பழைய மோட்டார் பாகங்களில் புதிய கருவி!

விவசாயப் பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காத நிலையில், செம்பனார்கோயில் விவசாயி பழைய மோட்டார் பாகங்களை வைத்து புதிய கருவியை வடிவமைத்து அசத்தியிருக்கிறார்.

கொரோனா ஊரடங்கால் விவசாயப் பணிகளுக்குத் தேவையான ஆட்கள் கிடைக்கவில்லை. இதனால் மனம் தளராமல் பழைய மோட்டார் பாகங்களைக் கொண்டு ஒரு மினி டிராக்டரை உருவாக்கியிருக்கிறார் நம்பிராஜ் என்ற விவசாயி. அவரின் புதிய கண்டுபிடிப்பு விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

 நம்பிராஜன்

நம்பிராஜன்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயிலை அடுத்த கீழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நம்பிராஜ். ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்த டூவீலர் மெக்கானிக். இவர் குடும்பத்துக்கு சொந்தமாக 5 ஏக்கர் நிலம் இருக்கிறது. இதில், ஒரு ஏக்கர் மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டுள்ளார். இரண்டடி இடைவெளியில் உள்ள செடிகளுக்குக் கலை வெட்டவும், மண் அணைக்கவும் கூலி ஆட்கள் தேவைப்படுகிறார்கள். கொரோனா ஊரடங்கால் போதுமான ஆட்கள் கிடைக்கவில்லை. இனி ஆட்களை நம்பாமல் இப்பணிகளைச் செய்வதற்கு ஒரு புதிய கருவியை செய்ய முடிவெடுத்தார். பழைய டூவீலர் பொருள்களைக் கொண்டு ஒரு மினி டாக்டரை ஒரே மாதத்தில் உருவாக்கி சாதனைப் படைத்திருக்கிறார்.

இதுபற்றி நம்பிராஜனிடம் பேசினோம். “ஒரு ஏக்கர் நிலத்தில் களை வெட்டுவதற்கு 18 ஆட்களுக்கு கூலி தர வேண்டியுள்ளது. இதற்கு சுமார் ரூ.4,000 செலவாகும். அதுபோல் செடிகளுக்கு மண் அணைப்பதற்கும் அதே செலவாகும். எனவே இரண்டடி இடைவெளியில் உட்புகுந்து உழவு செய்யவும், களை வெட்டவும், மண் அணைக்கவும் ஒரு கருவி செய்ய முடிவு செய்தேன். இதற்கு பழைய செட்டாக் எஞ்சின், புல்லட் செயின் பிராக்கெட், வீல் இவற்றை வைத்து ஒரு மினி டிராக்டர் உருவாக்கியுள்ளேன்.

பழைய மோட்டார் பாகங்களை வைத்து புதிய கருவி

பழைய மோட்டார் பாகங்களை வைத்து புதிய கருவி

இதற்கு ரூ.15,000-ம்தான் செலவானது. ஒரு ஏக்கர் நிலத்தில் சுமார் 3 லிட்டர் பெட்ரோல் செலவில் 4 மணி நேரத்தில் களை வெட்டலாம். மண் அணைக்கலாம். உழவு செய்யலாம். எனக்கு இப்போது ஆட்கள் தேவையில்லை. செலவு மிகவும் மிச்சம். இதைப் பார்த்த பல விவசாயிகள், “இதுபோல் எங்களுக்கும் தயாரித்துக் கொடுங்கள். எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் தருகிறோம்” என்று கேட்கிறார்கள். ஊரடங்கு முடிந்தவுடன் அனைத்து விவசாயிகளுக்கும் பயன்பெறும் வகையில் செய்து கொடுக்க எண்ணியுள்ளேன்” என்றார்.

நன்றி: பசுமை விகடன்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “பழைய மோட்டார் பாகங்களில் புதிய கருவி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *