ஒரே இடத்தில் உளுந்து, வெண்டை, தக்கைப்பூண்டு சாகுபடி சாதனை

மூன்றரை ஏக்கர் நிலத்தில் உளுந்து, வெண்டைக்காய், தக்கைப்பூண்டு என கிணற்று நீரை பயன்படுத்தி அடுத்தடுத்து சாகுபடி செய்து கோடையிலும் விவசாயத்தில் குன்றாத வருமானம் ஈட்டி வருகிறார் மதுரை திருப்பாலையை சேர்ந்த ஆசிரியை பிரசன்னா. இவர் எம்.எஸ்ஸி., (இயற்பியல்) மற்றும் பி.எட்., பட்டங்கள் பெற்று திருப்பாலை நல்லமணி அரசு உயர் நிலைப்பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

மதுரை அருகே வீரபாண்டியில் தனது மூன்றரை ஏக்கர் விவசாய நிலத்தில் ஒன்றரை ஏக்கரில் உளுந்து விதைப்பண்ணை, அரை ஏக்கரில் வெண்டைக்காய், ஒன்றரை ஏக்கரில் மண்ணுக்கு வலு சேர்க்கவும், நுண்ணுாட்ட சத்துக்களை அதிகளவு கொடுக்கும் தக்கைப்பூண்டு சாகுபடி செய்து வருகிறார். உளுந்து விதைப்பண்ணை அமைத்து வேளாண்மைத்துறைக்கு சான்றளிக்கப்பட்ட ‘பம்பல் – 6’ ரக உளுந்து விதைகளை வழங்கி வருகிறார்.

முற்றிய வெண்டைக்காய்களை வட்ட வடிவில் நறுக்கி வத்தல், மோர் வத்தல் என மதிப்பூட்டி கூடுதல் விலைக்கு விற்கிறார். வேளாண் விளை பொருட்களில் சிறு சிறு தொழில்நுட்பங்களை புகுத்தி விவசாயத்தில் கூடுதல் வருவாய் ஈட்டி வருகிறார்.

பிரசன்னா கூறியதாவது:

  • குலத்தொழிலான விவசாயமும், ஆசிரியை பணியும் எனது இரு கண்கள் போன்றது. நெல்லில் அதிக விளைச்சல் கண்டதற்காக முன்பு தமிழக அரசின் விவசாய சாதனையாளர் விருதும், ரூ.5 லட்சம் பொற்கிழியும் பெற்றுள்ளேன்.
  • விவசாயத்தில் எதாவது புதுமையை புகுத்த வேண்டும் என்பதற்காக ஓய்வு நேரங்களில் வயல்களில் களம் இறங்கி விவசாயியாக மாறி விடுகிறேன்.
  • தற்போது மேற்கு வட்டார உதவி வேளாண் அலுவலர் கண்ணன் ஆலோசனைப்படி உளுந்து பண்ணை அமைத்து வேளாண்மைத் துறைக்கு தரமான விதைகளை வழங்கி வருகிறேன்.
  • வெண்டைக்காய் கிலோ ரூ.10 விலையில் விற்பதால் நஷ்டம் ஏற்பட்டது. எனவே, காய்களை நன்கு முற்ற வைத்து மதிப்பூட்டி வத்தலாக மாற்றி விற்பதால் கூடுதல் லாபம் கிடைக்கிறது.
  • மண் வளம் காக்க ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை முற்றிலும் தவிர்த்து விட்டேன். இதற்காக இயற்கையின் அருங்கொடையாக கருதப்படும் தக்கைப்பூண்டை ஒன்றரை ஏக்கரில் விதைத்துள்ளேன்.
  • பூக்கும் தருணத்தில் நிலத்தில் மடக்கி உழவடை செய்தால் மண் வளம் பெருகும்.
  • பயிர்களுக்கு தேவையான நுண்ணுாட்ட சத்துக்கள் கிடைக்கும். இயற்கை உரங்கள், இயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி வேளாண் விளை பொருட்களை விற்பனை செய்வதால் மவுசு அதிகரித்து வருகிறது என்றார்.

ஆலோசனைக்கு 9865582999.

கா.சுப்பிரமணியன்

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *