40 சென்ட் நிலத்தில் நல்ல வருமானம் தரும் பந்தல் சாகுபடி!

“விவசாயம் செய்றது ரொம்பக் கஷ்டம்னு பலபேரு சொல்றாங்க. ஆனா, எங்களைப் பொறுத்தவரை விவசாயம் ரொம்ப சுலபமானது. அடிப்படையை சரியாகப் புரிஞ்சுகிட்டு, மண்ணோடு பேசி, பயிரோடு பழகி, இயற்கையை இம்சிக்காம இருந்தாலே போதும். விவசாயத்துல ஜெயிச்சிடலாம். இதுல நாம தேர்வு செய்ற பயிர், சாகுபடி முறைகளும் சரியாக இருக்கணும்ங்கிறது முக்கியம். இது எல்லாம் சரியா இருந்தா, எந்தத் தடைகளும் நம்மை நஷ்டப்படுத்த முடியாது. தினமும் 2,000 லிட்டர் தண்ணீர் மட்டுமே வெச்சு, நாற்பது சென்ட் இடத்துல, நல்லா சம்பாதிக்கிறோம்” நம்பிக்கை கொடுக்கும் விதமாகப் பேசுகிறார், திண்டுக்கல் மாவட்டம், தவசிமடைப் பகுதியைச் சேர்ந்த மருதமுத்து.

சம்பங்கிச் சாகுபடி மூலமாக, ‘பசுமை விகடன்’ வாசகர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்கள்தான் மருதமுத்து-வாசுகி தம்பதி. இயற்கை முறை சம்பங்கிச் சாகுபடியில் இவர்கள் கடைப்பிடித்த தொழில்நுட்பம் நல்ல மகசூலைக் கொடுத்ததால்… தமிழக அளவில் பல விவசாயிகள் இவர்களின் பண்ணையை நேரில் பார்த்து, இவர்கள் பின்பற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் சம்பங்கிச் சாகுபடியை மேற்கொண்டு வருகின்றனர். அப்படிச் சம்பங்கிச் சாகுபடியில் வெற்றி பெற்றவர்களின் அனுபவங்களையும் பசுமை விகடன் இதழில் அவ்வப்போது பதிவு செய்து வருகிறோம்.

இந்நிலையில் கடும் வறட்சி காரணமாகச் சம்பங்கிச் சாகுபடிப் பரப்பைக் குறைத்துக் கொண்டார், மருதமுத்து. கடுமையான தொடர் வறட்சி காரணமாக, ஒரு கட்டத்தில் தான் நேசித்துச் செய்த சம்பங்கி விவசாயத்தைக் கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆனாலும், மனம் தளராமல் கிடைக்கும் தண்ணீருக்கு ஏற்ற மாற்றுப் பயிரைத் தேர்ந்தெடுத்து, அதிலும் தனது வெற்றி முத்திரையைப் பதித்து வருகிறார், மருதமுத்து.

“எங்ககிட்ட நல்ல வளமான மண் இருந்துச்சு. விவசாயம் செய்யத் தேவையான அடிப்படை அறிவை இந்தப் பத்து வருஷங்கள்ல நன்றாகவே கத்துகிட்டோம். ஆனாலும், தண்ணிதான் பிரச்னையா இருந்துச்சு.
அதுக்காக விவசாயத்தை விட்டுட்டு சும்மா உட்கார முடியாதுல்ல. அதனால, மாற்றுப்பயிர் சாகுபடி பத்தி யோசிச்சு, பந்தல் அமைச்சுக் காய்கறிகளைச் சாகுபடி பண்ணலாம்னு முடிவு செஞ்சோம். அதுக்காகப் பல பந்தல் சாகுபடி விவசாயிகளைப் பார்த்துட்டு வந்தோம். இயற்கை விவசாயத்துல எங்களுக்குக் கிடைச்ச அனுபவம், சில பந்தல் விவசாயிகளோட தொழில்நுட்பம் எல்லாத்தையும் வெச்சுப் பந்தல் அமைச்சு காய்கறிகளைச் சாகுபடி செய்ய ஆரம்பிச்சோம்.

நாங்க பந்தல் சாகுபடியில இறங்குறதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு. சம்பங்கிச் சாகுபடியில ஈடுபட்டா அதிகாலை மூணு மணிக்கு எழுந்திரிச்சுப் பூ பறிக்க வேண்டியிருக்கும். நல்ல வருமானம் கிடைக்கிற சாகுபடியா இருந்தாலும், காலையில எழுந்திரிக்க முடியாத சில வயசான விவசாயிகளால சம்பங்கிச் சாகுபடி செய்ய முடியலை. அந்த மாதிரி சிலர் எங்ககிட்ட இயற்கை விவசாயத்துல வேற என்ன பயிர் செய்யலாம்னு யோசனை கேட்டுருக்காங்க. அந்த மாதிரி விவசாயிகளுக்குப் பந்தல் சாகுபடி கைகொடுக்கும்னு தெரிய வந்துச்சு. ஆனா, நாம செஞ்சு பார்க்காம யாருக்கும் யோசனை சொல்லக் கூடாதுங்கிறதுல உறுதியா இருந்தோம்.

நாங்க நிறைய விவசாயிகளுக்குச் சம்பங்கிச் சாகுபடியைச் சொல்லிக் கொடுத்ததுக்காக, போன வருஷம் ‘அவள் விகடன்’ பத்திரிகை என் மனைவி வாசுகிக்குச் ‘சிறந்த பெண் விவசாயி’ விருது கொடுத்தது. விவசாயியா நாங்க நெகிழ்ந்து போன நிகழ்ச்சி அது. ‘விகடன்’ எங்கமேல வெச்சுருக்குற நம்பிக்கையைக் காப்பாத்த இன்னும் நிறைய விவசாயிகளுக்குப் புதுப்புதுச் சாகுபடி முறைகளைச் சொல்லிக் கொடுக்கணும்னு எங்களுக்கு ஆசை. ஆனா, அதை நாம செஞ்சுப் பார்த்து நல்லா இருந்தாத்தான் அடுத்தவங்களுக்குச் சொல்லிக் கொடுக்கணும்னு நினைச்சு, சோதனை முயற்சியா நம்ம தோட்டத்துலேயே பந்தல் அமைச்சுடுவோம்னு முடிவு பண்ணிட்டோம்.

ஆனா, தண்ணீர்ப் பற்றாக்குறை ஒரு கேள்விக்குறியா இருந்துச்சு. அதனால, கிடைக்கிற தண்ணீரை வெச்சுக் குறைந்த பரப்புல விதைச்சு நல்ல மகசூல் எடுத்துக் காட்டணும்னு முடிவு செஞ்சோம். அந்தச் சமயத்துல எங்களுக்குத் தினமும் 2,000 லிட்டர் தண்ணிதான் போர்வெல்ல இருந்து கிடைச்சது. அந்தத் தண்ணியை வெச்சு, 40 சென்ட் நிலத்துல பந்தல் விவசாயம் செய்யலாம்னு முடிவு செஞ்சோம்.

நாங்க பந்தல் விவசாயம் ஆரம்பிச்ச சமயம் கோடைக்காலம். எங்க பகுதி விவசாயிங்க, நண்பர்கள் பலரும், ‘இது தவறான முடிவு. தெரியாத விவசாயத்துல இறங்கி கையைச் சுட்டுக்காதீங்க’னு சொன்னாங்க. ஆனா நாங்க, ‘இயற்கையை முழுசா நம்பினா, இயற்கை நம்மைக் கைவிடாது’னு தைரியமா இறங்கிட்டோம்” என்ற மருதமுத்துவைத் தொடர்ந்து பேச ஆரம்பித்தார், வாசுகி.

“எங்க ஊர்ப்பக்கமும் சில விவசாயிகள் பந்தல் அமைச்சு காய்கறிச் சாகுபடி பண்றாங்க. அவங்களையெல்லாம் போய்ப்பார்த்து அவங்களோட அனுபவத்துல அவங்க செஞ்ச சின்னச்சின்ன தவறுகளைத் தெரிஞ்சுக்கிட்டோம். அந்த மாதிரி தவறுகள் வரக்கூடாதுங்கிறதுல கவனமா இருந்தோம். எல்லோரும் பயன்படுத்துற மாதிரி இல்லாம நல்ல தடிமனான, பலமான கல்தூண்களைத் தான் நாங்க பயன்படுத்திருக்கோம். வழக்கமான கல்தூண்களைவிட ஒரு ஜோடிக்கு 200 ரூபாய் அதிகமாகக் கொடுத்து வாங்கியிருக்கோம். அதனாலதான் நல்லா உறுதியா நிக்குது. அதேபோலப் பந்தல் அமைக்கிறதுக்கும், வழக்கத்துல இருக்குறதைவிடத் தடிமனான கம்பிகளைப் பயன்படுத்துனோம். அதனாலதான் கஜா புயல் தாக்குனப்போ எங்க பந்தலுக்குச் சின்னச் சேதம்கூட இல்லை.

வழக்கமா பந்தல் சாகுபடியில வாய்க்கால் எடுத்து வரிசையா விதைகளை நடுவாங்க. ஆனா, நாங்க பழைய முறையில வீட்டுப் புறக்கடையில குழியெடுத்து விதைக்கிற முறையைக் கடைப்பிடிச்சுருக்கோம். தண்ணீரை மிச்சப்படுத்துறதுக்காகச் சொட்டுநீர்ப் பாசனம் அமைச்சுருக்கோம். பந்தல்ல முதன்முதலா புடலையைத்தான் சாகுபடி செஞ்சோம். அதுல அனுபவபூர்வமா சில நுட்பங்களைக் கத்துகிட்டோம். புடலை மகசூல் முடிஞ்சதும் பீர்க்கன் போட்டிருக்கோம். இப்போ பீர்க்கன் அறுவடையில இருக்கு. புடலைச் சாகுபடியில செஞ்ச சின்னச்சின்ன தவறுகளைத் திருத்திக்கிட்டதால பீர்க்கன்ல எதிர்பார்த்ததைவிட நல்ல மகசூல் கிடைக்குது. சம்பங்கி விவசாயத்துக்கு ஆள்கள் நிறைய பேர் தேவைப்பட்டாங்க. ஆனா, பந்தல் விவசாயம் அப்படியில்லை. நாங்க ரெண்டு பேர் மட்டுமே எல்லா வேலைகளையும் பார்த்துக்கிறோம்” என்றார், நம்பிக்கையுடன்.

தொடர்ந்து பேசிய மருதமுத்து, “கொடி படர்ந்தவுடனே அதைப் பந்தல்ல ஏத்திவிடுறதுக்காகப் பிளாஸ்டிக் கயிறு அல்லது நூலைப் பயன்படுத்துவாங்க. நாங்க வாழைநாரைத்தான் பயன்படுத்துறோம். இயற்கை முறையில சாகுபடி செய்றதால பூச்சி, நோய் பத்தி அதிகமா அலட்டிக்கிறதில்லை. ஒருமுறை இலைகள்ல அதிகப் புழுக்கள் தென்பட்டுச்சு. ‘என்ன செய்யலாம்னு யோசிச்சுக்கிட்டே இருந்தப்போ, ஏராளமான காக்காய்கள், பந்தல்ல உக்காந்து, புழுக்களைச் சாப்பிட்டுட்டு இருந்துச்சு. அதனால, இயற்கை கையிலயே விட்டுட்டோம்.

இயற்கை முறையில விளைஞ்ச எங்க சம்பங்கி, மார்க்கெட் போனா நல்ல வரவேற்பு இருக்கும். உடனே வித்துடும். அதே மாதிரி புடலும் உடனே விற்பனையாகிடுச்சு. இப்போ பீர்க்கனும் அப்படித்தான், மார்க்கெட் கொண்டு போனவுடனே விற்பனையாகிடுது. காய் ஒரு வாரம் ஆனாலும் வாடாம இருக்கு. நல்ல ருசியாவும் இருக்கு” என்றவர் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

“புடல்ல விதைத்த 55-ம் நாளுக்கு மேல காய்கள் கிடைக்க ஆரம்பிச்சது. ஒருநாள் விட்டு ஒருநாள்னு அறுவடை செஞ்சோம். அறுவடை ஆரம்பிச்சதுல இருந்து 60 நாள்கள் வரை நல்ல மகசூல் கிடைச்சது. அதுக்கப்புறம் மகசூல் படிப்படியாகக் குறைய ஆரம்பிச்சது. மொத்தம் 8,148 கிலோ புடல் அறுவடை செஞ்சுருக்கோம். குறைஞ்சபட்சமா கிலோ 8 ரூபாய்னும், அதிகபட்சமா கிலோ 18 ரூபாய்னும் விற்பனை செஞ்சுருக்கோம்.

அந்த வகையில 8,148 கிலோ புடல் விற்பனை செஞ்சதுல 90,344 ரூபாய் வருமானம் கிடைச்சுருக்கு. இடுபொருள், போக்குவரத்துனு எல்லாச்செலவும் சேர்த்து அதிகபட்சம் 20,000 ரூபாய்ச் செலவாகும். அதுபோக மீதி 70,344 ரூபாய் லாபம். பந்தல் பல வருஷங்களுக்கு நின்னு பலன் கொடுக்கும்கிறதால, அதைச் செலவு கணக்குல சேர்க்கலை” என்றார், மருதமுத்து.

நிறைவாகப் பேசிய மருதமுத்து-வாசுகி தம்பதி, “சம்பங்கி, நல்ல வளமான தண்ணி வசதியுள்ளவங்களுக்கு அதிக லாபம் கொடுக்கக்கூடிய பயிர். தண்ணீர் வசதி குறைவா இருக்குற விவசாயிகளுக்குப் பந்தல் சாகுபடி ஏத்தது. ‘ஒரு ஏக்கர், மாதம் ஒரு லட்சம்’ங்கிறதுதான் எங்க லட்சியம்.

சம்பங்கியில ஒரு ஏக்கர்ல இருந்து மாசம் 80 ஆயிரம் ரூபாய் வரைக்கும் எடுக்க ஆரம்பிச்ச சமயத்துலதான் தண்ணி பத்தாக் குறையாகிடுச்சு. இப்போ பந்தல் சாகுபடியில 40 சென்ட் நிலத்துல மூணு மாசத்துல 70,000 ரூபாய் எடுத்துருக்கோம். சுழற்சி முறையில, ஒரு ஏக்கர் பரப்புல பந்தல் சாகுபடி செஞ்சு முறையாகப் பராமரிச்சா, மாசம் ஒரு லட்சம் ரூபாய் நிச்சயம் சம்பாதிக்க முடியும்னு நம்பிக்கை இருக்கு. சீக்கிரம் அந்த இலக்கை அடைஞ்சிடுவோம்” என்று கண்களில் நம்பிக்கை மின்ன விடைகொடுத்தனர்.

பந்தல் சாகுபடியில் நாங்கள் கற்ற பாடம்

‘‘திண்டுக்கல் சந்தையில நீளப்புடலுக்குத் தான் நல்ல விலை கிடைக்கும்னு எல்லோரும் சொன்னதால, அந்த விதையைத்தான் கேட்டு வாங்குனோம். ஆனா, எங்களுக்கு வந்த விதையில குறும்புடல் விதைகளும் பாதி அளவுக்குக் கலந்து வந்துடுச்சு. பராமரிப்பு முறை ரெண்டுக்கும் ஒண்ணுதான். ஆனா, நீளப்புடலையை அறுவடை பண்றது, கையாள்றது, மார்கெட்டுக்குக் கொண்டு போறது எல்லாமே கொஞ்சம் சிரமமான விஷயம். காய்க்கும்போதே காய் நேரா இருக்குறதுக்காகக் கல்லைக் கட்டிவிடணும். காய் உடைஞ்சுட்டா விலை கிடைக்காது. ஆனா, வீடுகள்ல பெரும்பாலும் நீளப்புடலையைத்தான் விரும்பி வாங்குறாங்க. மார்க்கெட்டுக்குக் கொண்டுபோனதும் விற்பனையாகிடுது.

அதே சமயத்துல விலை கொஞ்சம் குறைவாகக் கிடைச்சாலும் குறும்புடல் சாகுபடி ரொம்ப எளிமையானது. அறுவடை செய்றது, கையாள்றது எல்லாமே சுலபம். போக்குவரத்தும் சுலபமா இருக்கு. சாகுபடிக்கும் அதிக ஆள் தேவைப்படாது. சந்தைக்கு வர்ற நீளப்புடல் எல்லாம் விற்பனையானதும், குறும்புடல் சாகுபடி சூடுபிடிக்க ஆரம்பிச்சுடும்.

எங்களுக்குத் திண்டுக்கல்ல இருக்குற காந்தி மார்க்கெட்தான் பக்கம். அதனால, அந்த மார்கெட்டுக்குத்தான் காய்களை அனுப்பிட்டுருக்கோம். இந்த மார்க்கெட்ல நீளப்புடலைக்குதான் சந்தை வாய்ப்பு அதிகமா இருக்கு. அதே நேரத்துல ஒட்டன்சத்திரம், கோயம்புத்தூர், பொள்ளாச்சி மார்க்கெட்கள்ல குறும்புடலுக்கு நல்ல சந்தை வாய்ப்பு இருக்கு. ஆனா, எங்களுக்கு அந்த ஊர்களெல்லாம் தூரம்கிறதால திண்டுக்கல் மார்கெட்டுக்குக் கொடுத்துட்டுருக்கோம். காய்கறிச் சாகுபடியில இறங்குறப்போ எந்தச் சந்தையில கொடுக்கப்போறோம், அங்க என்ன தேவை இருக்குங்குறதை முதல்ல தெரிஞ்சுக்கணும்.

நாங்க முதன்முதலா மார்க்கெட்டுக்குக் காய்கள கொண்டு போறப்போ தெரிஞ்சவங்ககிட்ட விசாரிச்சு ஒரு கடையில கொடுத்தோம். ஆறு கட்டுக் காய்க் கொண்டு போறப்போ… உடனே ரெண்டு கட்டை மட்டும் நல்ல விலை கொடுத்து எடுத்துக்குவாங்க. அதுக்கப்புறம் அவங்களுக்கு அடுத்த ஆர்டர் வர்ற வரைக்கும் காயை வெச்சுக்கிட்டுக் காத்திருக்க வேண்டியிருந்துச்சு.

நேரம் ஆக ஆகக் காய்க்கு விலையும் குறைஞ்சுடும். அதுக்கப்புறம் நாங்களே ரெண்டு மூணு கடைகளுக்கு ஒரே நேரத்துல கொடுக்க முடிவு செஞ்சோம். அதனால, ஒரே நேரத்துல அவ்வளவையும் விற்பனை செய்ய முடிஞ்சது. விலையும் நல்லா கிடைச்சது. எப்பவும் ஒரே வியாபாரியை நம்பி இருக்கக்கூடாதுனும் தெரிஞ்சுக்கிட்டோம்.

பந்தல் காய்கறிகளை எல்லாப் பட்டங்கள்லயும் சாகுபடி செய்யலாம்கிறதால, நாங்க கோடைக்காலத்துல விதைச்சோம். நாங்க அறுவடை பண்றதுக்கு முன்னாடி ஒரு கிலோ புடல் 20 ரூபாய்ல இருந்து 35 ரூபாய் வரைக்கும் விற்பனையாகிருக்கு. ஆனா, எங்களுக்கு அதிகபட்ச விலையா 18 ரூபாய்தான் கிடைச்சது. அதே மாதிரி எங்களுக்கு அறுவடை முடிஞ்சபிறகு அதாவது இப்போ ஓரளவுக்கு நல்ல விலை கிடைச்சுட்டுருக்கு. அதனால, சந்தையில விலை கிடைக்கிற சமயங்களைக் கணக்குப் பண்ணி சுழற்சி முறையில காய்கறிகளைச் சாகுபடி செய்யணும். இதெல்லாம் காய்கறிச் சாகுபடியில நாங்க கத்துக்கிட்ட பாடம்” என்றனர், மருதமுத்து-வாசுகி தம்பதி.

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

இயற்கை முறையில் புடலைச் சாகுபடி செய்யும் முறை குறித்து மருதமுத்து சொன்ன தகவல்கள் பாடமாக இங்கே…

தேர்வு செய்த நிலத்தை நன்கு உழுது, பத்தடி இடைவெளியில் தூண்களை நடவேண்டும். வெளிப்பகுதியில் கல்தூண்களையும் உள்பகுதியில் கல் மூங்கிலையும் பயன்படுத்தலாம். முழுவதும் கல்தூண்களைப் பயன்படுத்தினால் அதிகச் செலவு பிடிக்கும். பிறகு கம்பிகளைக் குறுக்கும் நெடுக்குமாகக் கட்டி தூண்களை இணைக்க வேண்டும். ஒவ்வொரு தூணிலிருந்தும் ஓர் அடி இடைவெளி விட்டு… இரண்டடிக்கு இரண்டடி சதுரம், ஓர் அடி ஆழம் இருக்குமாறு குழிகள் எடுக்க வேண்டும். ஒவ்வொரு குழியிலும் முக்கால் பாகம் அளவுக்குத் தொழுவுரத்தை நிரப்பி, அரைக்கிலோ அளவு வேப்பம்பிண்ணாக்கை இட வேண்டும். மீதிப்பாகத்தை மேல்மண் கொண்டு நிரப்பி ஒரு வாரம் வரை பாசனம் செய்துவர வேண்டும். பிறகு ஒவ்வொரு குழியின் நான்கு மூலைகளிலும் ஒவ்வொரு விதை எனக் குழிக்கு நான்கு விதைகள் வீதம் விதைக்க வேண்டும். மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்துப் பாசனம் செய்தால் போதுமானது.

விதைத்த 7-ம் நாளிலிருந்து 15 நாள்களுக்கு ஒருமுறை ஏக்கருக்கு 400 லிட்டர் என்ற கணக்கில் அமுதக்கரைசலைப் பாசன நீருடன் கலந்துவிட வேண்டும். விதைத்த 15-ம் நாளிலிருந்து 15 நாள்களுக்கு ஒருமுறை ஏக்கருக்கு 400 லிட்டர் என்ற கணக்கில் பிண்ணாக்குக் கரைசலைப் பாசன நீருடன் கலந்துவிட வேண்டும் (400 லிட்டர் தண்ணீரில் 10 கிலோ கடலைப்பிண்ணாக்கு, 4 கிலோ வேப்பம்பிண்ணாக்கு ஆகியவற்றை ஊறவைத்த கரைசல்).

நடவு செய்த ஒரு வாரத்துக்குள் முளைவிட்டு இரண்டு இலைகள் பெரிதான பிறகு, கொடி வீசத் தொடங்கும். அப்போது கொடியின் முனைப்பகுதியில் உள்ள இலைகளுக்குக் கீழ் கயிறு கொண்டு கட்டி, கயிற்றின் மற்றொரு முனையைப் பந்தலில் இணைத்து விடவேண்டும். கயிற்றுக்குப் பதிலாக வாழைநாரையும் பயன்படுத்தலாம். கொடி, பந்தலை அடைந்தவுடன், சரியாகப் படரும் வகையில் கொடிகளை எடுத்துக் கம்பியில் விடவேண்டும். ஐம்பது முதல் ஐம்பத்தைந்து நாள்களில் காய் அறுவடைக்கு வந்துவிடும். நீளப்புடலையாக இருந்தால், காய் இறங்கும்போது, காயின் நுனியில் பழைய துணியில் கல்லைக் கட்டித் தொங்க விடவேண்டும்.

சுழற்சி முறையில் தினசரி அல்லது ஒருநாள் விட்டு ஒருநாளோ அறுவடை செய்யலாம். அறுவடைக்கு வந்ததிலிருந்து 80 நாள்கள் வரை மகசூல் எடுக்கலாம். பூச்சித்தாக்குதல் இருக்கக்கூடாது என்று நினைத்தால், வருமுன் காக்கும் விதமாக, குறிப்பிட்ட கால இடைவெளியில் 5% வேப்பங்கொட்டைக் கரைசலைத் தெளித்து வரலாம்.

தொடர்புக்கு மருதமுத்து, செல்போன்: 9787642613

நன்றி: விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *