தென்னை, பாக்கு, ஜாதிக்காய், மங்குஸ்தான், நார்த்தை… ஊடுபயிர் சாகுபடி அசத்தல்!

பழங்களின் அரசியான மங்குஸ்தான், ஜாதிக்காய் சாகுபடியில் அசத்தி வருகிறார் திண்டுக்கல்லைச் சேர்ந்த முன்னோடி விவசாயி ரசூல்.

தென்னை, லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருக்கிறது. அதிலும் ஊடுபயிர் மூலமாக வருமானத்தை அதிகரித்துக்கொள்கின்றனர். தேக்கு, பப்பாளி, மாட்டுத்தீவனம் என ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ற வகையில் ஊடுபயிர் மாறுபடுகிறது. தென்னந்தோப்பில் மைக்ரோ கிளைமேட் உருவான பண்ணைகளில் பாக்கு, மிளகு உள்ளிட்ட பயிர்களைச் சாகுபடி செய்கிறார்கள். அந்த வகையில், தனது தென்னந்தோப்புக்குள் பாக்கு, மிளகு பயிர்களுடன் ஜாதிக்காய், மங்குஸ்தான் பயிர்களையும் சாகுபடி செய்து மகசூல் எடுத்து வருகிறார் திண்டுக்கல் சித்தையன்கோட்டையைச் சேர்ந்த முன்னோடி விவசாயி ரசூல் மொகைதீன்.

ரசூல்

ரசூல்

“பரம்பரையா விவசாயம்தான் எங்க தொழில். இப்ப என்னோட பசங்களையும் விவசாயத்துல ஈடுபடுத்திட்டு இருக்கேன். எங்கப்பா அப்துல் காதர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். ஆனாலும், `தான் ஒரு விவசாயி’ங்கிறதைத்தான் பெருமையாகச் சொல்வார். அதனாலதான் என்னையும் விவசாயியா உருவாக்குனாரு. எனக்கு ரெண்டு பசங்க. பெரிய பையன் சாகுல் ஹமீது, டிகிரி முடிச்சிட்டுப் பெட்ரோலியம் கம்பெனியில வேலை பார்த்துட்டு இருந்தாரு. இப்ப அந்த வேலையை விட்டுட்டு, முழு நேர விவசாயியா இருக்கார். சின்ன பையன் முகைதீன் அப்துல் காதர், முதுகலை சமூக சேவை படிப்பு முடிச்சிட்டு, மும்பையில ஒரு கம்பெனியில வேலை பார்த்துட்டு இருக்காரு. அவரும் கூடிய சீக்கிரம் விவசாயத்துக்கு வந்திடுவாரு” – அறிமுகப்படுத்திக் கொண்ட ரசூல், தோப்புக்குள் நடந்துகொண்டே பேசத் தொடங்கினார்.

ரசூல் தோப்பு

ரசூல் தோப்பு

தோப்பு முழுக்க மரங்கள். வானைத் தொடும் எண்ணத்தில் தன்னை நீட்டிக்கொண்டே போகும் தென்னை, அதற்கு இடைப்பட்ட இடங்களில் பாக்கு. இவை இரண்டும் தோப்புக்குள் அதிக வெயில் படாமல் இதமான சூழலை உருவாக்குகின்றன. ஒரு பக்கம், பலா காய்த்துத்தொங்குகிறது. காப்பி செடி முழுக்க காய்கள், நார்த்தை மரங்கள், செம்மரம், மகோகனி, குமிழ், தேக்கு என மரங்களில் மாநாடு நடப்பது போன்ற காட்சி. இதற்கிடையில் ஜாதிக்காய் மரங்கள், மங்குஸ்தான் மரங்களும் அணிவகுத்து நிற்கின்றன. ஜாதிக்காய் மரங்களில் மரம் முழுக்க காய்கள் தொங்கிக்கொண்டிருந்தன. தோப்பு முழுக்க மண்புழுக்களின் எச்சங்கள்.

ஜாதிக்காய்

ஜாதிக்காய்

தென்னை, பாக்கு, ஜாதிக்காய், மங்குஸ்தான், நார்த்தை எனப் பல வகையில் வருமானம் எடுத்துக்கொண்டிருக்கிறார். “ஜாதிக்காய் ஒரு அருமையான பயிர். இதைத் தனிப்பயிரா சாகுபடி செய்ய முடியாது. தென்னை மரத்துக்கு ஊடுபயிரா சாகுபடி செய்யலாம். அதுவும், இளம் தென்னையில சாகுபடி செய்ய முடியாது. நல்லா வளர்ந்த நிழல் இருக்க தோப்புலதான் வளர்க்கணும். இதுக்கு பூச்சி, நோய் தாக்குதல் இருக்காது. பராமரிப்பு பிரச்னையில்லை. தென்னைக்குப் பாசனம் செய்யும்போதே இதுக்கும் பாசனம் ஆகிடும். ரொம்ப தண்ணியும் இதுக்கு ஆகாது. நடவு செஞ்சதுல இருந்து 7 வருஷத்துக்குப் பிறகுதான் நல்ல மகசூல் கிடைக்கும். அதிலிருந்து 300 வருஷம் வரைக்கும் மகசூல் எடுக்கலாம்னு சொல்றாங்க.

என்னோட தோப்புல இதுக்கு இதுவரை நோயே தாக்குனதில்லை. ஜாதிக்காய்ல ஆண் மரங்களும் காய்க்கும். ஆனா, அந்தக் காய் சரியான வடிவத்துல இல்லாம ஒழுங்கீனமா இருக்கும். நல்லா காய்க்கிற மரத்துல இருந்து பட்டை எடுத்து, ஆண் மரங்கள்ல பரு ஒட்டு முறையில ஒட்டு கட்டினா, அந்த மரமும் பெண் மரமா மாறிடும். ஆனாலும், மகரந்தச்சேர்க்கைக்காகக் குறிப்பிட்ட எண்ணிக்கையில ஆண் மரங்களைப் பராமரிக்கணும்” என்றவர் வருமானம் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

ஜாதிக்காய் மரங்கள்

ஜாதிக்காய் மரங்கள்

ஜாதி ‘பத்ரி’ ரெண்டு கிலோ கிடைக்கும். ஒரு கிலோ 1,500 ரூபாய் முதல் 3,000 வரை விலை கிடைக்கும். சராசரியாக 1,500 ரூபாய் என வைத்துக்கொண்டால், 3,000 ரூபாய் கிடைக்கும். ஆக, ஒரு மரத்திலிருந்து 5,000 ரூபாய் நிச்சயம் கிடைக்கும்.

ரசூல் மொகைதீன்

“ஒரு மரத்திலிருந்து 20 கிலோ ஜாதிக்காய் கிடைக்கும். ஒரு கிலோ 1,000 ரூபாய் வரை விற்பனையாகும். அதன் மூலம் 2,000 ரூபாய் கிடைக்கும். ஜாதி ‘பத்ரி’ ரெண்டு கிலோ கிடைக்கும். ஒரு கிலோ 1,500 ரூபாய் முதல் 3,000 வரை விலை கிடைக்கும். சராசரியாக 1,500 ரூபாய் என வைத்துக்கொண்டால், 3,000 ரூபாய் கிடைக்கும். ஆக, ஒரு மரத்திலிருந்து 5,000 ரூபாய் நிச்சயம் கிடைக்கும். என்னிடம் உள்ள 100 மரங்கள் மூலம் ஆண்டுக்கு 5,00,000 ரூபாய் வருமானம் கிடைக்கும்” என்றவர் மங்குஸ்தான் பற்றிய தகவல்களையும் பகிர்ந்துகொண்டார்.

மங்குஸ்தான்

மங்குஸ்தான்

“என்னோட பிரதான பயிர் தென்னைதான். 100 வயதான தென்னை மரங்கள்கூட என்கிட்ட இருக்கு. தென்னைக்கு செய்ற பராமரிப்புல பல ஊடுபயிர்களை சாகுபடி பண்றேன். ஜாதிக்காய் போலவே, 100 மங்குஸ்தான் மரங்கள் வெச்சிருக்கேன். 8 வருஷத்துக்கு முன்ன நடவு செஞ்சது. இந்த வருஷம்தான் முதல் மகசூல் கிடைச்சிருக்குது. 100 மரங்கள் நடவு செஞ்சேன். 70 மரங்கள் பிழைச்சது. அதுல 30 – 40 மரங்கள்லதான் மகசூல் வந்திருக்கு. அடுத்த வருசம் எல்லா மரங்களும் காய்ச்சிடும்னு நினைக்கிறேன், இது நல்ல மகசூல் கொடுக்க 10 வருசம் ஆகும். பிறகு 100 வருசம் வரைக்கும் மகசூல் கொடுக்கும்.

மங்குஸ்தான், இதைப் பழங்களின் அரசின்னு சொல்றாங்க. இது பொள்ளாச்சியில சில விவசாயிகளின் தோட்டத்துல இருக்கு. அதைத்தாண்டி தமிழ்நாட்டுல வேற எங்கயும் இருக்குற மாதிரி தெரியலை. கேரளாவுலதான் இதை அதிகம் சாகுபடி செய்றாங்க. இதுக்கு எந்தப் பராமரிப்பும் தேவையில்லை. பூச்சி, நோய் தாக்குதல் இல்லை. உரம் தேவையில்லை. நன்றாக வறட்சியைத் தாங்கும். 1,125 அடி உயரத்தில் தென்னைக்கு இடையில் நடவு செய்திருக்கிறேன். ஒரு மரத்துக்கு 150 முதல் 200 காய்கள் வரைக்கும் காய்க்கும்.

ரசூல், சாகுல் ஹமீது

ரசூல், சாகுல் ஹமீது

ஒரு கிலோ எடையில் 10 முதல் 15 காய்கள் நிற்கும். வியாபாரிகள் கிலோ 200 ரூபாய் விலையில் வாங்கிக்கொள்கிறார்கள். சராசரியாக 10 கிலோ மகசூல் கிடைத்தாலும் ஒரு மரத்திலிருந்து 2,000 ரூபாய் வருமானமாகக் கிடைக்கும். தென்னை, பாக்கு பராமரிப்பிலேயே இது வளர்ந்து வருமானம் தருகிறது. எனவே வாய்ப்புள்ள விவசாயிகள் இதைச் சோதனை அடிப்படையில் நடவு செய்து பார்த்து, அதன் பிறகு அதிக அளவில் சாகுபடி செய்யலாம்” என்றார்.

நன்றி: பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *