நல்ல வருமானம் தரும் பசுமைக் குடில் விவசாயம்!

10 மாதத்தில் 13 லட்சம் ரூபாய் வருமானம் தரும் பசுமைக் குடில் விவசாயம்!
பசுமைக் குடில் விவசாயத்தில் மலர்கள், காய்கறிகள் ஆகியவற்றை விளைவிக்க முடியும். இது முற்றிலும் பாரம்பர்ய வேளாண்மையிலிருந்து வேறுபடும் ஒரு வழிமுறையாகும்.புனேவின் கட்பன்வாடி கிராமம் இரண்டு காரணங்களுக்காக அறியப்படுகிறது. முதல் காரணம் முன்மாதிரியான கிராமம். இரண்டாவது, வறட்சியே இல்லாத கிராமமாக அதை மாற்றிய பஜன்தாஸ் விட்டல் பவார் என்ற மனிதர். ஒரு கட்டத்தில் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் 300- க்கும் மேற்பட்ட கிராமங்கள் அதிகமான வறட்சியால் தண்ணீருக்கு தவித்துக்கொண்டிருந்தன. குடிநீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்தி வந்தனர். அந்தக் கிராமங்களில் கட்பன்வாடி கிராமம் விவசாயம் பொய்த்து அதிக வறட்சிக்குப் பெயர் பெற்றதாக இருந்தது. ஆனால், இன்று 100 பண்ணைக் குட்டைகள், 27 வாய்க்கால்கள், 3 ஊற்றுக் குளங்கள் ஆகியவற்றுடன் வறட்சி இல்லாமல் தப்பித்து நிற்கிறது. அதற்குக் காரணம் கட்பன்வாடி கிராமத்தின் ஓய்வுபெற்ற ஆசிரியர் பஜன்தாஸ் விட்டல் பவார்.

அவரின் முயற்சியின் காரணமாக, பல விவசாயிகள் வறட்சியின் பாதிப்பிலிருந்து மீண்டிருக்கிறார்கள். இவருடைய மகன் விஜயராவ். அவருடைய தந்தை பணியாற்றும் பள்ளியிலேயே படிப்பைப் படித்தார். 2010-ம் ஆண்டு புனேயில் உள்ள கல்லூரியில் விவசாயப் படிப்பை முடித்தார். மகாராஷ்ட்ரா பொதுச்சேவை ஆணையத்தில் பணிபுரிய நினைத்தவருக்கு வேளாண்மைப் படிப்பு தடையாக இருந்தது. அதனால், மகாராஷ்ட்ராவில் உள்ள மகாத்மா புலே கிருஷி வித்யாபீத் (Mahatma Phule Krishi Vidyapeeth) யுனிவர்சிட்டியில் இரண்டு ஆண்டுகள் பட்டப்படிப்பை படித்தார். அப்போது நேர்முகத் தேர்விலும் கலந்து கொண்டார். இருந்தும் விஜயராவுக்கு வேலைக் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த நபர் சொந்த கிராமத்துக்குத் திரும்பினார்.

விவசாயம் - பசுமைக் குடில்

Pc – www.thebetterindia.com

அதன் பின்னர், பெட்ரோல் பங்கில் வேலையைத் தொடங்குகிறார். அதனால் அவர் வேளாண் படிப்பு வீணாகிவிட்டதாக நினைத்தார். தான் படித்த துறை மூலம் தன் கிராம மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவரை விவசாயம் பக்கம் ஈர்த்தது. ஆனால், அவர் பாரம்பர்ய பண்ணை அமைத்து விவசாயம் செய்ய விரும்பவில்லை. அதற்கான நிதியும் அவரிடம் இல்லை. அதனால் பசுமைக் குடில் அமைக்க முடிவெடுத்தார். பசுமைக் குடில் தொழில்நுட்பம் பாலி ஹவுஸ் எனவும் அழைக்கப்படுகிறது. அதுவரை விவசாயத்தில் பட்டம் பெற்றிருந்தாலும், நடைமுறையில் விவசாயத்தை அவர் பயன்படுத்தியதே இல்லை.

இதைப்பற்றி விஜயராவ் பேசும்போது, “எனது வகுப்பு முதல் மாணவர், விவசாயத்தின் பக்கம் செல்ல மாட்டேன். என் கால்களைக் கூட நிலத்தில் வைக்க மாட்டேன் என்று சொன்னார். ஆனால் அது ஒரு துரதிர்ஷ்டவசமானது என்றேன். ஆனால், அந்த மாணவன் விடவில்லை. நாம் கற்றுக்கொண்டதை அனைத்தையும் நடைமுறைப்படுத்தினால் கற்றுக்கொண்டவை அனைத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போதுதான் புதிய தலைமுறை விவசாயிகள் வெற்றிகரமாக விவசாயம் செய்ய முடியும்’’ என்கிறார். சொன்னதோடு நிறுத்தாமல் விஜயராவ் செய்தும் காட்டியிருக்கிறார்.

பசுமைக் குடில் விவசாயத்தில் மலர்கள், காய்கறிகள் ஆகியவற்றை விளைவிக்க முடியும். இது முற்றிலும் பாரம்பர்ய வேளாண்மையிலிருந்து வேறுபடும் ஒரு வழிமுறையாகும். திறந்த வெளியில் உள்ள பயிரானது கடுமையான குளிர் அல்லது கடுமையான வெயில் என இருக்கும் சூழ் நிலையைத் தாங்கிக்கொள்ளாது. ஆனால், பசுமைக் குடில் விவசாயத்தில் செயற்கை முறையில் அனைத்து சூழ்நிலைகளும் கொண்டுவரப்படுவதால், பயிர்களை எளிதாகக் கொண்டு வர முடியும். ஆரம்ப சூழலில் அதிகமான பணம் செலவானாலும், அது பயிர்களின் வாழ்க்கை சுழற்சியை விரிவுபடுத்தி, சிறந்த மகசூலைக் கொடுக்கிறது. மேலும், இவற்றில் நீர் செலவும் குறைவாகவே எடுத்துக்கொள்ளும்.

மிளகாய்

Pc – www.thebetterindia.com

பசுமைக் குடிலில் வெள்ளரி, மிளகாய், சுரைக்காய், தக்காளி, ஸ்ட்ராபெர்ரி, முட்டைக்கோஸ், கேரட், மிளகு, அலங்கார பூக்களான கார்னேஷன், ரோஜா ஆகியவற்றை பசுமைக் குடில் விவசாயத்தில் உற்பத்தி செய்ய முடியும்.

“புனே தோட்டக்கலைத் துறை அளித்த ஒரு வாரப் பயிற்சியில் கலந்துகொண்டேன். அதன் பின்னர் தேசிய தோட்டக்கலைத் துறையில் இருந்து ரூ.30,00,000 கடன் கேட்டு விண்ணப்பித்தேன். அதை ஏற்றுக்கொண்ட பின்னர், ஒரு ஏக்கர் நிலத்தில் பசுமைக் குடில் அமைக்க மொத்த பணத்தைக் கொடுத்தனர். அதைக்கொண்டு அமைத்த பசுமைக் குடில் குடைமிளகாய் விவசாயம் நல்ல வருமானத்தைக் கொடுத்தது. குடை மிளகாயைச் சிவப்பு மற்றும் மஞ்சள் ஆகிய இரண்டு வண்ணங்களில் வளர்த்தேன். முதல் அறுவடை கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது, கிலோ 35 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்பனையானது. முதல் வருமானம் லாபகரமானதாக இல்லை. ஆனால், இன்று கிலோ 170 ரூபாய் வரை விற்பனையாகிறது’’ என்று சொல்லும் விஜயராவ் புனே தவிர, மும்பை, டெல்லி ஆகிய நகரங்களுக்கும் ஏற்றுமதி செய்கிறார். கடந்த 10 மாதக் கணக்கின்படி இவர் 13 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டியிருக்கிறார்.

மேலும், இவரது பாலிஹவுஸில் அவரது வேலை விவசாயத்துறை அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்டது. அவருடைய விவசாயத்தைக் கண்ட அதிகாரிகள், அவருக்கு 18 லட்ச ரூபாய் மானியத்தைக் கொடுத்தனர். ஒரு வருட வாழ்க்கை சுழற்சியைக் கொண்ட தாவரங்களை நடவு செய்தால் சுமார் 40 டன் அளவு மகசூலைக் கொடுக்கும். இவர் கடந்த பிப்ரவரி முதல் டிசம்பர் வரை 30 டன் மகசூலை எடுத்திருக்கிறார். ஜனவரி, பிப்ரவரி மாதம் 10 டன் குடை மிளகாய் மகசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்.

விவசாயம்

Pc – www.thebetterindia.com

இவர் 50 சதவிகிதம் இயற்கை உரத்தையும், 50 சதவிகிதம் ரசாயன பூச்சிக் கொல்லிகளையும் பயன்படுத்தி குடிலை பராமரிக்கிறார். ரசாயனங்கள் அதிகமாக உபயோகப்படுத்தும்போது நன்மை செய்யும் பூச்சிகளை அழித்துவிடும். இயற்கை உரங்கள் மண்ணின் வளத்தை எப்போதும் சீராக வைத்திருக்கும். அதனால் சமநிலையைப் பராமரிப்பது மிக முக்கியமான ஒன்றாகக் கவனித்து வருகிறார்.

விவசாயிகளுக்கு விஜயராவ் வைக்கும் ஒரே கோரிக்கை, “நாங்கள் கடுமையான மற்றும் உறுதியற்ற காலநிலைகளால் பல ஏக்கர் பயிர்களை அழிப்பதைக் கண்டிருக்கிறோம். இதுபோன்ற ஒரு சூழ்நிலையில், பசுமைக் குடில் சாகுபடி என்பது உங்கள் பயிர்களுக்கு ஒரு பாதுகாப்பான தேர்வு மட்டுமல்ல, வருவாய் உத்தரவாதம் அளிக்கும் முறையும் ஆகும். பாரம்பர்ய விவசாயத்தோடு, சந்தையில் நுகர்வோர் தேவை என்ன என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். இந்த முறையில் பயிர்களை வளர்க்க உங்களுக்குத் தெரிந்த நடைமுறையில் விவசாயத்தைச் செய்யுங்கள். நீங்கள் குறைவில்லா லாபம் சம்பாதிப்பீர்கள்’’ என்கிறார்.

விஜயராவின் பாலிஹவுஸ் அந்த மாவட்டம் முழுவதும் விவசாயிகளுக்கு ஒரு மாதிரி பண்ணையாக விளங்குகிறது. பசுமைக் குடில் மாதிரியைப் புதுப்பிப்பதற்கான வழிகாட்டலும் தகவலும் பெறப் பல விவசாயிகள் அவரிடம் வருகிறார்கள்.

விஜயராவுடைய தந்தையைப் போலவே, தனது தோட்டத்தைப் பார்க்க வருகிற அனைவருக்கும் ஆலோசனைகளைக் கொடுத்து வருகிறார்.

நன்றி: பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *