வேளாண் வருவாய் பெருக சில சிந்தனைகள்

கி. சிவசுப்பிரமணியன்

இந்தியாவின் முதுகெலும்பு வேளாண்மை. மூன்றில் இரண்டு பங்கு மக்களின் வாழ்வாதாரமாகவும், தொழில்துறைக்கான மூலப் பொருள்களை வழங்கும் துறையாகவும், மொத்த விவசாயிகளில் 75 சதவிகிதத்திற்கு மேல் சிறு மற்றும் குறு விவசாயிகளைக் கொண்டுள்ள தொழிலாகவும் வேளாண்மை விளங்குகிறது.

இதுபோன்ற இந்திய வேளாண்மை பற்றிய கருத்துகளைப் பல ஆண்டுகளாக அனைவரும் அறிவோம். ஆனால், வேளாண்மையின் நிலை இப்போது தலைகீழாக மாறிச் சென்று கொண்டுள்ளது.

இந்நிலை எங்கு சென்று நிற்கும் என்பதைப் பற்றி அறுதியிட்டுக் கூறும் நிலையில் விஞ்ஞானிகளும் இல்லை.

சுருங்கக்கூறின், இப்போதைய விவசாயம், ஒவ்வொரு விவசாயியின் தன்னிறைவுத் தேவைக்காக செய்யப்படும் “லாபமற்ற தொழிலாகவே’ உள்ளது.

ஒவ்வொரு விவசாயியும், தன்னுடைய மற்றும் குடும்பத்தாரின் உடல் உழைப்பை முழுமையாகத் தியாகம் செய்தே வேளாண் உற்பத்தியைச் செய்து வருகின்றனர். ஏனெனில், முதலாளித்துவ வேளாண்மையில், இப்போதைய நிலையில், உடல் உழைப்பைக் கணக்கிட்டால் அது வெறும் பூஜ்ய ஊதியத் துக்கே சமமானதாக உள்ளது.

1960-களில் “பசுமைப் புரட்சி’யின் மூலம் வேளாண்மையில் ஏற்பட்ட வளர்ச்சி இப்போது பொலிவிழந்து, கடந்த 10-15 ஆண்டுகளாக “கடமை’ விவசாயம் செய்யும் நிலைக்கு பெருவாரியான விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். எதற்காக விவசாயம் செய்கிறோம் என்ற அடிப்படையைக் கூட புரிந்து கொள்ள இயலாத நிலையில் விவசாயம் நடைபெற்று வருகிறது.

இதனால் வேளாண்மையில் லாபம் ஈட்டுவதற்குப் பதிலாக நஷ்டத்தையே சந்திக்கும் சூழ்நிலையில் சிறு மற்றும் குறு விவசாயிகள் உள்ளனர்.     நடுத்தர மற்றும் பெரு விவசாயிகள் தங்களது சொற்ப பண பலத்தால் எதிர்நீச்சல் போட்டு விவசாயம் செய்கின்றனர்.

இப்படிப்பட்ட நிலையில் பெரும் மாறுதல்கள் ஏற்படும் காலம் தொலைவில் இல்லை.

வேளாண்மையை “இயற்கையின் சூதாட்டம்’ என்பர். ஏனெனில் பருவமழை பொய்த்தாலோ அல்லது பேரளவு மழைபெய்து வெள்ளச் சேதம் ஏற்பட்டாலோ அல்லது சூறாவளியால் பயிர் பாதிக்கப்பட்டாலோ விவசாயத்தில் மிஞ்சுவது நஷ்டமே.

இப்போது இந்திய மக்களில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்களில் ஏறத்தாழ 90 சதவிகிதம் பேர் வேளாண்மையைச் சார்ந்தவர்களே.

இந்தியாவின் உணவு உற்பத்தி 1994-95-ல் 167.2 மில்லியன் டன்னிலிருந்து 2007-08-ல் 230.8 மில்லியன் டன்னாக அதிகரித்தது.   ஆனால், இதே காலத்தில் தமிழகத்தின் உணவு உற்பத்தி முறையே 18.8 மில்லியன் டன்னிலிருந்து 16.3 மில்லியன் டன்னாகக் குறைந்துள்ளது.

இந்தியாவின் நிகர சாகுபடிப் பரப்பு 2000-01-ல் 141.4 மில்லியன் ஹெக்டேரிலிருந்து 140.9 மில்லியன் ஹெக்டேராகக் குறைந்துள்ளது. இதே காலத்தில் தமிழகத்தின் சாகுபடிப் பரப்பு 5.3 மில்லியன் ஹெக்டேரிலிருந்து 5.1 மில்லியன் ஹெக்டேராகக் குறைந்துள்ளது.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், நாடு முழுவதும் வேளாண் விளைநிலம் மிக வேகமாகக் குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று “ரியல் எஸ்டேட்’ எனப்படும் வீட்டு மனைகள், வேளாண் நிலங்களில் பெருவாரியாக நாடு முழுவதும் உருவாக்கப்பட்டு வருவதே ஆகும்.

பசுமைப் புரட்சியின் வெற்றிக்கு வழிவகுத்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் கூறும் முக்கிய கருத்துப்படி இந்திய விவசாயிகள் தங்களது வேளாண் விளைபொருள்களை உடனடியாகச் சந்தைப்படுத்தாமல் அந்த விளைபொருள்களின் தரத்தை மேம்படுத்தும் உத்திகளை மேற்கொண்டு அதன் பின்பு விளைபொருள்களை சந்தைப்படுத்தினால் வருவாய் கணிசமாகப் பெருக வாய்ப்பு உள்ளது.

உதாரணமாக, நெல் அறுவடை முடிந்த உடனே அதனை விற்றால் உரிய விலை கிடைப்பதில்லை. ஒரு சில மாதங்கள் அதை இருப்பு வைத்து விற்றால் அதிக விலை கிடைக்கிறது.

அதேபோல, பல்வேறு விவசாயிகள் நெல்லி மரம் பல ஏக்கரில் சாகுபடி செய்து நெல்லிக் காய்களை எப்படி சந்தைப்படுத்துவது எனத் தெரியாமல் –  அறியாமல், விளைந்த காய்களை மரத்திலேயே அப்படியே விட்டு விடுகின்றனர். ஆனால், நீரிழிவு நோய்க்கான அருமருந்தாக உதவும் “நெல்லிச் சாறு’ ஆயுர்வேதக் கடைகளில் ஒரு லிட்டர் ரூ.240-க்கு விற்கப்படுகிறது. இதை உற்பத்தி செய்வதற்கான அடிப்படையாக உள்ள நெல்லிக்காயின் விலை வெறும் 20 ரூபாய் மட்டுமே. பல இடங்களில் இந்த “நெல்லிச் சாறு’ கிடைக்காத சூழ்நிலை உள்ளது.

சுருங்கக் கூறின், விளைந்த வேளாண் பொருள்களை மக்களின் தேவைக்கேற்ப எப்படி சந்தைப்படுத்துவது என்பது பெருவாரியான விவசாயிகளுக்குத் தெரியவில்லை. இதனால் அவர்கள் உற்பத்தி செய்த பொருள்களில் நஷ்டம் அடைகின்றனர்.

இதுபோன்ற நுட்பமான விஷயங்கள் தவிர விளைபொருள்களின் விலை ஏற்றத்தாழ்வுகள் சாகுபடியாளர்களைக் கடுமையாகப் பாதிக்கிறது.    உதாரணமாக, நாம் அன்றாடம் பயன்படுத்தும் தக்காளி, பீன்ஸ், மிளகாய் போன்ற பல்வேறு காய்கறிகளைக் கூறலாம்.

இக்காய்கறிகள் தொடர்ந்து சீராக சந்தைக்குக் கிடைக்கும் வழிவகைகளை விவசாயிகள் கலந்து ஆலோசித்து அதன்படி சாகுபடி முறைகளைக் கையாண்டால் விலை வீழ்ச்சியைத் தடுக்க முடியும்.

பொருளாதாரத்தின் அடிப்படைக் கோட்பாடான சந்தைகளின் தேவை – அளிப்பு இவற்றின் நிலையைப் பொருத்தே இன்றளவும் வேளாண் பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. எனவே இந்த தேவை – அளிப்பு நிலையை விவசாயிகள் கூர்ந்து கவனித்து உற்பத்தியைத் திட்டமிட்டு அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ வேண்டும்.

ஆனால், இப்போதைய சூழ்நிலையில் விவசாயிகள் அனைவரும் ஒன்றுபட்டு இந்த மேம்பட்ட நிலைக்கு வருவதற்கு கடும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, ஆங்காங்கே திறமையான விவசாய சங்கங்களை ஏற்படுத்தி பெருவாரியான உற்பத்தி விவசாயிகள் அதன் தீவிர அங்கத்தினர்களாகி மேற்கூறப்பட்ட தேவை – அளிப்பு நிலைகளை செயல்படுத்தினால் அதன் மூலம் வருவாய் பெருகி நிச்சயம் அவர்களின் வாழ்வு வளம் பெருகும்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “வேளாண் வருவாய் பெருக சில சிந்தனைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *