் ஒரு போர்வெல் அமைச்சு, அத்தனை மரங்களுக்கும் சொட்டுநீர் மூலமாக பாசனம் நடந்துகிட்டு இருந்தது. ஆனாலும் ஊட்டசத்து இல்லாம வளர்ற குழந்தைக மாதிரி தான் செடிங்க இருந்தது. அதே நேரம் நிலத்துல அங்கங்க, தானா முளைச்ச வேப்பமரங்க, எந்த பாசனமும் கவனிப்பும் இல்லாம அருமையா வளர்ந்து இருந்துச்சு. எனக்கு ஏற்கனவே மரம் வளர்ப்பு, சுற்றுச்சூழல்ல ஆர்வம் அதிகம்..அதுனால, இந்த நிலத்துல வேம்பு வளர்க்கலாம்னு, சிதம்பரம் சார்கிட்ட சொன்னேன். அவரும் மகிழ்ச்சியா சம்மதம் சொன்னாரு. உடனே வேலையில இறங்கிட்டோம்.

மண்ணுக்கேற்ற மரங்கள்!

ஆறு அடிக்கு ஆறு அடி இடைவெளியில சின்னதா ஒரு குழியெடுத்து, அதுல தொழுவுரம் கொஞ்சம் போட்டு, அதுல ரெண்டு, மூணு வேப்ப விதைகளைப் போட்டு குழியை மூடுனோம். ஆறு ஏக்கர் நிலத்துல ஏழாயிரம் குழியெடுத்திருக்கோம். பொதுவா வேப்பமரத்துக்கு 15 அடி இடைவெளி தேவை. ஆனா, நாங்க ரொம்ப நெருக்கமா நட்டுறுக்கோம். வேப்ப மரத்தைப் பொறுத்த வரை, செடி முளைச்சு, உயிர் பிடிச்சுட்டாப் போதும். அதுக்கு பிறகு தன்னால வளர்ந்துடும். இந்த நிலத்துல ஏற்கனவே போர்வெல் இருந்ததால, அதுல ஒரு குழாய் போட்டு, செடிக்குச் செடி தண்ணி ஊத்துனோம். அதுக்கு பிறகு தான், பயன்படுத்திட்டு தூக்கி எறியிற பிளாஸ்டிக் வாட்டர் கேன்களை சேகரிச்சு, அது மூலமா சொட்டுநீர் முறையை அமைச்சிருக்கோம். இப்படி செய்றதுனால, பிளாஸ்டிக் பொருட்களால சூழலுக்கு ஏற்படுற கெடுதலும் குறையும், அதே நேரத்துல விவசாயிகள் சொட்டுநீர் அமைக்குற செலவும் குறையும். இந்த முறையில, விதைப்போட்ட குழிக்குப் பக்கத்துல, ரெண்டு லிட்டர் வாட்டர் கேன் ஒன்னை வெச்சி, அதை ஒரு குச்சியால கட்டி வெச்சிடுவோம். கேனோட அடிப்பகுதியில, ஸ்டவ் பின் மூலமா சின்னதா ஒரு துளைப் போட்டு விட்டுடுவோம்.

வாட்டர் கேன் பாசனம்

இந்த கேன்கள்ல ஹோஸ் மூலமா தண்ணியை நிரப்பி வெச்சுட்டா, தண்ணி துளி துளியா கசிஞ்சுகிட்டே இருக்கும். இந்த கேன்ல தண்ணியை நிரப்பும் போதே, விதை குழியிலயும் கொஞ்சம் தண்ணியை ஊத்திடுவோம். அதுக்கு பிறகு கேன் தண்ணி கசியும் போது, மண் எப்பவும் ஈரமாகவே இருக்கும். இந்த தண்ணி முழுமையா இறங்க, ரெண்டு நாள் ஆகும். அதுக்கு பிறகு, நாலஞ்சு நாள் வரைக்கும் ஈரப்பதம் இருந்துகிட்டே இருக்கும். இதனால வாரம் ஒரு தடவை தண்ணீர் நிரப்புனாலே நிலத்துல எப்பவும் ஈரம் இருந்துகிட்டே இருக்கும். இப்படி செய்றதால, சொட்டுநீர் அமைக்கிற செலவு இல்லாததோட, குறைஞ்ச தண்ணியிலயே செடிகளை வளர்த்திட முடியும். நிலத்துல எந்த பயன்பாடும் இல்லாம, தரிசாப் போட்டு வெச்சிருக்கவங்க, ஒரு போர்வெல் அமைச்சு, இந்த முறையில மரங்களை வளர்க்கலாம். அவங்க அவங்க மண்ணுல எந்த மரம் நல்லா வளரும்ணு தெரிஞ்சுகிட்டு அந்த மரத்தை மட்டும் வளர்த்தா, சுமார் பத்தாண்டுகள்ல கணிசமானத் தொகை வருமானமாக் கிடைக்கும்..அதோட சுற்றுச்சூழலுக்கும் நாம செய்ற நன்மையா இருக்கும்‘‘ என்றார்.

நன்றி: பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *