'இயற்கை விவசாயத்தில் மட்டுமே விலையை விவசாயிகள் நிர்ணயிக்க முடியும்!'

ஈரோட்டில் நடைபெற்று வரும் ‘பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ 2015’ ன் இரண்டாம் நாள் அன்று ,  ஆயிரக்கணக்கான விவசாயிகள் வந்து சென்று கொண்டிருக்கின்றனர்

இடு பொருட்கள் விற்பனை, வீட்டுத்தோட்ட உபகரணங்கள் அரங்குகள் மக்கள் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளன. மற்ற அரங்குகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. கோவை பண்பலை வானொலியில் சொல்லியது போல ‘மண்ணின் வளமே மக்கள் வளம்’ என்ற கொள்கை பிடிப்பில் பசுமை விகடன் முனைப்பாக இருந்து வருகிறது. அதை விவசாயிகளும் நிரூபித்து வருகின்றனர். கண்காட்சி, கருத்தரங்கு இரண்டிலும் விவசாயிகளும், பொதுமக்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டு வருகிறார்கள்.

பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ காலை அமர்வில் பேசிய திண்டுக்கல் மாவட்ட நீர்வடிப்பகுதி வேளாண்மை பொறியாளர் பிரிட்டோ ராஜ், “மழைக் காலங்களும், மழை நாட்களும் பொய்த்துவிட்டன. வீட்டின் குடிநீர் தேவைக்கு மட்டுமே தண்ணீரை பற்றி கவலைப்படுகிறோம். விவசாயத்துக்கு தண்ணீர் இல்லை என்ற கவலை நமக்கு இல்லை. ஹோட்டல் விலைப்பட்டியலில் இன்னும் இரண்டு ஆண்டுகளில் தண்ணீரும் இடம் பிடித்துவிடும். இது கண்டிப்பாக நடக்கும். தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 575 மி.மீ. மழை பெய்கிறது. 400 மி.மீ மழை இருந்தாலே விவசாயத்தை காப்பாற்றிவிட முடியும்.

வேளாண்மைக்கு அடிப்படை நீர். போர்வெல் அருகே, மழைநீர் சேகரிப்பு குழிகளை அமைத்தால் மழைநீரை சேகரிக்க முடியும். 10 வருஷத்துக்கு முன்பு 300-350 அடிக்குள் தண்ணீர் கிடைக்கும். தற்போது 1000 அடிக்கு மேல் தோண்டினால்தான் தண்ணீர் கிடைக்கிறது. நிலத்தடி நீரை அதிகரிக்க வேண்டுமானால், மழை நீரை பூமிக்குள் கொண்டு போயாக வேண்டும். முதல் ஊற்று 42 அடியில் கிடைக்க ஆரம்பிக்கிறது, கடைசி ஊற்று 550 அடியில் கிடைக்கும். இதனால் பூமியில் தண்ணீரை அதிகப்படுத்துவது அவசியம்.

விவசாயிகள் தண்ணீருக்கு அரசிடம் கேட்க வேண்டாம். உங்கள் நிலங்களில் பண்ணைக்குட்டை, நீர்த்தேக்கங்களை அமைத்தாலே நிலத்தடி நீரை அதிகப்படுத்தலாம்” என்றார்.

ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கார்த்திகேயன் பேசும்போது, “ராகி, கம்பு போன்ற நம்முடைய பாரம்பரிய விவசாயத்தை எப்போது மறந்தோமோ, அப்போதே நம்முடைய அனுபவ படிப்பை விட்டுட்டோம். அதனால் நிலத்தில் ரசாயன உரங்களை கொட்டி பயிர் விளைவிக்கிறோம். பழைய ஆட்கள் 70 வயதில் கூட விவசாயத்தை பார்க்கிறார்கள். இந்த தலைமுறை ஆட்கள் மூணு மாடி ஏறுறதுக்கு கூட சிரமப்படுகிறார்கள். குடிநீர், காற்று எல்லாம் மாசில்லாமல் கிடைக்க வேண்டும். ஆனால் இரண்டையும் மாசு படுத்திட்டு இருக்கோம்.

விவசாயிகளே இன்றைக்கு ஒரு மருத்துவரா இருக்க வேண்டும். அப்போதுதான் நல்ல பொருளை உற்பத்தி செய்ய முடியும். நம்மிடையே வளமான மண் இருக்கு. அதுக்கு என்ன வேணுமோ அதை செய்ய வேண்டும். அதுக்கு எதிராக ஏதாவது செய்தால் நம்மையே மீண்டும் எதிர்க்கும். அதனால முடிந்தளவு இயற்கை உரங்களை பயன்படுத்துங்கள். நமக்கான நல்ல உணவை நாம்தான் உற்பத்தி செய்ய வேண்டும்” என்று வாஞ்சையோடு வேண்டுகோள் வைத்தார்.

திருப்பூரைச் சேர்ந்த பந்தல் காய்கறி விவசாயி கேத்தனூர் பழனிச்சாமி பேசும்போது, “விவசாயிகள் தங்களோட காய்கறிகளுக்கு தாங்களே விலை நிர்ணயிக்க வேண்டும். அதற்கு இயற்கை விவசாயம் செய்தால் மட்டுமே முடியும். என்னோட நிலத்தில் பீர்க்கன் காய் ஒரு கிலே 35 ரூபாய் என்றால் அந்த விலைக்குத்தான் வாங்க வேண்டும். விவசாயிகள் நேரடி விற்பனையில் ஈடுபட வேண்டும். விளைவிக்கும் காய்கறிகளின் தரம் ரொம்ப முக்கியம்.

விதைகளை நடவு செய்வதற்கு முன் விதை நேர்த்தி முக்கியம். இயற்கை விவசாயத்தில் பயிர் செய்தால் 5 ஆண்டுகளுக்கு மேல் நில வள ஊக்கியாக நிலம் மாறிவிடும். இதுதான் இயற்கை விவசாய வெற்றிக்கான வழி. பண்ணைக்கு வெளியே இடுபொருட்கள் வாங்குவதை நிறுத்துங்கள். நாட்டுமாடுகள்தான் உங்கள் நண்பன்” என்றார்.

நன்றி – விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *