மதிய பிரதேசத்தில் ஒரு நெல் ஜெயராமன்!

ன்னமழகி, ஒட்டடையான், கருங்குறுவை, நவரை, நல்லுண்டை என சுமார் 10ஆயிரத்திற்கு மேற்பட்ட பாரம்பர்ய நெல் வகைகளைப் பயிர் செய்தவன் தமிழன். அவற்றை மீட்டெடுக்கும் முயற்சியில் தற்போது பலர் ஈடுபட்டு வருகிறார்கள். ‘நெல்’ ஜெயராமன் போன்றோர்களின் சீரிய முயற்சியால் குறிப்பிடத்தக்க சில பாரம்பர்ய நெல் வகைகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. தாகமிகு விதைகளின் இயல்பை தற்போது அனைவரும் உணர ஆரம்பித்திருக்கும் சூழலில் பாரம்பர்ய நெல் வகைகளின் தேவை அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம்.

மத்தியபிரதேசத்தில் சட்ணா மாவட்டத்தில் இருக்கும் சிறிய கிராமம்தான் மேஹார். அங்கு வசிக்கும் 72வயதான விவசாயி பாபுலால், பாரம்பர்ய நெல் விதைகளைச் சேகரித்து பாதுகாக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். இதுவரை 110 வகையான பாரம்பர்ய நெல்வகைகளைச் சேகரித்தது மட்டுமல்லாமல், அவற்றை தனக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டு அவற்றை பெருக்கி விவசாயிகளுக்கு வழங்கிவருகிறார்.

நெல்

விவசாய குடும்பத்தில் பிறந்த பாபுலாலுக்கு சிறுவயதில் இருந்தே விவசாயத்தின் மீது ஆர்வமும் ஆசையும் அதிகம். ஆனால், அவரது தந்தைக்கோ, மகன் நன்றாக படித்து நல்ல வேலைக்குச் செல்லவேண்டும் என்று ஆசை. அதனால், பாபுலாலை அருகில் இருக்கும் நகரத்தில் தங்கவைத்து படிக்கவைத்தார். உள்ளூர் மொழியான பஹீலி மொழிதான் அப்பகுதியில் பேசுவார்கள். அந்த மொழியில் கவிதைகள், பாடல்கள் எழுதுவதில் பாபுலாலை அடித்துக்கொள்ள அங்கு ஆள் இல்லை என்றே சொல்லலாம். அதனால், கிராமத்திற்கு பாபுலால் வந்தாலே அனைவரும் அவரது வீட்டின் முன் வந்து ஆஜராகிவிடுவார்கள். ஆனால், பாபுலாலோ,  வீட்டில் இருப்பதைவிட தன் தந்தையுடன் வயலில் இருக்கும் நேரம்தான் அதிகமாக இருக்கும். தனது கவித்திறமையால் பஹீலி மொழியில் புத்தகங்கள் எழுதினார். மேலும் நாட்டுப்புறக் கதைகளையும் எழுதி புத்தகங்களாக வெளியிட்டார் பாபுலால். அப்பகுதியில் படித்த, திறமையான நபராக அறியப்பட பாபுலாலுக்கு சில வாய்ப்புகள் தேடி வந்தன. அதில் ஒன்றுதான் ’ஆதிவாசி லோக் காலா அகாதமி’யில் இணையும் வாய்ப்பு. மலைவாழ் மக்களின் பாரம்பர்யம், கலாசாரம், பழக்கவழக்கங்கள் பற்றி ஆவணம் செய்யும் பணி பாபுலாலுக்குக் கொடுக்கப்பட்டது. ஏற்கெனவே பாடல்கள், கதைகள் மூலம் மலைவாழ் மக்களின் பாரம்பர்யத்தை பதிவுசெய்திருந்த பாபுலாலுக்கு அந்த பணி எளிமையாக இருந்தது. மேலும் அப்பணி அவருக்குள் சில மாற்றத்தைக் கொடுத்தது. பாரம்பர்ய உணவு முறைகள் பற்றி சிந்திக்கத்தூண்டியது.

நெல்

வருடம் 2005. நாட்டுப்புறப் பாடல்கள், கதைகளில் வரும் அரிசி வகைகளைப் பற்றிய தகவல்கள் திரட்ட ஆரம்பித்தார். இந்தியா முழுவதும் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட பாரம்பர்ய அரிசிவகைகள் இருப்பதைக் கண்டறிந்தார். அவற்றில் பெரும்பாலான அரிசி வகையை, விவசாயிகள் தற்போது பயிர் செய்வதில்லை என்று தெரிந்துகொண்டார். அவற்றை தேடி பயணம் மேற்கொண்டார். சுமார் 110 வகையான பாரம்பர்ய நெல் விதைகளைச் சேகரித்தார். அவற்றில் சில, அழிவின் விளிம்பில் இருந்தன. உடனே தனக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் அவற்றை பயிர்செய்து விதைகளைப் பெருக்கினார். அழிவின் விளிம்பில் இருந்து அவற்றை காத்தார் பாபுலால்.

நெல்

எந்த நிலத்திலும் வளரக்கூடிய, உரம், பூச்சிமருந்து, அதிகத் தண்ணீர் என எதுவும் தேவைப்படாத பாரம்பர்ய நெல்வகைகள் அவை. உரம் வாங்க காசு இல்லாமல் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் விவசாயிகளின் நிலை கண்டு, விவசாயிகளுக்குப் பாரம்பர்ய நெல் குறித்து விழிப்புஉணர்வு செய்தார். ஆரம்பம் முதலே, பாபுலால் மீது பாசமும் மரியாதையும் வைத்திருக்கும் மக்களுக்குத் தன் கருத்தை எளிமையாகக் கொண்டு சேர்த்தார் பாபுலால். விவசாயிகள் சிலருக்கு அவற்றின் தேவை புரிந்ததால், பாபுலாலிடம் விதைகளை வாங்கிக்கொண்டனர். அவற்றை பயிர் செய்து நல்ல லாபம் அடைந்தார்கள். இதனால் சுற்றியுள்ள கிராம மக்களும் பாபுலாலிடம் விதை வாங்கிச்செல்கிறார்கள். மக்களின் தேவையை உணர்ந்த பாபுலால், சில அரசு உதவிபெறும் அமைப்புகளுடன் இணைந்து விதை வங்கியை அப்பகுதியில் உருவாக்கியிருக்கிறார்.

நெல்

இவரின் பாரம்பர்ய மீட்டெடுப்பு நடவடிக்கையைப் பார்த்து ஆர்வமடைந்த  மத்தியப்பிரதேச பல்லுயிர் அமைப்பானது, மாநிலத்தில் உள்ள 24 மாவட்டங்களில் ஆய்வு நடத்தி, பாரம்பர்ய காய், கனிகளை மீட்டெடுத்திருக்கிறது. இதுவரை சுமார் 1600 வகையான பாரம்பர்ய காய்கறிகள், பழங்கள், மருத்துவத் தாவரங்களை மீட்டு பாதுகாத்துப் பெருக்கியிருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.!

நம் பாரம்பர்ய நெல்லை பயிர் செய்யுங்கள். அதன் மூலம் ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்குங்கள். அவர்கள் கையிலும் பாரம்பர்ய விதைகளைக் கொடுத்துச்செல்லுங்கள்’ என்பதே பாபுலாலின் கொள்கை.

நன்றி: பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *