கைநிறைய சம்பாதிக்க “கண்வலி’ கிழங்கு சாகுபடி

விவசாயிகள் பலர் கஷ்டப்பட்டு உழைத்தும் பலன்கிடைக்காமல், விவசாயத்தையே கைவிடும் நிலைக்கு ஆளாகி வருகின்றனர். சிலர் வாங்கிய கடனை திருப்பி தரமுடியாமல், தற்கொலை செய்யும் அளவுக்கு போய்விடுகின்றனர். சிலர் மட்டுமே, எந்த பருவத்தில் எதைச் செய்தால் லாபம் ஈட்டமுடியும் என அறிந்து, விவசாயத்தில் சாதனை புரிகின்றனர்.அந்தவரிசையில், ஒட்டன்சத்திரம் விராலிக்கோட்டை விவசாயி டி.சின்னச்சாமி மருத்துவ குணமிக்க “கண்வலி’ கிழங்கு சாகுபடியில் ஆண்டுதோறும் ரூ.பல லட்சம் வருமானம் பார்க்கிறார்.

எப்படி சாதித்தார் அவர்?

இதோ கூறுகிறார்: கண்வலி கிழங்கு சாகுபடிக்கு ஏற்ற மாதம் ஆடி, ஆவணி, புரட்டாசி தான். அந்த சமயத்தில் கிழங்குகளை நட்டால் தான் அடுத்த அடுத்த ஆண்டுகளில் பலன் நன்றாக கிடைக்கும். நான் மூன்று ஏக்கரில் நடவு செய்ய ஆந்திரா மாநிலத்தில் இருந்து ஒரு கிலோ ரூ.250 வீதம் 500 கிலோ “கண்வலி’ கிழங்குகள் வாங்கினேன்.சாகுபடிக்கு, நிலத்தில் சிறிய குழிதோண்டி கிழங்குகளை வரிசையாக புதைக்க வேண்டும். கம்பி, பந்தல் அமைக்க வேண்டும். நிறைய தண்ணீர் தேவை இல்லை. சொட்டுநீர் பாசனமுறை சிறந்தது.


மண்ணில் புதைத்த கிழங்குகள் 20 நாட்களில் துளிர்விட்டு, செடி பந்தலுக்கு வந்துவிடும். நான்கு மாதங்களில் பூத்து, காய்க்க துவங்கும், கோவைப் பழம் போல காய்கள் இருக்கும். அவற்றை பறித்து தட்டி விதைகளை எடுத்து நன்றாக காயவைக்க வேண்டும். 500 கிலோ கிழங்கில் 300 கிலோ விதை கிடைக்கும்.

மருத்துவத்திற்காக கண்வலி கிழங்கு விதைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் திருப்பூர் மாவட்டம் மூலனூர் சந்தையில் ஒரு கிலோ ரூ.1200 முதல் ரூ.2000 வரை விலைகிடைக்கும். தொடர்ந்து அடுத்த ஆண்டில் ஆண்டிற்கு 100கிலோ கூடுதல் என மூன்று ஆண்டுகள் கண்வலி கிழங்கு செடி மூலம் ரூ.பல லட்சம் வருமானம் ஈட்டலாம். ஒரு ஏக்கருக்கு கிழங்கு கொள்முதல் செலவு போக மருந்து, உரம், காய்பறிப்பு கூலி என ரூ.50 ஆயிரம் வரை செலவாகும்.முதல் ஆண்டு ஓர் அளவிற்கு தான் லாபம் கிடைக்கும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் மருந்து, உரமிட்டு கண்ணும் கருத்துமாக வளர்த்தால் ரூ.பல லட்சம் லாபம் ஈட்டலாம். கண்வலி கிழங்குக்கு கரிசல் மண் ஆகாது. கச்சமண், செம்மண், மலமண் ஏற்றது. மேற்சொன்ன பருவத்தே கண்வலி கிழங்கு “கரெக்டா’ சாகுபடி செய்தால் கைநிறைய பணம் அள்ளலாம், என்றார்.

டி.சின்னச்சாமி
விராலிக்கோட்டை
ஒட்டன்சத்திரம்
திண்டுக்கல் மாவட்டம்
  தொடர்புக்கு : 09786799763

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *