கருவேலம் காடாகிய நீர் நிலைகளால் ஆபத்து

கடலூரில் வெள்ளம் ஏற்பட்டு அதிக அளவில் விளைநிலங்கள் பாதிக்க பட்டுள்ளது என்பதை அறிவோம். அதற்கான பெரிய காரணம் என்ன தெரியுமா?

அதிக அளவில் ஒரே நாளில் மழை பெய்தது என்பது ஒரு காரணம். ஆனால் பெய்த மழை நீர் வாய்கால், நதிகள் மூலம் ஏரிகளை அடைந்திருக்க வேண்டும்

ஆனால் அரசின் மெத்தன நடவடிக்கையால் நீர் பாயும் இடங்களை தூர் வாராமல், கருவேல மரங்களை வளர்க்க விட்டு நீர் போக வழியை அடைத்து வெள்ளம் பாய்ந்து இருக்கிறது. இதை பற்றிய செய்தி, வெள்ளம் வருவதற்கு முன்பே இந்த ஆபத்து பற்றி அக்டோபர் 28 தேதியே தினமலரில் வந்துள்ளது..

கருவேலம் காடாகிய நீர் நிலைகளால் ஆபத்து! தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழும்

கடலுார் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீர் நிலைகள் பராமரிப்பின்றி கருவேலங்காடுகளாக மாறி வருவதால் துவங்கியுள்ள வடகிழக்கு பருவமழை காலத்தில் கிடைக்கும் மழை நீரை சேமிக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளதோடு, கனமழை பெய்து மழைநீர் வடிய வழியின்றி பெரும் பாதிப்பு ஏற்படும் ஆபத்து நிலவி வருகிறது.

கடலோரத்தில் அமைந்துள்ள கடலுார் மாவட்டத்தில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. மாவட்டத்தில் 7.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது. இதில் 2 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் ஆறுகள், ஏரி மற்றும் குளங்கள் மூலம் பாசன வசதி பெற்று வருகிறது.

பிற விளை நிலங்கள் அனைத்தும் ஆழ்குழாய் மூலமே பாசன வசதி பெற்று வருகின்றன.

இதன் காரணமாகவும், மாவட்டத்தில் மக்கள் தொகை பெருக்கம் காரணமாகவும் நிலத்திடி நீரை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.

கருவேல காடான நதி கரைகள் Courtesy: Dinamalar
கருவேல காடான நதி கரைகள் Courtesy: Dinamalar

 

 

 

 

 

 

 

 

 

மாவட்டத்தின் விவசாய தேவைக்காக மழை நீரை சேமித்து வைத்து, கோடை காலத்தில் பயன்படுத்தும் வகையில் பொதுப்பணித்துறை பராமரிப்பில் வீராணம், பெருமாள், வெலிங்டன் மற்றும் வாலாஜா போன்ற பெரிய ஏரிகள் உட்பட 229 நீர் நிலைகளும், ஊராட்சி நிர்வாகங்களின் கீழ் 674 குளம், குட்டைகள் உள்ளன. இவைத் தவிர வருவாய் மற்றும் கோவில் குளங்களும் உள்ளன.

இந்த நீர் நிலைகளுக்கு மழை நீரைக் கொண்டு வரவும், நிரம்பினால் உபரி நீரை வெளியேற்றி வேறு நீர் நிலையை நிரப்பும் வகையில் கால்வாய் வசதிகளை நமது முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்துள்ளனர்.

நீர் நிலைகளையும், நீர் வரத்து வாய்க்கால்களையும் நமது முன்னோர்கள் ஆண்டிற்கு ஒருமுறை (கோடை காலத்தில்) துார் வாரி ஆழப்படுத்தி சுத்தம் செய்து வைத்தனர்.

காலப்போக்கில் இந்த மராமத்து பணியை அரசு மறந்துவிட்டனர்.

இதனால், பெரும்பாலான நீர் நிலைகளும், நீர் வரத்து வாய்க்கால்களும் துார்ந்து விட்டதோடு, கருவேலம் காடுகளாக மாறியுள்ளது.

இதனால், மாவட்டத்தில் நேற்று முன்தினம் துவங்கியுள்ள வடகிழக்கு பருவமழையில் கிடைக்கும் நீரை, நீர் நிலைகளில் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியே சேரும் மழை நீரையும், நீர் நிலைகளில் அடர்ந்து வளர்ந்துள்ள கருவேல மரங்கள் உறிஞ்சிவிடும் என்பதால், மழை நீர் வீணாகும் ஆபத்து உள்ளது.

இப்போது கரை புரண்டு ஓடும் நதிகள் Courtesy: Indian Express
இப்போது கரை புரண்டு ஓடும் நதிகள் Courtesy: Indian Express

 

 

 

 

 

 

 

மாவட்டத்தில் முக்கிய ஆறுகளான பெண்ணையாறு, கெடிலம், மணிமுக்தாறு, வெள்ளாறு மற்றும் பாசன வடிகால் வாய்க்கால்கள் துார்ந்தும், கருவேலம் மரங்கள் அடர்ந்தும் வளர்ந்துள்ளதால், கனமழை பெய்தால் மழைநீர் வழிந்தோட வழியின்றி அருகாமையில் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது

ஆபத்தை உணர்ந்து மாவட்ட நிர்வாகம் இனியேனும் நீர் நிலைகள், பாசன மற்றும் வடிகால் வாய்க்கால்களில் உள்ள கருவேல மரங்களை அகற்றிட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *