நலம் தரும் பூச்சிகளை காப்போம்! பூச்சிக்கொல்லிகளை ஒழிப்போம்!

கரந்தச்சேர்க்கையாளர்கள்’ என்று அழைக்கப்படும் பூச்சி இனங்கள்… தாவரங்களின் இனப்பெருக்கம், உணவு உற்பத்தி, பல்லுயிர்ப்பெருக்கம் போன்றவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இந்தப்பூச்சிகளில் முக்கியமானவை தேனீக்கள் மற்றும் வண்ணத்துப்பூச்சிகள் ஆகியவைதான். இவை பூக்களில் அமரும்போது அவற்றின் கால்களில் ஒட்டிக்கொள்ளும் மகரந்தம்தான் உலகின் 90 சதவிகிதப் பூக்கும் தாவரங்களின் இனப் பெருக்கத்துக்கான உயிராதாரம். கிட்டத்தட்ட 75 சதவிகித உணவுப் பயிர்கள் இனப்பெருக்கத்துக்காக இப்பூச்சிகளைத்தான் நம்பியுள்ளன.

கடந்த பத்து ஆண்டுகளாக இப்பூச்சியினங்கள் மிகப்பெரிய அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதுதான் வேதனையான உண்மை. ‘உலகின் 40 சதவிகிதப் பூச்சியினங்கள் அழிந்துவிட்டன’ என முன்பே ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் பூச்சிகளின் அழிவு, தற்போது இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்த ஆரம்பித்திருக்கிறது.

பூச்சி இன அழிவின் மூலம் ஏற்படும் மாபெரும் அபாயத்தை முதலில் உணர்ந்தது, நெதர்லாந்து நாடுதான். ஏனெனில், நெதர்லாந்தின் 80 சதவிகித உணவு உற்பத்தி, மகரந்தச்சேர்க்கைக்கு உதவும் பூச்சிகளை நம்பித்தான் உள்ளது. மிகப்பெரிய அளவில், உணவு மற்றும் வேளாண் பொருள்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் நெதர்லாந்தும் ஒன்று.

‘பூச்சிக்கொல்லிகளில் உள்ள சில ரசாயனம், சுமார் 360 வகையான பூச்சியினங்களை விரைவில் அழித்துவிடும். தற்போதுள்ள விவசாய முறைகள் தேனீக்களுக்கு மிகுந்த அச்சுறுத்தலாக உள்ளன’ என்று நெதர்லாந்து விஞ்ஞானிகள் கவலை தெரிவித்ததைத் தொடர்ந்து இப்பூச்சிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் உடனே இறங்கியிருக்கிறது, அந்நாட்டு அரசு.

ஒருமித்த கருத்துக்கொண்ட அனைத்து நாடுகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவரும் முயற்சியாக, ‘மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் அனைத்து பூச்சிகளைக் காக்க விருப்பம் உள்ளவர்களின் கூட்டணி’ (Coalition of the Willing on Pollinators) என்ற அமைப்பை உருவாக்கியது, நெதர்லாந்து. உடனடியாகப் போஸ்னியா, ஹெர்சிகோவினா, டொமினிகன் குடியரசு, அயர்லாந்து, மெக்ஸிகோ ஆகிய நாடுகள் அந்த அமைப்பில் இணைந்தன.

அடுத்ததாக, ஆஸ்திரியா, பெல்ஜியம், டென்மார்க், பின்லாந்து, ஜெர்மனி, லக்ஸம்பர்க், பெரு, ஸ்லோவேனியா, ஸ்பெயின், பிரிட்டன், உருகுவே ஆகிய நாடுகளும் அக்கூட்டணியில் சேர்ந்தன. கடந்த அக்டோபர் மாதம், பிரான்ஸும் இக்கூட்டணியில் இணைந்திருக்கிறது. இதுவரை கிட்டத்தட்ட 20 நாடுகள் அக்கூட்டணியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளன.

‘ஏற்கெனவே பல நாடுகள் உணவுப் பஞ்சத்தால் அவதிப்படுகின்றன. வருகிற 2050-ம் ஆண்டில், உலகின் மக்கள் தொகை 9.3 பில்லியன் ஆக உயரும். அதனால், உணவுத்தேவையும் அதிகரிக்கும்’ என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ‘அப்படிப்பட்ட சூழ்நிலையை எப்படிச் சமாளிப்பது?’ என்ற அச்சம்தான் மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளை ஒருங்கிணைத்துப் பூச்சிகளைக் காப்பாற்றச் சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வைத்திருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மட்டும், ஐந்தில் நான்கு உணவுப் பயிர்கள் மற்றும் பெரும்பாலான மலர்ப் பயிர்கள் மகரந்தச் சேர்க்கையாளர்களான பூச்சியினங்களைச் சார்ந்துதான் உள்ளன. இப்பூச்சிகள், ஐரோப்பிய ஒன்றியத்தில் 15 பில்லியன் யூரோ மதிப்பிலான உணவு உற்பத்தி செய்வதற்கு நேரடியாக உதவுகின்றன. அதனால், முதல் கட்டமாக, ஐரோப்பிய ஒன்றியம், இப்பூச்சிகளுக்கு அதிக அளவில் தீங்கிழைக்கும் மூன்று ரசாயன பூச்சிக்கொல்லிகளைத் தடை செய்திருக்கிறது.

தொடர்ந்து, பிரான்ஸும் பழப்பயிர்கள் மற்றும் பூச்செடிகளுக்குப் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஐந்து பூச்சிக்கொல்லிகளுக்குக் கடந்த செப்டம்பர் மாதம் தடை விதித்திருக்கிறது. கனடா, சோளம் மற்றும் சோயா ஆகிய பயிர்களுக்குப் பயன்படுத்தப்படும் இரண்டு வகையான பூச்சிக்கொல்லிகளைத் தடை செய்யத் திட்டமிட்டு இருப்பதாக அறிவித்துள்ளது.

ஆனால், பல குழந்தைகளின் உயிரிழப்பு, நிரந்தர நோயாளிகள், பல ஆண்டுகளாக மக்களை அச்சுறுத்தி வரும் சுகாதாரக்கேடு… எனப்பல பாதிப்புகள் ஏற்பட்ட பிறகும், ஒரு பூச்சிகொல்லியைத் தடை செய்யவே இந்தியாவில் பல ஆண்டுகள் போராட வேண்டி இருக்கிறது.

ஜெர்மனி நாட்டில் மட்டும் 75% பறக்கும் பூச்சிகள் காணாமல் போய்விட்டன. பூச்சிக்கொல்லிகளை உலகின் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அமெரிக்காவும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 2,000 வகையான தேனீக்கள் அமெரிக்காவில் மறைந்துவிட்டன. தேனீக்கள் மற்றும் வண்ணத்துப்பூச்சிகளின் வருகையில் ஏற்பட்ட மாற்றங்களை உணர்ந்த அமெரிக்கா, ‘மகரந்தச்சேர்க்கையாளர்களின் பாதுகாப்பு அமைப்பு’ (Pollinator Health Task Force) என்ற அமைப்பை ஏற்படுத்தி… தேனி, வண்ணத்துப் பூச்சிகள் ஆகியவற்றைக் காப்பாற்றவும், அவற்றின் இனப்பெருக்கத்துக்காகவும் 28,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மரங்களையும், பூச்செடிகளையும் கொண்டு ஒரு சோலைவனத்தை உருவாக்கியுள்ளது.

‘பூ பூக்கும் பருவத்திலாவது, பூச்சிக்கொல்லி தெளிப்பதைக் கைவிடுங்கள். இல்லாவிடில் தேனீக்கள் வெளியேறிவிடும்’ என விவசாயிகளை எச்சரித்துள்ளது, அமெரிக்க விவசாயத்துறை.

இதேபோல, பூச்சிகளைக் காப்பாற்ற இங்கிலாந்தும் 23 முக்கியக் கொள்கை முடிவுகளை எடுத்து, அவற்றை நடைமுறைப் படுத்தும் வேலைகளில் இறங்கியுள்ளது. இத்தகைய பூச்சிகள், வளர்வதுக்கேற்ற சூழ்நிலைகளைப் புதிதாக உருவாக்க வேண்டியதும், அவற்றின் தற்போதைய வாழ்விடங்களைப் பாதுகாக்க வேண்டியதும் அவசியமாக இருக்கிறது. இந்த விஷயத்தில் உலக நாடுகளின் துரித நடவடிக்கைக்கு… தேனீக்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து இருப்பதுதான் முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

கிட்டத்தட்ட 2,35,000 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகப் பொருளாதாரத்தை இந்தச் சிறு உயிரினங்கள்தான் நிர்ணயிக்கின்றன என்று சொல்வதில் மிகையில்லை. பல்லுயிர்ப்பெருக்கம், உணவுப்பாதுகாப்பு, உயிர்களுக்கான ஊட்டச்சத்து ஆகியவற்றைப் பூச்சிகள்தான் உறுதிப்படுத்துகின்றன. மேலும் பழங்கள், காய்கறிகள், எண்ணெய்ப் பயிர்கள், வைட்டமின்கள், தாதுக்கள்… போன்ற முக்கிய முக்கிய வாழ்வியல் ஆதாரங்களுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ பூச்சிகளைச் சார்ந்துதான் இருக்கிறது, மனித இனம்.

தேனீக்களைக் காப்பாற்றுவதற்காக மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆகியன, ஐ.நா நிர்வாகத்தின் கீழ் ஜெர்மனியில் செயல்படும் பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழல் சேவைகள் குறித்த, அரசுகளுக்கிடையேயான அறிவியல் கொள்கைக்கான தளத்தின் (Inter-Governmental Science-Policy Platform on Bio-diversity and Ecosystem Services (IPBES), உதவியை நாடியுள்ளன. இந்த அமைப்பு பல நாட்டு ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து ஓர் ஆய்வை மேற்கொண்டு முடிவுகளை வெளியிட்டிருக்கிறது.

‘ஒற்றைப்பயிர் முறை இந்தப் பூச்சிகள் வாழ்வதற்கு ஏற்றது அல்ல’ என்பதுதான் அந்த ஆராய்ச்சியின் மிக முக்கிய முடிவுகளில் ஒன்று. ‘பூச்சிக்கொல்லிகள் தேனீ, வண்ணத்துப் பூச்சி உள்படப் பல பூச்சி இனங்களுக்கு மிகப்பெரிய எதிரி. ‘பூச்சிகொல்லிகளின் பயன்பாட்டு அளவைக் குறைப்பதுதான் விவசாயிகளின் முதல் நடவடிக்கையாக இருக்க வேண்டும்’ எனவும் அந்த அமைப்பு வலியுறுத்துகிறது.

மேலும் அந்த ஆய்வு முடிவில், ‘பூச்சிகள், குறிப்பாகத் தேனீக்கள் மற்றும் வண்ணத்துப்பூச்சிகளுக்கு ஏற்படும் ஆபத்து, உலகளாவிய அழிவுக்கான முதல்படி. சில பூச்சிக்கொல்லிகளில் உள்ள ரசாயனங்கள் முதலில் தேனீக்களின் நரம்பு மண்டலத்தைத் தாக்குகின்றன. பின் தேனீயினுடைய விந்தணுவின் தரத்தைக் குறைத்து இனப்பெருக்கத்தைத் தடுக்கின்றன. அதோடு, நினைவாற்றல் மற்றும் மூளையின் செயல்பாடுகளைச் செயல் இழக்கச் செய்கின்றன. இத்தகைய பூச்சிகளின் வாழ்விடங்கள் அழிக்கப்படும்போது பூச்சியினங்களுக்கு மிகப்பெரிய உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டு அவை பெயர்ந்து விட்டால், உணவு உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்படும்.

சிறந்த நில மேலாண்மை, ரசாயன பூச்சிக்கொல்லிப் பயன்பாட்டுக்கான கட்டுப்பாடுகளை உருவாக்குதல், காட்டில் உள்ள மகரந்தச்சேர்க்கையாளர்களுக்கான வாழ்வாதாரங்களை மீட்கும் நடவடிக்கை, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், மகரந்தச் சேர்க்கையாளர்களைப் பாதுகாத்துக் கண்காணிப்பதற்கான அவசர தேவையை மக்கள் அரசுகளுக்கு உணரவைத்தல் ஆகியவை அத்தியாவசியமான பணிகள். இவற்றைச் செய்யத்தவறினால், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பூச்சிகளின் உயிரிழப்பைத் தடுக்க இயலாது.

தரிசு நிலங்களைப் பூச்சிகளின் வாழ்விடங்களாக மாற்றுதல், தேனீக்களைப் பாதுகாப்பதில் உள்ள பாரம்பர்ய அறிவைப் பாதுகாத்தல், பூ பூக்கும் தாவரங்களைப் பெருக்குதல்… போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். சுற்றுச்சூழலின் பாதுகாப்பை அச்சுறுத்தும் சிக்கலான சவால்களை ஒருங்கிணைந்த பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடித்து மட்டுமே வெற்றியடைய முடியும்’ என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழல் சேவைகள் குறித்த, அரசுகளுக்கிடையேயான அறிவியல் கொள்கைக்கான தளத்தின் இந்த அறிக்கையை 124 நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. அவற்றில், 100 நாடுகள் இந்த அமைப்பின் உதவியை நாடியிருக்கின்றன. தற்போது, இந்த அமைப்பு, மற்ற நாடுகளுடன் இணைந்து, தொழில்நுட்பங்களை உருவாக்கித் தேனீக்களைப் பாதுகாக்கும் திட்டங்களைச் செயல் படுத்துவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது.

தற்போது, இந்தியாவிலும் தேனீக்களின் அழிவால் ஏற்படும் பிரச்னைகள் வெளித்தெரிய ஆரம்பித்துள்ளன. தேனீக்கள் வருகையின் வீழ்ச்சி காரணமாக ஏற்பட்ட மந்தமான மகரந்தச் சேர்க்கையால் காஷ்மீர் பகுதியில் ஆப்பிள் விளைச்சல் கணிசமாகக் குறைத்துள்ளது. வட இந்தியாவின் பல பகுதிகளில் கடுகு விளைச்சல் குறைந்துள்ளது. பூச்சிகளின் அழிவு, விவசாயப் பொருளாதாரத்தின் அடித்தளத்தையே அசைத்துவிடும் என்பது வட இந்திய விவசாயிகளுக்குத் தற்போது புரிய ஆரம்பித்துள்ளது. நம் நாட்டிலும் லட்சக்கணக்கான பறவைகள், வெளவால்கள், பூச்சிகள் மற்றும் மகரந்தச்சேர்க்கைக்கு உதவும் ஏராளமான உயிரினங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன.

இந்த மகரந்தச்சேர்க்கையாளர்கள், இந்தியாவில் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான முக்கியக் காய்கறிப் பயிர்கள் உற்பத்திக்கு உதவுகின்றன. மொத்தத்தில் 70 சதவிகிதப் பயிர்கள் இவற்றை நம்பியே உள்ளன. இந்தியாவிலும் கடந்த 2016-ம் ஆண்டில், பல்லுயிர்களின் ஆரோக்கியத்தை மதிப்பீடு செய்வதற்காக மத்திய அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம், நாட்டின் மிகப் பெரிய எட்டு சூழல் மண்டலங்களான மேற்கு இமாலயம், கிழக்கு இமயமலை, வட மேற்கு மண்டலம், மத்திய இந்தியக் காடுகள், மேற்குத்தொடர்ச்சி மலை, அந்தமான் நிக்கோபார் தீவுகள், ஜம்மு-காஷ்மீர், சுந்தர்பான் காடுகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, ‘இந்திய நீண்டகாலச் சூழலியல் இடங்களின் இணைப்பு’ என்ற அமைப்பை உருவாக்கியது.

அது மகரந்தச்சேர்க்கையாளர்களைப் பாதுகாக்க ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த அமைப்பு, அந்த மண்டலங்களில் உள்ள அனைத்து உயிர்களையும் மேலோட்டமாகக் கண்காணிக்க மட்டுமே உதவியது. ஆனால், வயல்வெளி அளவில் பூச்சிகளைப் பாதுகாப்பதற்கான செயல்பாடுகளை அது ஊக்குவிக்கவில்லை. அதன் முக்கியத்துவத்தை விவசாயிகள் மத்தியிலும் பிரபலமடையச் செய்யவில்லை.

ஒற்றைப்பயிர் சாகுபடிக்காகப் பூச்சிகளின் இயற்கையான வாழ்விடங்களின் பெரும்பகுதி அழித்துவிட்டோம். பூச்சிக்கொல்லிகளை அதிகமாகப் பயன்படுத்தி அவற்றின் உணவுகளை நஞ்சாக்கிவிட்டோம். அதனால், விவசாயிகளின் நண்பர்களான பூச்சிகள், நிலங்களிலிருந்து நிரந்தரமாக வெளியேற்றிவிட்டன. இந்தியாவில்தான் உலகிலேயே அதிக வகையான தேனீக்கள் உள்ளன. இவை, உணவுச் சங்கிலியின் ஒரு முக்கிய இணைப்பு. அதிக மகசூலுக்கும் மகரந்தச்சேர்க்கையாளர்களான பூச்சிகளுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது.

மகரந்தங்களை உண்டு தேனீக்கள் வெளியேற்றும் கழிவுகள், மிகச்சிறந்த இயற்கை உரம். தேனீக்கள் அவற்றின் கூட்டைச் சுற்றி 10 முதல் 30 மீட்டர் உள்ள தூரத்தைக் கழிப்பிடமாகப் பயன்படுத்துகின்றன, என்று தேனீ ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

‘தேன் மற்றும் மகரந்தம் நிறைந்த தாவரங்கள் உள்ள திறந்த வெளிப்பண்ணைகள், காட்டுப்பூ மண்டலங்கள் ஆகியவற்றை விவசாயிகளின் பங்களிப்புடன் உருவாக்க வேண்டும். அதற்கான நிதி மற்றும் தொழில் நுட்ப உதவிகளை அரசு அளிக்க வேண்டும். கிராம அளவில் இத்தகைய பணிகளை மேற்கொள்ள வேண்டும்’ என்று, ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

அரசு எடுக்க வேண்டிய கொள்கை முடிவுகள் பல இருந்தாலும், விவசாயிகளின் மனமாற்றம் தான், மகரந்தச் சேர்க்கையாளர்களான பூச்சிகளைக் காக்கும் முதல் நடவடிக்கையாக இருக்கும். ‘ரசாயன பூச்சிக்கொல்லிகளின் அளவைக் குறைப்போம்’ என்ற உறுதிமொழியை எல்லா விவசாயிகளும் எடுக்க வேண்டும். இல்லையென்றால், விவசாயிகள் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியையும், கடும் உணவு தட்டுப்பாட்டையும் சந்திக்க வேண்டிவரும். அனைவரும் இணைந்து எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டிய தருணம் இது…

தேனீ எந்திரன்கள்

டச்சு நாட்டில் உள்ள டெல்ஃ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மைக்ரோ ட்ரோன் எனப்படும் எந்திரத்தேனீயை வடிவமைத்துள்ளனர். 29 கிராம் எடையுள்ள இந்த ரோபோ 360 டிகிரி சுழன்று பறக்கக்கூடிய ஒரு மிகச்சிறிய சாதனம். இந்த எந்திரத் தேனீக்களில் உள்ள இறக்கைகளின் உதவியால் இவை வானத்தில் பறக்க இயலும். பழ ஈக்களின் பறக்கும் இயக்கங்களைப் பிரதிபலிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. தொலைதூர இயக்கி மூலம் இந்த எந்திரத்தேனீக்களை இயக்க முடியும்.

இவற்றின் மூலம் பசுமைக்குடில்களில் உள்ள பயிர்களில் மகரந்தச்சேர்க்கை செய்து பார்த்து வெற்றி கண்டுள்ளனர், விஞ்ஞானிகள். ஆரம்பக் காலங்களில் இத்தகைய மைக்ரோ ட்ரோன்களைப் பூகம்பத்தின்போது காணாமல் போனவர்களைத் தேடவும், கிட்டங்கிகளில் உள்ள தானியங்களின் கையிருப்பைக் கணக்கிடவும் பயன்படுத்தினர். தற்போது அவற்றில் சில மாற்றங்களைச் செய்து எந்திரத் தேனீக்களாகச் செயல்பட வைத்துள்ளனர். தேனீக்களின் பற்றாக்குறையை இந்த எந்திரன்கள் ஓரளவு நிவர்த்திச் செய்யும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பினாலும்… உயிருள்ள தேனீக்களின் அனைத்துப் பணிகளையும் இந்த எந்திரன்கள் செய்துவிடுமா என்பது, கேள்விக்குறிதான்.

நன்றி: விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *