உணவு என்பது உலகில் உள்ள எல்லோருக்குமான உரிமை. அப்படியான உணவை பற்றி சமீபத்தில் எழும் சர்ச்சைகள் அதிர்ச்சியை கிளப்பி வருகின்றன. குறிப்பாக பால், அரிசி போன்ற உணவு பொருள்களில் கலப்படம் செய்யப்படுவது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
கடந்த மாதம் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பாலில் ரசாயனம் கலக்கப்படுவதாக குற்றசாட்டை முன்வைத்தார். இது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தனியார் பால் நிறுவனங்கள் பால் கெட்டுப்போகாமல் இருக்க ஹைட்ரஜன் ஃபெராக்ஸைடு, வெண்மை நிறத்துக்காக காஸ்டிக் சோடா உள்ளிட்ட ரசாயனங்களை பாலில் கலப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார். குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் என சந்தையில் மிகப்பெரிய நுகர்வு பொருளாக பால் உள்ளது. உலகப் பால் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு மட்டும் 18.5%. எனவே பால் வர்த்தகம், பெரிய அளவிலான வணிக அரசியலாக மாறியுள்ளது. இந்நிலையில் பாலில் கலப்படம் என அந்தத் துறை சார்ந்த அமைச்சரே புகார் கூறுவது வேடிக்கையாக உள்ளது. மேலும், பால் நிறுவனங்கள் தரச் சான்றிதழ் பெறுவதில், மேல்மட்டம்வரையில் ஊழல் நடைபெறுவதாக ராஜேந்திர பாலாஜி குறிப்பிட்டுள்ளார். அமைச்சரே புகார் தெரிவித்த பின்னும், இதுநாள் வரையில் எந்த நிறுவனத்தின் மீதும், அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இதனிடையே நேற்று மதுரையில் 108 பால் மாதிரிகளைக் கொண்டு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் ஒரு பாலில் சோப்பு ஆயில் கலக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது பொதுமக்களிடம் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது ஒரு புறமிருக்க, பிளாஸ்டிக் அரிசி குறித்த செய்திகள் மக்களை மேலும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்தியாவில் அநேக மக்களின் உணவாக அரிசி உள்ளது. குறிப்பாக தென் மாநிலங்களில், அரிசியின் தேவை அதிகம். இந்த சூழலைப் பயன்படுத்திக் கொண்டு மேற்கு வங்கம், கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பிளாஸ்டிக் அரிசியை சிலர் புழக்கத்தில் விட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. உணவகங்களிலும் பிளாஸ்டிக் அரிசி பயன்படுத்தப்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டது. ‘பாலில் கலப்படம்’ என்ற குற்றசாட்டுக்கு இடையே, பிளாஸ்டிக் அரிசி பீதி தமிழகத்தையும் எட்டிப் பார்க்க தொடங்கியிருக்கிறது. சமூக வலைதளங்களில் இது குறித்த பதிவுகள் கடந்த சில தினங்களில் அதிகளவில் பகிரப்பட்டது. இதையடுத்து தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், ‘தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி என்ற பேச்சுக்கே இடமில்லை’ என நேற்று பேட்டியளித்தார். சீனாவில் இருந்து உருவாக்கப்பட்டு, உள்நாட்டு அரிசி வகைகளில் இந்த பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ‘3 கப் பிளாஸ்டிக் அரிசியை உண்பது, முழு பிளாஸ்டிக் பை ஒன்றை உண்பதற்கு சமம்’ என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
விவசாயத்தின் வீழ்ச்சிக்குப் பின்னால், திரைமறைவில் மேற்கொள்ளப்படும் மோசடிதான் இந்த உணவு கலப்படம். இந்தியாவில் ஒரு மனிதனின் சராசரி உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் அளவில் வேளாண்மை இல்லை என்பது நாடறிந்த ஒன்று. கடன் தொல்லை, மழை இல்லை என பல்வேறு காரணங்களால் விவசாயம் வீழ்ச்சியடைந்து வருகிறது. அதனால் போதுமான உற்பத்தியை உள்நாட்டில் செய்யமுடியவில்லை. அந்த இடத்தை நிரப்பவே பிளாஸ்டிக் அரிசி களமிறக்கப்படுகிறது. பிளாஸ்டிக் அரிசி மட்டுமின்றி, பிளாஸ்டிக் முட்டை, பிளாஸ்டிக் சர்க்கரை என மக்களின் நுகர்வுத் தேவைக்கு ஏற்ப கலப்பட உணவுகள் அதிகரித்து வருகின்றன. பிளாஸ்டிக் முட்டைகள் குறித்து கோழிப் பண்ணை உரிமையாளர் ஒருவர் கூறுகையில், ‘நாட்டுக் கோழிகளைவிட பிராய்லர் கோழிகளை வேகமாக வளர்த்து வருமானம் ஈட்டலாம் என நம்பவைக்கப்பட்டுத்தான், இந்தியாவில் பிராய்லர் கோழிகள் விற்பனை காலூன்றியது. இப்போது இயற்கை முறையில் முட்டைகளைத் தயார் செய்ய ஆகும் செலவைவிட, பிளாஸ்டிக் முட்டைகளை தயாரிக்க ஆகும் செலவு குறைவு என்று கூறிக் கொண்டு, இந்திய சந்தையில் பிளாஸ்டிக் முட்டைகளை நுழைக்கப் பார்க்கிறார்கள், சில பேராசைப் பிடித்தவர்கள்’ எனக் கொதிக்கிறார்.
இதனிடையே எவ்வித மறைவுமின்றி செய்யப்படும் மற்றொரு உணவு மோசடிதான், மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் மூலம் உருவாகும் உணவுப் பொருள்கள். கடந்த மே மாதம், டி.எச்.எம் 11 என்ற மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை பயிரிடுவதற்கு ஒப்புதல் அளித்தது மத்திய அரசின் கீழ் செயல்பட்டுவரும் ‘மரபணு மாற்றுப் பயிர்களுக்கான அனுமதியளிக்கும் குழு’. இதற்கான உரிமையை (பேட்டண்ட்) வைத்திருக்கும் ‘பேயர்’ என்ற பன்னாட்டு நிறுவனத்திடமும் ஒப்பந்தம் போடப்பட்டது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் முன்வைக்கப்பட்டன.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களால், பாரம்பர்ய வகைகள் சிதைந்துவிடும் என அரசியல் கட்சித் தலைவர்கள் எச்சரித்தனர். இதனால் பல பன்னாட்டு நிறுவனங்கள், இந்திய சந்தைக்குள் ஊடுருவ வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், மத்திய பா.ஜ.க அரசு இதுவரை இந்த விவகாரத்தில் வாய் திறக்கவில்லை. தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இப்போது இயற்கை விவசாயம் குறித்துப் பேசத் தொடங்கியுள்ளனர். இளைஞர்கள் இயற்கை விவசாயத்தில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
“இந்தியாவின் பெரும்பாலான மக்கள் சர்க்கரைக் குறைபாடு, தைராய்டு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். காரணம், இங்கு சரியான உணவுக் கொள்கை கட்டமைக்கப்படவில்லை. மக்களின் அத்தியாவசியத் தேவைகள் மீது அக்கறை காட்டாமல், ஆடம்பரங்களைக் கட்டமைப்பது நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படப் போவதில்லை. மேகி நூடுல்ஸ் தடையிலும் மாட்டிறைச்சித் தடையிலும் மத்திய அரசு காட்டிய முனைப்பை, உணவு கலப்பட விவகாரத்தில் காண்பிக்கத் தவறுவது ஏனோ? மேலும் 5-ல் ஒரு பங்கு உணவு பொருள்களில் கலப்படம் செய்யப்படுவதாக 2015 ஆம் ஆண்டு அறிவித்த ‘தேசிய உணவு தர நிர்ணய ஆணையம்’ இப்போது எழும் கலப்படம் குறித்த குற்றசாட்டுகளில் மௌனம் காத்து வருகிறது.
ஆனால் விவசாயத்தை வளர்க்கத் தவறிவிட்டு, கலப்பட உணவுகளை கட்டுப்படத்தாமல் இருந்தால், நாட்டின் சுகாதாரமே சீர்குலைந்துவிடும்” என ஆதங்கப்படுகின்றனர் இயற்கை விவசாயிகள்.
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்